-ச.பா.நிர்மானுசன்-
அடக்குமுறைகள் விடுதலைக்கான பாதையை விரைவுபடுத்துகின்றன. தலைமையின் கரங்களை பலப்படுத்தி, தளராத துணிவோடும், உறுதிகுன்றா நம்பிக்கையோடும் முன்னெடுக்கப்படும் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை. மக்கள் மயப்படுத்தப்பட்ட சுதந்திரத்திற்கான போராட்டங்களின் வரலாறு, காலத்திற்கு ஏற்ற சிந்தனை, களத்திற்கு ஏற்ற முடிவு, உயர்ந்தபட்ச மனோபலம் போன்றவை அதனையே சுட்டிக்காட்டுகிறது.
வெளித்தெரிந்த வகையில் கொசோவோவின் சுதந்திரத்திற்கான போராட்டம் 10 வருடங்கள். குறித்த 10 வருடகாலப்பகுதியில் வன்முறைகாரணமாக வாழ்வை பறிகொடுத்த மக்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம். அக்காலப் பகுதியில் 5 இலட்சம் மக்கள் கைதுசெய்யப்பட்டனர். ஒரு இனக்குழுமத்தின் 25 சதவீதமான மக்கள் ஒடுக்குமுறையாளர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணமபோயினர். அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் அவலங்களை சுமக்கும் இடம்பெயர்வும், அகதிவாழ்வும் அவர்களையும் விட்டுவைக்கவில்லை. உலகம் தன் நீதிக்கான கண்களை கொசோவோ நோக்கி திருப்பும் வரையும் கொசோவோ புலம்பெயர்ந்த சமூகமே அவர்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தது. அவர்கள் தனித்து போராட்டத்துக்கு வேண்டிய நிதியை மட்டுமன்றி சிறியளவிலான இராஜதந்திர செயற்பாடுகளிலும் முனைப்பு காட்டினார்கள். கொசோவோவின் சுதந்திரத்திற்கான கவனயீர்ப்பு போராட்டங்களை தேவையான காலகட்டங்களிலெல்லாம் சளைக்காமல் நடத்தினார்கள். குந்த ஒரு குடிநிலம் வேண்டும் என்றால் போராடு. சும்மா இருக்க சுதந்திரம் கிடைக்காது. போராட்டம் என்பது என்றைக்கும் கடினமான பாதைகளை தன்னகத்தே கொண்டது. கொசோவோவும் இதனைத்தான் சொல்லி நிற்கிறது.
இந்த நிலையிலேயே இலங்கைத் தீவுக்கும் கொசோவோவுக்கும் இடையிலான பொருத்தப்பாடுகளையும், வேறுபாடுகளையும் இணையத்தளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்தப் பகுதி அலசுகிறது.
1850ஆம் ஆண்டளவில் பிரித்தானியர் நிர்வாக ரீதியாக யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம் மற்றும் கோட்டே இராச்சியம் ஆகியனவற்றை இணைத்திருந்தது. 1945இல் கொம்யூனிச இயக்கம் சேர்பியா, மொன்ரி நிக்ரோ மற்றும் கொசோவை இணைத்து யுகோஸ்லாவியாவை உருவாக்கியது. இதில் கொசோவோ 1913இலேயே சேர்பியாவுடன் பிணைப்பை ஏற்படுத்தியது. நாடுகளுக்கும், இராசதானிகளுக்கும் இடையில் வேறுபாடுள்ளமை இத்தருணத்தில் அவதானிக்கப்படவேண்டு
யுகோஸ்லாவியாவின் 10 மில்லியன் சனத்தொகையில் 8 மில்லியன் சேர்பியர்களும் 2 மில்லியன் அல்பேனியார்களும் காணப்பட்டார்கள். சேர்பிய மொழிபேசும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த மக்கள் சேர்ஃப்ஸ் என அழைக்கப்பட்டனர். கொசோவோ மக்கள் அல்பேனிய இனக்குழுமத்தை சார்ந்தவர்கள். அவர்களுடைய மொழி அல்பேனியன் ஆகவும் மதம் இஸ்லாமாகவும் இருந்தது. இலங்கைத் தீவின் சனத்தொகை பரம்பலை நோக்கும் போது, 20 மில்லியன் சனத்தொகையில் 16 மில்லியன் மக்கள் சிங்களவர்களாகவும், பௌத்த, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். ஏனைய 4 மில்லியன் மக்கள் தமிழ் பேசும் சமூகமாகவும் கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படு கின்றனர்.
