-பி.ஆர்.நாயகம்-
இவ்வாரத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றுதான் உள்நாட்டு அரசியல் அரங்கில் இன்று முக்கிய விடயமாகப் பேசப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்புத்தான் அது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தச் சந்திப்பின் பின்னணியில் இந்தியாவே இருந்துள்ளதாகக் கூறப்படுவது அதன் அரசியல் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்திருக்கின்றது. இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இந்தியப் பின்னணி பற்றிய அந்தக் குற்றச்சாட்டை ஏற்கவோ மறுக்கவோ இல்லை. இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவடைந்திருப்பதாக இரு தரப்பினரும் தெரிவித்திருக்கின்ற போதிலும் உண்மையில் இதன் பலாபலன்களைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதும் அக்குழுவால் முன்வைக்கப்பட்டிருக்கும் 13 ஆவது திருத்தத்தை மீண்டும் நடை முறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வதும்தான் இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. 13 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில், ஜே.வி.பி.அதற்கெதிரான கடுமையான விடயத்தை எடுத்துள்ள நிலையில் ஐ.தே.க.வின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவை பேச்சுவார்த்தைகளுக்கு ஜனாதிபதி அழைத்தமைக்கான பிரதான காரணமும் அதுதூன்!.
ரணிலின் உபாயம்
13 ஆவது திருத்ததத்துக்கான ஆதரவை ஐ.தே.க.தலைமையிடமிருந்து பெற்றுக்கொள்வதென்பது அவ்வளவு கடினமானதாக இருக்காது என அரசாங்கத் தலைமை கணக்குப் போட்டிருந்தது. காரணம் 1987 இல் 13 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்ததே ஐ.தே.க. தலைமைதான். அதனால், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஐ.தே.க.வின் ஆதரவு கிடைக்குமா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியபோது அதற்கும் சாதகமாகப் பதிலளிப்பதைவிட ரணில் விக்கிரமசிங்கவுக்கு வேறு தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.
இருந்தபோதிலும், ஒரு நிபந்தனையை அவர் முன்வைத்தார். 13 ஆவது திருத்தம் நாட்டின் சட்டத்தில் ஏற்கனவே இருப்பதால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தடைகள் எதுவும் இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்த ரணில், ஆனால், அதனைத் துண்டுதுண்டாக அமுல் செய்வதற்குத் தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பதில் ஓரளவுக்கு மகிந்த எதிர்பார்த்ததுதான். ஏனெனில் ஜே.வி.பி., ஹெல உறுமய மற்றும் எம்.ஈ.பி.போன்ற கடும்போக்கு இனவாதக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக 13 ஆவது திருத்தத்தை வெட்டிச் சிதைத்து, அதிகாரங்களைக் குறைத்தே அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு தீர்வாக வெளியிட்டிருக்கின்றது. அத்துடன், கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துமாறும் சிபார்சு செய்திருக்கின்றது.
இதனை ஏற்றுக்கொள்ளக் கடியவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்துவதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் திட்டவட்டமாக அறிவித்தார். தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலை கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் ஐ.தே.க.வின் நிலைப்பாடாக இருக்கின்றது.
மகிந்தவின் திட்டம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குள் ஐ.தே.க.வை மீண்டும் கொண்டுவருவதும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்குமே இந்தச் சந்திப்பை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார். ஐ.தே.க.வையும் இதில் இணைப்பதன் மூலம் சர்வதேச சமூகத்திடமிருந்து வரக்கூடிய விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும் என அவர் எதிர்பார்த்தார். அத்துட ன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அதற்கெதிரான போராட்டங்களை அண்மைக்காலத்தில் தீவிரப்படுத்தியிருக்கும் ஜே.வி.பி.யை ஓரங்கட்ட முடியும் என்பதும் அவரது உபாயமாக இருந்தது.
இருந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்க இந்த இரு பொறிகளிலிருந்தும் நழுவிக்கொள்ளும் விதமாகவே காய்களை நகர்த்தியிருக்கின்றார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் ஐ.தே.க.பங்குகொள்ளுமா என்பதற்குத் திட்டவட்டமான பதில் எதனையும் அவர் கூறவில்லை. அதேவேளையில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக
நடைமுறைப்படுத்தினால் ஆதரவு எனக் கூறியிருப்பதன் மூலம் அரசாங்கத்தை சங்கடமான ஒரு நிலைக்குத் தள்ள அவர் முற்பட்டிருக்கின்றார். இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் முற்பட்டால் பேரினவாதக் கட்சிகள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியது தான். அதனால், அந்தளவுக்கு துணிச்சலுடன் மகிந்த செயற்படமாட்டார் என்பது ரணிலுக்குத் தெரியும்.
இந்த நிலையில் ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு சாதகமான ஒரு குறிப்புடனேயே முடிவடைந்திருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதிலும் அவ்வாறு சாதகமான நிலைமைகள் எதனையும் காணக்கூடியதாகவிருக்கவில்லை.
