Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
தெற்கிலும் வியாபிக்கும் தாக்குதல் அச்சுறுத்தல்
[02 - March - 2008] [Font Size - A - A - A]
-விதுரன்-

தெற்கைப் பாதுகாத்தவாறு வடக்கில் பாரிய யுத்தமென்ற அரசின் கொள்கையில் பெரும்பின்னடைவு ஏற்படுவது போல் தெரிகிறது. வடக்கில் இடம்பெறும் படை நகர்வில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத அதேநேரம் கொழும்பு உட்பட தெற்கில் இடம்பெறும் பல்வேறு தாக்குதல்களும் தெற்கை உலுக்கி வருகிறது.

கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றி வடக்கையும் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டால் நாட்டைப் பாதுகாத்துவிடலாமென்று நினைத்த அரசுக்கு, தெற்கைப் பாதுகாக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால் நாட்டை எப்படிப் பாதுகாப்பதென்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் தற்போது இடம்பெறும் பெரும் போர் தொடர்பான செய்திகள் இன்று தெற்கின் இனவாத சக்திகளைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே வெளியிடப்படுகிறது. இது, தென்பகுதி மக்களுக்கு தவறான தகவல்களைத் தெரிவிக்கும் அதேநேரம் இந்தப் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு கண்டுவிடலாமென்றதொரு மாயையையும் அவர்கள் மத்தியில் தோற்றுவிப்பதாகவேயுள்ளது.

அதேநேரம் வடக்கில் யுத்த முனையில் புலிகள் பலத்த தோல்விகளைத் தழுவுவதாலேயே கொழும்பிலும் தெற்கிலும் அவர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அரசினதும் படையினரதும் கவனத்தை திசை திருப்ப முற்படுகிறார்களென்றும் தென்பகுதி மக்கள் எண்ணத் தலைப்படுகின்றனர். இது, யுத்தம் குறித்த அந்த மக்களின் எண்ணத்தில் மட்டுமன்றி இனப்பிரச்சினை தீர்வு குறித்த அவர்களது சிந்தனையிலும் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கங்களைக் கொண்டது.

வடக்கில் இடம்பெறும் தாக்குதல்களை திசைதிருப்பவே புலிகள் தெற்கில் இவ்வாறான தாக்குதல்களை நடத்துகின்றார்களென்றால், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சிங்கள மக்களின் கடும் அழுத்தம் இலங்கை அரசிற்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக புலிகள் தெற்கில் பெரும் தாக்குதல்களை நடத்தினால் அதன் விளைவுகள் எப்படியிருக்குமென்பதை அரசும், அரசியல் வாதிகளும், தென்பகுதி மக்களும் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

கிழக்கை புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதால் வடக்கு - கிழக்கில் நடைபெற்ற யுத்தம் தற்போது வடக்குடன் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அரசு கருதுகிறது. இதனால் வடக்கையும் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டால் யுத்தம் முடிவுக்கு வந்துவிடுமென்றும் வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்தால் தமிழர்களின் தாயகக் கோட்பாடும் விடுதலைப் போராட்டமும் இல்லாது போய்விடுமென்றும் அரசு கருதுகிறது.

கொசோவோவின் சுதந்திரப் பிரகடனமும் பலஸ்தீனிய விடுதலைப் போராட்டமும் அரசை சிந்திக்க வைக்கிறது. கடந்த 40 வருடங்களுக்கு முன் பலஸ்தீனம் சுதந்திரப் பிரகடனத்தை செய்தும் அதற்கென்று நிலப்பிரதேசங்கள் இல்லாததால் அதனை அங்கீகரிக்க எந்தவொரு நாடும் முன்வந்ததில்லை. ஆனால் கொசோவோ இறைமையுள்ள தேசம் போன்று சுதந்திரப் பிரகடனத்திற்குரிய அனைத்து தகுதிகளுடனுமிருந்ததால் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை உலக நாடுகள் ஏற்று வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில்தான் தமிழீழம் குறித்து அரசும் இனவாதிகளும் பெரிதும் கவலை கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் நிலப்பிரதேசங்களும் மக்களும் இருக்கும் வரை அவர்களது சுதந்திரப் போராட்டம் குறித்தும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்தும் வலியுறுத்தப்படலாமெனக் கருதும் இனவாதிகள், புலிகள் வசமிருக்கும் வடக்கையும் முடிந்த வரை விரைவில் கைப்பற்றிவிட்டால் எல்லாப்பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டிவிடலாமெனக் கருதுகின்றனர்.