வரலாற்று ரீதியான முக்கிய நிகழ்வுகளை எடுத்து நோக்குகையில், 1990இல் இடம்பெற்ற போல்கன் போர் மற்றும் இனச்சுத்திகரிப்பு, 199இ ல் இடம்பெற்ற கொசோவோ மக்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகள், 1999இல் கொசோவோ மீதான நேட்டோவின் தலையீடு, 2006இல் மொன்ரி நிக்ரோ சுதந்திர தேசமாக பிரிந்து சென்றமை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.. இலங்கைத் தீவை எடுத்து நோக்குபோது கொழும்பு சுதந்திரத்தை கொண்டாடியதற்கு பின்னரான அடுத்த ஆண்டே(1949) தமிழரசுக்கட்சி அல்லது சமஷ்டி (பெடரல்) கட்சி தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டமையும், தமிழ் மிதவாதக் கட்சிகள்கூட அதுவும் 59 வருடங்களுக்கு முன்னரே சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை நாடியமை தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வெளிப்படுத்துவதோடு, 1976இல் இடம்பெற்ற தனிநாட்டுக் கோரிக்கைக்கான வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் பேசும் மக்களின் மக்களின் கோரிக்கையை வலுப்படுத்துகின்றது. அத்துடன் 1983இல் இடம்பெற்ற கறுப்பு ஜூலை என பெயரெடுத்த இனச்சுத்திகரிப்பும், 1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவான வடக்கு- கிழக்கு இணைப்பும், 2002 போர்நிறுத்த ஒப்பந்தமும், 2003இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவு தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை தொடர்பில் உலக ஒழுங்கின் பார்வையில் தவிர்க்க முடியாத நிகழ்வுகளுள் முக்கியம் பெறுகின்றன.
1999 ஜி 8 நாடுகளின் அனுமதியுடன் கொசோவோ நேட்டோவால் நிர்வகிக்கப்பட்டது. கொசோவோ வாழ் அல்பேனிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சுயஅமைப்பாக கொசோவோ விடுதலை இராணுவம் விளங்கியது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காவல்துறையினரும் அங்கு நிலைகொண்டுள்ளனர். அது அவ்வாறிருக்க கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் பேரினவாதக் கட்சிகள் 2002 போர்நிறுத்தத்தை கடுமையாக எதிர்த்தமையும் அதற்கான காரணங்களைுயும் இவ்விடத்தில் மீட்டி பார்ப்பது பொருத்தமாக இருக்கும். 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் அரச கட்டமைப்புகளை நிர்வாகம் செய்வதற்கு சுதந்திரத்தை உத்தியோக ரீதியாக வழங்கியது. அதன் அடிப்படையிலேயே கட்டுப்பாட்டுப் பகுதிகளும், எல்லைப் பரப்புக்களும் வகுக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையிலேயே குரங்குபாஞ்சான், மணிராசன்குளம் மற்றும் சம்பூர் போன்ற நிலப்பரப்புகள் சர்ச்சையை உண்டுபண்ணியிருந்தன. அத்துடன் சமதரப்பு அந்தஸ்துடனே சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதுபோன்ற அம்சங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டு கோரிக்கையை வலுப்படுத்துவதாக பேரினவாதக் கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால், கொசோவைவிட தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுப்படுத்தக் கூடிய காரணிகள் இருப்பினும், அந்த காரணிகளை விட பிராந்திய அரசுகளின் தேசிய நலன், உலகமயமாக்கல், பூகோள அரசியல், சக்திமிக்க நாடுகளின் தேசிய நலன் என்பவை தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு பாதகமாகவுள்ளன.
