எம்.ஏ.எம்.நிலாம்
முஸ்லிம் சமூகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவரான முன்னாள் செனட்டர் நாவலர் மசூர் மௌலானாவுக்கு 75 வயது பூர்த்தியடைவதையொட்டியும் அவரது அரசியல் வாழ்வின் 60 வருடங்கள் பூர்த்தியடைவதைக் குறித்து கடந்த மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது பிறந்த மண்ணான மருத முனையில் அவரைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் இரட்டைப் பெருவிழாவொன்று நடத்தப்பட்டது.
சட்டத்தரணி ஏ.எம்.பதுறுதீன் தலைமையில் மருதமுனை அல்மனார் வித்தியாலயத்தில் பவள விழாவும், வைரவிழாவும் ஒரே அரங்கில் நடத்தப்பட்டன.
இந்த இரட்டைப்பெரு விழாவில் அமைச்சர் பேரியல் அஷ்ரப், பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், பஷீர் சேகுதாவூத், ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கல்முனை நகரபிதா எச்.எம்.எம்.ஹரீஸ், மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், சட்டத்தரணி அபுல்கலாம் உட்பட பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின்போது மசூர் மௌலானாவுக்கு `முஸ்லிம் தேசன்' என்ற சிறப்புப் பட்டமும் வழங்கப்பட்டது. இந்தப் பட்டம் தொடர்பில் சில கருத்துகளை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் முன் வைத்துப் பேசினார். "முஸ்லிம் தேசியம்" என்று நாம் பேசும்போது அதில் பல அம்சங்கள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் மிகத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். பஷீரின் உரையை தொட்டே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் முஸ்லிம் தேசியம் பற்றி விரிவான அடிப்படையில் தொட்டுக் காட்டியுள்ளார்.
முஸ்லிம் சமுதாயத்தின் கடந்த கால வரலாறு எதிர்கால அரசியல் இருப்பு பற்றிய கருத்துகளையும் ஹக்கீம் முன்வைக்கத் தவறவில்லை.
இந்த இருவரதும் உரை தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் பேசுகையில் முஸ்லிம் சமூகத்தையும் தனிநாட்டுப் போராட்டத்துக்குள் இழுத்துவிட முஸ்லிம் காங்கிரஸ் முனைவதாகவும் சிங்கள, முஸ்லிம் மக்களிடை பிளவை ஏற்படுத்த ஹக்கீம் முயற்சிப்பதாகவும் கடுமையாக சாடும் விதத்தில் பேசியிருக்கின்றார்.
ஹாஜி அஸ்வர் தான் அப்படி அங்கு பேசியதோடு மட்டும் விட்டு வைக்கவில்லை. கொழும்பு திரும்பியதும் அரச ஊடகங்களில் குறிப்பாக சிங்கள ஊடகங்களில் அச்செய்திக்கு முன்னுரிமை கொடுத்துப் பிரசுரிக்கச் செய்துவிட்டார்.
இச்செய்தி தொடர்பாக நாம் பஷீர் சேகுதாவூத், ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் விளக்கம் கேட்டபோது, அன்றைய கூட்டத்தில் முஸ்லிம் தேசப் பிரகடனம் பற்றியோ சுயாட்சிப் போராட்டம் பற்றியோ எந்த விதக் கருத்துகளையும் தாங்கள் முன்வைக்கவில்லை எனவும் முஸ்லிம் தேசன், முஸ்லிம் தேசியம் என்பன தொடர்பில் சில கருத்துகள் மட்டுமே முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் இன்று பெரும் அச்ச சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. பேரினவாத அரசியல் சக்திகளின் கைகளுக்குள் சிக்குண்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையே அன்று முதல் இன்றுவரை கண்டு வருகின்றோம்.
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்புக்கு பேரினவாத அரசியல் சக்திகள் இன்று வரை எந்தவிதமான உத்தரவாதத்தையும் தரவே இல்லை. மாறி மாறி அதிகாரத்துக்கு வருவதற்காக இந்த பேரினவாத அரசியல் சக்திகள் முஸ்லிம் சமூகத்தை கறிவேப்பிலையாக மட்டுமே பாவித்து வந்துள்ளன. எதிர்காலத்திலும் அதையே செய்யப்போகின்றன.
இப்படியானதொரு அழிவு நிலைக்குச் சென்றுகொண்டிருக்கும், அரசியல் அநாதைகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சுயமாக தன் காலில் நிற்க வைப்பதற்காக அன்று மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தோற்றுவித்தார். தென்னிலங்கைக்கு அப்படியொரு முஸ்லிம் அரசியல் அணி தேவைப்படவில்லை என்ற கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தமது அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக அப்படியொரு கட்சியின் அவசியம் உணரப்பட்டதாலேயே அன்று முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டது.