இரு தரப்பினரும் தமது அரசியல் நலன்நோக்கிய காய்நகர்த்தல்களையே மேற்கொண்டிருந்தார்கள். பிரதான இரு கட்சிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே சமாதானத் தீர்வொன்றைக் காண முடியும் என்பது உண்மையாக இருக்கின்ற போதிலும் இரு தரப்பினரதும் அரசியல் நிகழ்ச்சி நிரல் அதற்கு இடம் தரப்போவதில்லை என்ற உண்மையைத் தான் இவ்வார முற்பகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பும் உணர்த்தியிருக்கின்றது.
இந்தியா பின்னணியில்?
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது எனவும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் இதன் பின்னணியில் செயற்பட்டிருப்பதாகவும் ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இதேபோன்ற ஒரு கருத்தைத்தான் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவும் முன்வைத்தார். 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஐ.தே.க.வின் ஆதரவு இல்லாமல் அதனை நடைமுறைச் சாத்தியமாக்க முடியாது என்பதும் இந்தியாவுக்குத் தெரியும்.
அதனால், இந்தச் சந்திப்பின் பின்னணியில் இந்தியா இருந்திருக்கலாம் என்பது சாத்தியமானது தான்.
கடந்த வாரத்தில் தான் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பப்போவதாகக் கூறி நாடு தழுவிய ரீதியில் சுவரொட்டிப் போராட்டத்தை ஆரம்பித்த ரணில் ஒரு வாரத்துக்குள் அரசுத் தலைவரைச் சந்தித்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தமது ஆதரவு கிடைக்கும் எனக் கூறியிருப்பதற்கு `வெளியேயிருந்து வந்துள்ள' அழுத்தங்கள் தான் காரணமாக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் அழுத்தமே அது எனவும் ஜே.வி.பி. தெரிவித்திருப்பதை இலகுவில் நிராகரித்து விட முடியவில்லை.
இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை ஏற்கனவே, ஆரம்பித்திருந்த ஜே.வி.பி.க்கு தமது பிரசாரங்களைத் தீவிரப்படுத்துவதற்கான மற்றொரு விடயமாக இது கிடைத்திருக்கின்றது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கும் ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதற்காகத் தமது உயிர்களைக் கூட தியாகம் செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கின்றார். அத்துடன், இவ்வாறான விடயங்களில் இந்தியாவின் தலையீடு தொடர்ந்தால் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களின் அடுத்த கட்டமாக இந்தியப் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு கோரும் நிலையும் வரலாம் என எச்சரித்திருக்கின்றார்.
ஆக 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்ப்புகள் மேலோங்குவதற்கே வழிவகுப்பதாக இருக்கும்.
ஜே.வி.பி.யின் உபாயம்
ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியிலேயே அவர்களுடைய வாக்கு வங்கி இருக்கின்றது. ஜாதிக ஹெல உறுமயவின் வருகையும் கடும் இனவாதப் போக்கில் அரசாங்கம் செல்வதும் அவர்களுடைய இந்த வாக்குவங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலையில் தமது ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள சிறந்த வாய்ப்புத்தான் இந்த 13 ஆவது திருத்தம். அதற்கெதிரான போராட்டங்களின் மூலமாகவே தமது ஆதரவுத் தளத்தை தற்போதைய நிலையில் அவர்கள் கட்டியெழுப்ப முடியும்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்துவது போல இதன்மூலம் இரண்டு நலன்களை ஜே.வி.பி. எதிர்பார்க்கின்றது. ஒன்று தமது ஆதரவுத் தளத்தை பாதுகாக்கவும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்குமான ஒரு உபாயமாக இந்தப் போராட்டங்களைப் பயன்படுத்துவது. இரண்டு ஏனைய பேரினவாதக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் மகாஜன எக்சத் பெரமுன என்பன அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பதால் அவற்றின் ஆதரவுத் தளங்களை இந்தப் போராட்டங்களின் மூலமாக உடைக்கலாம் என்பதும் ஜே.வி.பி.யின் மதிப்பீடு. அதனால், 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது தான் ஜே.வி.பி.யின் தற்போதைய உபாயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் ஜாதிக ஹெல உறுமயதான் அதன் பிரதான போட்டிக் கட்சி. இரண்டும் இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்படுபவை என்பதுடன், அந்த அடிப்படையிலேயே தமது ஆதரவுத் தளத்தையும் உருவாக்கியிருக்கின்றன. ஹெல உறுமய அண்மைக் காலத்தில் அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செல்வது ஜே.வி.பி.க்கு கசப்பான ஒன்றாகும். குறிப்பாக உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி மகிந்தவுடன் நெருக்கமாகச் செயற்படுவது ஜே.வி.பி.க்கு சீற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது. ஜே.வி.பி. யின் போராட்டத்தின் பின்னணியில் இவை அனைத்தும் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
இனவாத அடிப்படையிலான எதிர்ப்பிரசாரம் ஒன்று தீவிரமடையும் நிலையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மகிந்த துணிவார் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. இதனைப் புரிந்து கொண்டுள்ள நிலையில்தான் ரணிலும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆக மகிந்த -ரணில் சந்திப்பு அரசியல் போக்கில் வெறுமனே ஒரு நிகழ்வே தவிர எந்தவிதமான திருப்பத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வல்ல என்பதே உண்மையாகும்.