பிரேஸில் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரும் தற்போது ஏசி.மிலான் அணிக்கு விளையாடி வருபவருமான ரொனால்டோ முழங்கால் காயத்திற்கான சிகிச்சைக்குப் பின் வேகமாகத் தேறி வருவதாக கூறியுள்ளார்.
லிவோர்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரொனால்டோ காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை நடத்தப்பட்டது. இதனால் சுமார் 8 மாதங்களுக்கு அவரால் கால்பந்தாட்டப் போட்டிகள் எதிலும் விளையாட முடியாது என்று கூறப்பட்டது.
மேலும் அவரது கால்பந்தாட்ட வாழ்வையே இந்தக் காயம் முடிவுக்குக் கொண்டு வரும் அபாயமுமிருந்தது.
தற்போது ஏசி.மிலான் அணியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் ரொனால்டோ தற்போது தான் தேறி வருவதாகவும், கால்பந்தாட்டத்திற்கு விரைவில் திரும்பும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது தன் காலில் வலியில்லை என்றும், நன்றாக நடக்க முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்னர் இன்டர்னேசியொனல் என்ற அணிக்கு விளையாடியபோது ஏற்பட்ட வலது முழங்கால் காயம் கால்பந்தாட்டத்திற்கு அவர் மீண்டும் வருவது சந்தேகமென்ற அளவிற்கு இருந்தது. ஆனால், அவர் அதன் பின் 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் பிரேஸிலை அதன் 5 ஆவது உலக சாம்பியன் கிண்ணத்திற்கு இட்டுச் சென்றார். இந்த உலகக் கிண்ணத்தில் அவர் ஜேர்மனி அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் அடித்த 2 கோல்கள் உட்பட மொத்தம் 8 கோல்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.