மர்ஹும் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸில் பிளவுபட்டு இன்று கிழக்கில் மட்டும் முஸ்லிம்களுக்கென பல கட்சிகள் `காளான்'களாக தலையெடுத்துள்ளன. வடபுலத்திலும் ஒன்றிரண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கிழக்கில் இன்றும் கூட முஸ்லிம் காங்கிரஸ் ஆழமாக வேரூன்றி இருப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது.
கிழக்கின் இன்றைய நிலைமை முஸ்லிம்களைப் பொறுத்தளவில் பேரச்சம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. முஸ்லிம்களின் அரசியல் இருப்பு மட்டுமல்ல காணிகள் கூட அபகரிக்கப்படுவதற்கான திட்டங்கள் பகிரங்கமாகவே தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணத்தின் எல்லைகளைக் கூட வேறுபடுத்தி முஸ்லிம் சமுதாயத்தை கருவறுக்கும் ஒரு மறைமுகத்திட்டமும் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப்படியானதொரு நெருக்கடி மிக்க நிலைமையில் முஸ்லிம் சமுதாயம் சுயமாக தன் காலில் நிற்க முயற்சிக்கும் போது பேரினவாதத்துக்காக வக்காளத்து வாங்கும் சக்திகள் குறித்து வேதனை கொள்ள வேண்டிய நிலைக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கான சுயாட்சிக் கோரிக்கையானது இன்று நேற்று முன்வைக்கப்பட்டதொன்றல்ல. அன்று 50 வருடங்களுக்கு முன்னர் தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி தமிழர் சுயாட்சிக்கு கோரிக்கை விடுத்த போதே முஸ்லிம்களுக்கான சுயாட்சிக் கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. அதனை அன்று தந்தை செல்வநாயகமும் அங்கீகரித்திருந்தார் என்பதை வரலாற்றைப்படிக்கும் எவரும் மறுக்க முடியாது.
தென்னிலங்கையில் சிங்கள - முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி பேசுகின்றவர்கள் 50 என்ன நூறு வருடங்களுக்கும் மேலாக காலத்துக்குக் காலம் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இனவாத மோதல்கள் பற்றி தெரிந்திருக்கவில்லையா. நாம் பட்ட அடிகள் ஒன்றா, இரண்டா, பேரினவாத அரசியல் சக்திகளிடம் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் இருப்பை இன்னும் எவ்வளவு காலத்துக்கு விலை பேசிக் கொண்டிருக்கப் போகின்றோம் என்பதைப்பற்றி முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டாமா எனக் கேட்க விரும்புகின்றோம்.
முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் போகச் சொன்னதை பேரினவாதத்திடம் விலை போயுள்ள முஸ்லிம் அரசியல் சக்திகள் மறந்துவிட்டனரா?
தங்களின் இருப்பை மட்டும் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் தன்மானத்தை பேரினவாத அரசியல் சக்திகளிடம் அடகு வைப்பதற்கு முஸ்லிம் சமூகம் தயாராகவில்லை.
சிங்கள மக்கள் எம்மை எப்போதுதான் நேர்மையாக பார்த்தனர்? எப்போதுமே சந்தேகக் கண்கொண்டு தானே பார்க்கின்றனர். அவர்களுக்காக ஜால்ரா போட்டால் தோளில் சுமப்பார்கள். எமது உரிமையைக் கேட்டால் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கின்றனர். இதை இன்னும் எவ்வளவு காலத்துக்கு விட்டு வைப்பது?
முஸ்லிம்களோ, முஸ்லிம் காங்கிரஸோ ஒருபோதும் நாட்டை பிரித்துக் கேட்கவில்லை. அப்படி ஒருபோதும் கேட்கப் போவதுமில்லை. இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்குரிய அரசியல் இருப்பு பாதுகாத்துத் தரப்படவேண்டுமென்றே வலியுறுத்தப்பட்டுள்ளது. சுயாட்சித் தீர்வென்றால் முஸ்லிம்களுக்கும் சுயாட்சி அலகு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையே முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகின்றது.
பேரினவாத அரசியல் சக்திகளை திருப்திப்படுத்தி சுயலாபம் தேடிக் கொள்வதற்கான ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் பகடைக்காய்களாக பயன்படுத்த முனையும் முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டாமென சம்பந்தப்பட்டவர்களிடம் பணிவாக கேட்டுக் கொள்கின்றோம்.