இதனால்தான் வடக்கில் அரசு முழு வளங்களையும் பயன்படுத்தி பெரும் போரை நடத்துகிறது. அங்கு இடம்பெறும் யுத்தம் குறித்த செய்திகள் தென்பகுதியை எவ்விதத்திலும் பாதித்து விடக் கூடாதென்பதிலும் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. இதனால்தான் ஒரு புலி உறுப்பினர் இறந்தால் பத்து பேர் கொல்லப்பட்டதாகவும் பத்துப் படையினர் கொல்லப்பட்டால் ஒருவர் மட்டும் சிறு காயங்களுக்குள்ளானதாகவும் பிரசாரம் செய்கிறது.

கிழக்கில் இடம்பெற்ற மோதல்களில் 3000ற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகக் கூறிவந்த அரசும் படைத்தரப்பும் கடந்த சில மாதங்களில் 2000 புலிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரை 6,486 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. 2006 இல் போர் வெடித்த போது 5000 புலிகள் வரையே உள்ளதாகக் கூறிவந்த அரசும் படைத்தரப்பும், களமுனையில் உயிரிழக்கும் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக நம்பமுடியாத எண்ணிக்கையை கூறிவருவதால் புலிகள் அமைப்பில் இருப்போரின் எண்ணிக்கையையும் அவர்களே அதிகரித்துக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2006 இல் இரு தரப்புக்குமிடையே பெரும் போர் வெடித்த போது 5000 புலிகளே இருந்தார்களென்றால் இன்று வரை எப்படி 6,500 புலிகள் கொல்லப்பட்டிருப்பர். இதைவிட, அரசின் தகவல்படி காயமடைந்த புலிகளின் எண்ணிக்கையும் இதேயளவில் இருப்பதால் அவர்கள் எங்கிருந்து வந்தார்களென்ற கேள்வி எழும் அதேநேரம் புலிகளின் எண்ணிக்கை குறித்த அரசின் கணக்குப்படி இந்த நேரம் யுத்தம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வடக்கில் சில நூறு மீற்றர் தூரத்தை கைப்பற்ற படையினர் ஒரு வருடத்தை பூர்த்தி செய்யும் நிலையல்லவா ஏற்பட்டுள்ளது.

இனவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும் தென்பகுதி மக்களின் ஆதரவை இந்த யுத்தத்திற்கு பெறுவதற்காகவும் போர்க்கள புள்ளி விபரங்களை பல மடங்காக அதிகரித்து கூறும் போது புலிகளின் ஆளணி குறித்த எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரிக்குமென்பதை அரசும் படைத்தரப்பும் இதுவரை ஏன் உணரவில்லை.

மேலும், 5000 புலிகளே உள்ளனர் அவர்களும் விரைவில் அழிக்கப்பட்டு விடுவார்களெனத் தற்போது கூறும் படையினர், இன்னும் சில மாதங்கள் சென்றதும், வடபகுதி மோதலில் 3000 புலிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுவர். அப்படியாயின் குறைந்தது 2000 புலிகளாவது காயமடைந்திருப்பர். இதன் மூலம் புலிகளின் எண்ணிக்கை பற்றி அரசும் படைத்தரப்பும் கூறும் கணக்கு சரியாகிவிடும். ஆனாலும் அப்போது கூட போர் முடிவுக்கு வந்திருக்காது. வன்னியில் மேலும் சில நூறு மீற்றர் தூரத்திற்கே படையினர் சென்றிருப்பர்.

