Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
தெரிவுக்குழு அறிக்கையின் பின்பே அரசியலமைப்பு பேரவை நியமனம்
[19 - March - 2008] [Font Size - A - A - A]
* ஜனாதிபதி தீர்மானம்; பிரதமர் சபையில் அறிவிப்பு

டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவை இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமையும் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதுடன், 17 ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்து சிபார்சுகளை முன்வைக்கவென நியமிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க முடியாதென்பதே ஜனாதிபதியின் முடிவு என்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடிய வேளை, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவான ஜோசப் மைக்கல் பெரேரா 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எழுப்பிய கேள்வியையடுத்தே இந்த சர்ச்சை ஏற்பட்டது.

பிரதமர்

ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க விளக்கமளிக்கையில்;

"2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதலாவது தடவையாக அரசியலமைப்பு சபை நியமிக்கப்பட்டதுடன், 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதியுடன் அதன் ஆயுட்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து 2 ஆவது முறையாக அரசியலமைப்பு சபையை நியமிக்க வேண்டி ஏற்பட்டது.

இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது 10 ஆவது உறுப்பினரை நியமிப்பது தொடர்பாக சிக்கல் ஏற்ப்பட்டது. எனினும், அப்போதிருந்த பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இருவரினதும் உரிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அரசிலிருந்து விலகி எதிரணி வரிசையில் அமர்ந்து கொண்ட ஜே.வி.பி.யினர் தங்களது கட்சியில 38 உறுப்பினர்கள் இருப்பதால் 10 ஆவது உறுப்பினரை நியமிக்கும் உரிமை தங்களுக்குரியது என்றனர்.

எனவே, இந்தப் பெயர் பிரேரிக்கப்படாமையால் ஆயுட்காலம் முடிவடையும் வரை அடுத்த அரசியலமைப்பு சபையை நியமிக்க முடியாமல் போனது.

எனவே, அரசியலமைப்பு சபை ரத்தானதுடன், அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ சிபார்சுகளை முன்வைக்கவோ முடியாமல் போனது. இதன் பிரதிபலனாக பல நெருக்கடிகள் ஏற்பட்டன.

இவ்வாறான நிலைமையில், அரச நிர்வாகம் முற்றாக முடங்கிப் போவதை தவிர்த்துக் கொள்வதற்காக அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு இதில் தலையிட வேண்டி ஏற்பட்டது.

இதேநேரம், அரசியலமைப்பு சபைக்கான 10 ஆவது உறுப்பினரை நியமிக்கும் பிரச்சினை 2 வருடமாக இழுபறி நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கிடையே 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தவென 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதியே இந்த தெரிவுக்குழு இறுதியாகக் கூடியது.

எவ்வாறிருப்பினும் பொது இணக்கப்பாடொன்றை எட்ட முடிந்திருக்கவில்லை. கருஜெயசூரிய தலைமையிலான அணியினர் அரசுடன் இணைந்து கொண்டமையால் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவுக் குழுவில் கலந்து கொள்வதை புறக்கணித்தமையே இதற்குக் காரணம்.

எனினும், தெரிவுக் குழுவின் இடைக்கால அறிக்கையொன்று தயாராகியிருந்த போதிலும் பொது உடன்பாடொன்று எட்டப்படாமையினால் அதை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாமல் போனது. 17 ஆவது திருத்தத்தை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டுமென்பதனாலேயே இந்த தெரிவுக் குழு நியமிக்கப்பட்டது.

நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதிக்கு இவ் விவகாரத்தில் தலையிட வேண்டி ஏற்பட்டது.

இதேநேரம், ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்து பேசினர். பாராளுமன்றத்திலுள்ள கட்சிகளுடன் பேச்சு களை நடத்தும் ஜனாதிபதியின் திட்டத்தின் முதற் சந்திப்பே அது.

இந்த சந்திப்பின் போது இணங்கிக் கொண்டதற்கு அமைய ஐ.தே.க. சார்பில் கே.என். சொக்ஸி எம்.பி. கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற தெரிவுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஐ.தே.க. முன்வைத்த யோசனையும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

இதன் போது அடுத்த கூட்டத்தை இம்மாதம் 19 ஆம் திகதி (இன்று) நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், மறைந்த அநுரா பண்டார நாயக்காவின் இறுதிக் கிரியைகள் அன்றைய தினம் நடைபெறவிருப்பதால் தெரிவுக் குழுக் கூட்டத்தை பிறிதொரு தினத்தில் நடத்த குழுவின் தலைமை தீர்மானித்திருக்கிறது.

எனவே, இந்த தெரிவுக் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை அரசியலமைப்பு சபையை இயங்கச் செய்ய முடியாது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது" என்றார்.

