* பாகிஸ்தானுக்கு புதிய சிக்கல்
பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அவுஸ்திரேலிய தொடர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பரில் இங்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மினி உலகக் கிண்ணத் தொடரும் இலங்கைக்கு மாற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்பதாக இருந்தது. சமீபத்தில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியா இத்தொடரில் பங்கேற்க தயக்கம் காட்டியது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கான அவுஸ்திரேலிய தூதர் தொடரை கைவிடும்படி கூறியதை அடுத்து, தொடரை வேறு இடத்துக்கு மாற்றுமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கேட்டுக் கொண்டது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பி.சி.பி.,) ஏற்க மறுத்துவிட்டது. இதனால் இத்தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. இதனால் இங்கு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த மினி உலகக் கிண்ணத் தொடர் இலங்கைக்கு மாற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தற்போது டுபாயில் நடந்துவரும் ஐ.சி.சி., நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஐ.சி.சி., அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், வெளிநாட்டினர் மீது குறிவைத்து தான் இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதனால் மற்ற அணிகள் இங்கு போட்டிகளில் பங்கேற்க தயக்கம் காட்டலாம். அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் தொடரை ரத்துச் செய்யப் போவதாக அறிவித்திருப்பது சரியென்பதை தான் இது நிரூபித்துள்ளது.
மினிஉலகக் கிண்ணம் செப்டம்பரில் நடப்பதால் இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து தொடரை ரத்து செய்ய முடியாது. இருந்தாலும் பாகிஸ்தானில் அந்நிய வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் மற்ற அணியினரின் நம்பிக்கையை பெற பி.சி.பி., முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் இத்தொடர் இலங்கைக்கு மாற்றப்படும்.
போட்டிக்கான வேலைகளை கவனிக்க இலங்கை கிரிக்கெட் சபைக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களாவது தேவைப்படும் என்பதால் பி.சி.பி., நிலைமையை விரைவில் சீராக்க வேண்டும். பாதுகாப்பு அற்ற சூழ்நிலைகள் தொடர்ந்தால் பாகிஸ்தானின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுமென்றார்.