தென்ஆபிரிக்காவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேவக், யுவராஜ் வாய்ப்புப் பெற்றுள்ளனர். முக்கோணத் தொடரில் அபாரமாக விளையாடிய காம்பீர் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோனி, ஹர்பஜன் அணியில் இடம்பிடித்தாலும் போட்டியில் பங்கேற்பார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. காயம் காரணமாக இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டிராவிட், கங்குலி, லட்சுமண் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர்.
இந்தியா வரும் தென்ஆபிரிக்க அணி 3 டெஸ் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 26 ஆம் திகதி சென்னையில் தொடங்குகிறது. இத்தொடருக்காக தேர்வு செய்யப்படும் வீரர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அக்கடமியில் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டுமென தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்கர் அறிவித்தார்.
இதையடுத்து கும்பிளே, கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோர் இதில் கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்க தயாராக இருப்பதை உறுதி செய்தனர். காலில் காயமடைந்த யுவராஜ் சிங் நேற்று முன்தினம் காலை இத்தேர்வில் பங்கேற்றார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 14 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் வெங்சர்கர் தலைமையில் பெங்களூரில் நடந்த கூட்டத்தில் தேர்வுசெய்யப்பட்டது. இதில் ஐந்துதேர்வுக் குழு உறுப்பினர்கள் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கேரிஹேஸ்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தென்ஆபிரிக்க தொடருக்கான அணியிலிருந்து காம்பீர் நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிந்த முக்கோணத் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணி அவுஸ்திரேலிய மண்ணில் கிண்ணத்தை வென்று சாதிக்க முக்கிய காரணமாக இருந்த இவருக்கு இடம் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடரில் அவர் 10 போட்டிகளில் 440 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இதனால் அணியில் இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இவருக்கு பதிலாக மும்பையைச் சேர்ந்த தொடக்க வீரர் வாசிம் ஜாபர் வாய்ப்புப் பெற்றுள்ளார்.
டெஸ்ட் தொடர் என்பதால் தேர்வுக் குழுவினர் அனுபவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். முக்கோண ஒரு நாள் தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்ட டிராவிட், கங்குலி, லட்சுமண் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். நல்ல போர்மில் இருக்கும் சச்சினும் தென்ஆபிரிக்க பந்து வீச்சை வெளுத்து வாங்கத் தயாராக இருக்கிறார்.
அடிலெய்ட் டெஸ்டில் சதம் அடித்த சேவக்கும் அணியில் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சமீபகாலமாக சொதப்பி வரும் யுவராஜுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இஷாந்த் சர்மாவின் கால் காயம் முழுமையாக குணமடையாததை அடுத்து அவருக்கு ஓய்வுகொடுக்கப்பட்டுள்ளது. இவர் சென்னை டெஸ்டில் பங்கேற்கமாட்டார். விரைவில் தேறிவிடும் பட்சத்தில் அடுத்த டெஸ்டில் பங்கேற்கலாம்.
இத்தொடருக்கும் கப்டனாக கும்பிளே அறிவிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுழலில் அசத்த ஹர்பஜன் காத்திருக்கிறார். நேற்று முன்தினம் நடந்த தியோதர் கிண்ணப் போட்டியில் முரளி கார்த்திக் காயமடைந்தார். இவர் தென்ஆபிரிக்க தொடரில் விளையாடுவது கடினமே. அவுஸ்திரேலிய தொடரிலிருந்து பாதியிலேயே நாடு திரும்பிய ஆர்.பி.சிங் மீண்டும் கலக்கவிருக்கிறார். இவருக்கு ஷ்ரீசாந்த், பதான் நல்ல ஒத்துழைப்ப தருவார்கள். முனாப் உள்ளூர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
தென்ஆபிரிக்க தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி; அனில் கும்பிளே (கப்டன்), தோனி, சச்சின், சேவக், வாசிம் ஜாபர், டிராவிட், கங்குலி, லட்சுமண், யுவராஜ், பதான், ஹர்பஜன், ஆர்.பி.சிங், ஷ்ரீ சாந்த், முரளி கார்த்திக்.
மாற்று வீரர்கள்: தினேஷ் கார்த்திக்,பியுஷ் சாவ்லா.