இனக்குழும மோதுகையுடன் இலங்கைத் தீவின் அமைவிடத்தை தொடர்புபடுத்தும் போது அது சிறிலங்கா அர சாங்கத்துக்கு சாதகமானதாகவே உள்ளது. புதிய உலக ஒழுங்கில் தேசங்களின் `அமைவிடங்கள்' முக்கியத்துவம் செலுத்துகின்றன. போல்கன்ஸ்லில் அமெரிக்காவின் உறுதியான காலூன்றலுக்கு கொசோவோவின் சுதந்திரம் வழியமைத்துள்ளது. அதன்காரணமாகவே ஏனைய சுதந்திரப் போரட்டங்களுடன் `ஒப்பிடும் போது பாதிப்புகள் குறைந்த' கொசோவோவால் சுதந்திரத்தை விரைவில் பெறமுடிந்தது. ஆனால் ஈழப்போராட்டம் தன்னகத்தே தனித்துவத்தைக் கொண்டிருந்த போதும் பூகோள அரசியல், பொருளாதார அடிப்படையிலான உலக ஒழுங்கை நோக்கி செல்லவேண்டிய விடயங்களும், உலக ஒழுங்கை தன்பக்கம் திருப்புவதற்காக மேற்கொள்ளவேண்டிய விடயங்களும் மீதமாகவே உள்ளன. அதற்கான ஆரம்பப் புள்ளிகளை தற்போது அவதானிக்க முடிகின்ற போதும் அது பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் தொலைவிலேயே உள்ளது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை வெற்றிபெறுதல் என்பது நான்கு பிரதான சக்திகளுடன் தொடர்புபட்டுள்ளது. அவையாவன 1. போராட்டத்தை மேற்கொள்ளும் இனக்குழுமம், 2. சிறிலங்கா அரசாங்கம், 3. இந்திய அரசாங்கம், 4. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சக்திகள்.
சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் மனித உரிமை குற்றச் சாட்டுக்கள், வெளிவிவகாரங்களுடன் தொடர்புடைய இராஜதந்திரம் எனச் சொல்லப்படுகின்ற ஆனால், புத்திசாதுர்யம் அற்ற செயற்பாடுகள், அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணுகின்ற. ஈரான், ரஷ்யா, சீனா ஆகியனவற்றுடனான இறுக்கமாக வளர்ந்து வரும் கூட்டமைப்பு ரீதியிலான உறவுகள் போன்றவைகள் தொடருமாக இருந்தால், வல்லமை மிக்கதும் உலக ஒழுங்கில் தாக்கத்தை செலுத்தக்கூடியதுமான நாடுகளுக்கு இலங்கைத் தீவில் ஒரு புதிய `வெளிப்படையான தெரிவு' தேவைப்படும். அது தமிழீழ விடுதலைப் புலிகளாகவே இருக்கும். புலிகளின் திட்டமிடல், உபாய முறைகள், செயற்படுத்தல் முறைகள், ஒழுக்கத்துடன் கூடிய வலுவான கட்டமைப்பு, மனோபலம், தீர்மானம் எடுக்கும் விதம் போன்றவற்றை விரும்பியோ விரும்பாமலோ ஆச்சரியத்துடனேயே பார்த்து வருகிறது.
அப்படியான தெரிவு ஒன்று இடம்பெறுமாக இருந்தால் அதற்கு தடையாக இருக்கும் புலிகள் `பயங்கரவாதிகள்' என்ற நிலைப்பாடும் மாறும். உலக வரலாற்றில் ஏன் கொசோவோ வரலாற்றிலேயே அது நடந்திருக்கிறது.
Kosovo Liberation Army (KLA) என கூறப்படுகின்ற கொசோவோ விடுதலை இராணுவமும் முன்னர் யுகோஸ்லாவிய அர சாங்கம் உட்பட வேறு தரப்புகளாலும் பயங்கரவாதிகளாகவே வர்ணிக்கப்பட்டிருந்தார்கள். அமெரிக்காவின் விசேட பிரதிநிதியான ரோபேட் ஜெல்பெட் KLA I பயங்கரவாதிகளாக கூறியிருந்தார். அமெரிக்க அரசாங்கம் உத்தியோகபூர்வமாக KLAஐ பயங்கரவாதிகளாக குறிப்பிடவில்லை என பின்னர் அவரே தெரிவித்திருந்தார்.
சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகள் என்பனவற்றுக்கான வேறுபாடுகள் அடிப்படைக்காரணிகளை விட சக்திமிக்க நாடுகளின் தேசிய நலனை பொறுத்தே வடிவம் பெறுகின்றது என்பதற்கு இது அண்மைய உதாரணம். கொசோவோவுடன் தொடர்புடைய பிறவிடயங்களை அடுத்த வாரம் அலசுவோம்.
மாற்றம் என்ற ஒன்றைத் தவிர உலகில் நிலையானதாக எதுவுமே இல்லை.