ரணில் விக்கிரமசிங்க

இதேநேரம், சட்டத்தில் இருப்பதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதே தற்போதைய தேவையாக இருப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று இருக்கும் போது கிழக்கில் தேர்தல்கள் நடத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இனப்பிரச்சினைத் தீர்வு யோசனை பற்றியே தாங்கள் ஜனாதிபதியுடன் பேசச் சென்றிருந்ததாகவும் அவர் கூறினார்.

விமல் வீரவன்ச எம்.பி.

இதைத் தொடர்ந்து பேசிய ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான விமல் வீரவன்ச;

"எங்களது கட்சியினால் உறுப்பினர் நியமிக்கப்படாமல் இருப்பது தான் அரசியலமைப்பு சபையை நியமிப்பதில் இழுபறி நிலைமை ஏற்படுத்தியிருக்கிறதென கூறுவதென்றால் அப்படியானதொரு பிரச்சினை தற்போதில்லை. ஏனெனில், அப்பிரச்சினை அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டது.

இதேநேரம், திருத்தங்களை செய்ய வேண்டுமென்பது தற்போதிருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாதென்று அர்த்தமில்லை. அப்படிப் பார்த்தால் அரசியலமைப்பிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்தவே முடியாது.

எனவே, தங்களுக்கு ஏற்றவாறு இல்லை என்பதற்காக உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட பின்னர் தான் இதை நடைமுறைப்படுத்த முடியுமென அரசாங்கம் கூறுவதானது சட்டத்தை மீறும் செயலாகும். அதையே அரசாங்கம் தற்போது செய்கிறது" என்று கூறினார்.

அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே

இதேநேரம், ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பேசுகையில்;

"ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பற்றி பேசாதது போல ரணில் விக்கிரமசிங்க இங்கு பேசுகிறார். ஆனால், அவர் தான் அவ்விடயம் பற்றி முதலில் பேச்சை எடுத்தார்.

அத்துடன், சகல கட்சிகளும் இணைந்து கலந்து பேசி பொது இணக்கப்பாட்டுடன் அறிக்கையொன்றை அனுப்புமாறு அதை தான் நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி கூறினார். அதற்கு அங்கு சம்மதம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வேறு மாதிரி பேசுகிறார்.

இதேநேரம், இந்த அரசியலமைப்பு சபை உறுப்பினர்களை நியமிக்காத பிரச்சினையானது இன்று, நேற்று இல்லாமல் கடந்த 3 வருடங்களாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் இது இருந்தது. ஆனால், அப்போது இது பற்றி எவரும் பேசவில்லை" என்றார்.

மீண்டும் விமல்

இதன் போது, குறுக்கிட்ட விமல் வீரவன்ச எம்.பி., "இதை குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்த இந்த சட்டத்திற்கு நீங்களும் ஆதரவு தெரிவித்து விட்டு இன்று எதிர்ப்பது ஏனென்று கேட்கிறேன்.

அத்துடன், இது 3 வருடகால பிரச்சினையென்றால், தசாப்தங்களாக இருந்து வரும் இனப் பிரச்சினையை தீர்க்க மாட்டீர்களா? தெரிவுக்குழுவின் அறிக்கை வரும் வரை அரசியலமைப்பு சபை நியமனம் தொடர்பான பிரச்சினையை இடை நிறுத்தி வைத்திருப்பதென்றால், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை வரும் வரை விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி பார்த்துக் கொண்டிருங்களேன் பார்ப்போம். பல வருடங்களாக நீடிக்கும் இனப் பிரச்சினையை தீர்க்க செயற்படுவதெனில், 3 வருடமாக இருக்கும் இந்த பிரச்சினையை ஏன் தீர்க்க முடியாது என்று கேள்வி எழுப்பினார்.

மீண்டும் ரணில்

இதேநேரம், இறுதியாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்;

13 ஆவது மற்றும் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது நான் கூறினேன். தெரிவுக்குழுவின் அறிக்கை வரும் வரை, அரசியலமைப்பு சபைக்கான நியமனங்களை நிறுத்த வேண்டாமென்றும் நான் கேட்டுக் கொண்டேன்.

அத்துடன், தற்போதைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பதவிக்காலம் இம் மாத இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே அப்பதவிக்கு புதியவரை நியமிப்பது யார்? இதற்கு அரசியலமைப்பு சபை நியமிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஏப்ரல் மாதத்திலிருந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் வரும். இப்பதவிக்கு எவரும் விரும்பியவரை நியமிக்க முடியாது. இங்கு எழுந்திருப்பது எமக்கான சிறப்புரிமைப் பிரச்சினையாகும் என்றார்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com