அஜாதசத்ரு
மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் இம்மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அதுபற்றிய எந்தவொரு அக்கறையுமற்ற நிலையில் அச்சத்துடன் வாழும் நிலைமையே மேலோங்கிக் காணப்படுகின்றது.
`கிழக்கின் உதயம்' என்ற பிரகடனம் மூலம் சர்வதேச சமூகத்தையும் உள்நாட்டு மக்களையும் தம்வசப்படுத்தும் மேலாதிக்க நிலைப்பாட்டின் வெளிப்பாடகவே அவசர அவசரமாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாக பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்படுவதை மறுப்பதற்கில்லை.
கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் சர்வதேச சமூகத்தின் நிதி உதவிகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதற்கும் சுமுகநிலைமை கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்ற நிலைமையை காட்டுவதற்குமான அவசர முனைப்புகளுடனேயே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.
எனினும் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுவதற்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டுமென்பதை அறிவிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே தென்னிலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளதுடன் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேநேரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள போதிலும் பல்வேறு நெருக்கடிகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, வாழைச்சேனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரையானது பல்வேறு விடயங்களை தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது.
ஆயுதக்குழுவொன்றை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பயன்படுத்துகின்றது என்று தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம் அதனை அரசாங்கத்தில் அமைச்சராகவிருக்கும் செல்வாக்குமிக்க அரசியல்வாதியொருவரின் பின்னணியில் செயற்படும் ஆயுதக் குழுவொன்றினால் தமக்கும் நாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் இல்லையென்பதையே தொடரும் இவ்வாறான சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறப்போகும் ஒன்பது உள்ளூராட்சி சபைகளிலும் வாழைச்சேனை உள்ளூராட்சிச் சபை எல்லைக்குள்ளேயே முஸ்லிம்கள் கூடுதலாகவுள்ளனர்.
வாழைச்சேனை உள்ளூராட்சி சபையைத் தனது அதிகாரத்திற்குள் எப்படியாவது கொண்டுவந்துவிட வேண்டுமென்ற செயற்பாடுகளையே அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தும் அமைச்சர் அமீர்அலியின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பிரதேசத்தில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறே ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆயுதக் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு மறுநாள் மயக்கமுற்ற நிலையில் கிரான் பிரதேசத்தில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான உண்மை நிலைவரம் மூடிமறைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையிலான ஆளும் கட்சியின் ஆசீர்வாதத்துடன் அவர்களின் வெற்றிலைச் சின்னத்தில் கூட்டாக இணைந்து போட்டியிடுகின்றனர்.
ஏனைய எட்டு உள்ளூராட்சிச் சபைகளுக்கும் சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு சார்பாக பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேல் உட்பட பல்வேறு அமைச்சர்கள் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து நிவாரண உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி ஆதரவு திரட்டுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமக்கு சார்பானவர்களை அதிகாரத்திற்குக் கொண்டுவந்து சர்வதேச சமூகத்தின் ஆதரவை தம்வசப்படுத்தும் அரசியல் முன்னெடுப்புகளையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வருவதையே இவ்வாறான நடவடிக்கைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
அதேநேரம் அரசதரப்பினருடன் உறவுகளைப் பேணிக்கொண்டாலும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்ற நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்துவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா என்பன கூட்டிணைந்து அப்பிள் சின்னத்தில் சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகின்றன.
மார்ச் 10 ஆம் திகதி நடைபெறப்போகும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் உணர்வுகளை எவ்வாறு பிரதிபலிக்கப்போகின்றது என்பதை உணர்த்தும் ஒரு களமாகவேயுள்ளது.
சர்வதேச சமூகமும் தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இதனையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் நேரடியாக சந்தித்து களமுனை ஆய்வுகளில் ஈடுபட்ட பவ்ரல் உட்பட பல்வேறு அமைப்புகள் தேர்தலொன்று நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கான சூழலும் இல்லை அதனை எதிர்கொள்ளும் மனோநிலையில் அங்குள்ள மக்களும் இல்லையென்று குறிப்பிட்டிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.