இந்த உண்மையை ஏன் தென்பகுதி மக்கள் உணரவில்லை. வடக்கு, கிழக்கு பிரச்சினை குறித்து சிங்கள, ஆங்கில ஊடகங்களும் அரசுடனும் படைத்தரப்புடனும் இணைந்து பொய்ப்பிரசாரங்களில் ஈடுபடுவதால்தான் இந்த நிலைமையென்பதை சிங்கள மக்கள் உணரும் போதுதான் இந்தப் பிரச்சினையின் முழு நிலைமையையும் அவர்களால் உணர முடியும். இல்லையேல் தலைநகர் கொழும்பிலும் தெற்கிலும் ஒவ்வொரு முறையும் தாக்குதல்கள் இடம்பெறும் போதும், வடக்கில் புலிகள் பெரும் தோல்விகளைச் சந்திப்பதாலேயே தலைநகரிலும் தெற்கிலும் அவர்கள் தாக்குதல்களை நடத்துவதாக கருதுவார்கள். அவ்வாறானதொரு மாயையை அரசும், படைத்தரப்பும் ஊடகங்களும் ஏற்படுத்தியுள்ளன.

வடக்கில் தினமும் நடைபெறும் ஷெல் வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல், மோட்டார் குண்டு வீச்சு, விமானத் தாக்குதல்களால் கொல்லப்படும் தமிழ் மக்களின் எண்ணிக்கை குறித்து சிங்கள மக்களுக்கு எதுவும் தெரிவதில்லை. வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தினமும் சுட்டுக்கொல்லப்படுவோர், கடத்தப்படுவோர், காணாமல்போவோரின் எண்ணிக்கை குறித்தும் சிங்கள மக்களுக்கு எதுவும் தெரிவதில்லை. ஆனால் யுத்த முனையில் மட்டும் தினமும் தவறாது, குறைந்தது 30 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்படுகிறார்களென்பது தெரியும்.

இதனால்தான் தலைநகரிலும் தெற்கிலும் தாக்குதல் நடைபெறும் போது, தோல்வியின் விளிம்பில் நிற்கும் புலிகள் யுத்தத்தை திசை திருப்ப கொழும்பிலும் தெற்கிலும் தாக்குதல் நடத்துவதாக நினைக்கின்றனர். அத்துடன், களமுனையில் தினமும் படையினர் சிலரும் புலிகளில் பெருமளவானோரும் கொல்லப்படுவதாகச் செய்யப்படும் பெரும் பிரசாரத்தின் மூலம் படையினருக்கு மேலும் மேலும் ஆட்களைத் திரட்ட அரசும் படைத் தரப்பும் முயல்கின்றன. அடுத்த சில மாதங்களுக்கு அரச சேவைகளுக்கு ஆட்கள் திரட்டப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நிதியை முழுக்க முழுக்க, படையினருக்கு ஆட்களைத் திரட்ட அரசு பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

யுத்தத்தின் நிலைமை இவ்வாறிருப்பதை தென்பகுதி மக்கள் இன்னமும் உணரவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் இந்த நாட்டில் மக்கள் வாழவே முடியாத நிலையேற்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பெருமளவு நிதியை செலவிட வேண்டும். அல்லது யுத்தம் தலைநகரையும் தாண்டிவிடுமென்றதொரு நிலையேற்பட்டுள்ளது. இதனால், யுத்தம் குறித்து தினமும் வெற்றிச் செய்திகளைக் கூறிக்கொண்டு யுத்தத்தின் பெயரால் அரசு வாழ்க்கைச் செலவை தினமும் பல மடங்கால் அதிகரிப்பதை சகித்துக் கொள்ள வேண்டிய நிலை மக்களுக்கேற்பட்டுள்ளது.

யுத்தத்தின் உண்மை நிலையைக் கூறி அதனை நிறுத்தி நாட்டை அழிவிலிருந்து இப்போதாவது பாதுகாக்கக் கூடிய நிலையில் எதிர்க்கட்சியில்லை. நாட்டை பாதுகாப்பதை விட, கட்சி சிதைந்து சின்னாபின்னமாகி எவருமே இல்லையென்ற நிலையேற்பட்டு விடுமோ என்ற நிலையிலேயே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. அதற்கு அடுத்த படியாக பெருமளவு எம்.பி.க்களுடன் உள்ள ஜே.வி.பி.யோ தமிழர்களை முழுமையாக அழித்துவிடவேண்டுமெனக் கங்கணம் கட்டி, நாட்டையும் அழித்துவிட வேண்டுமென்பதில் முழு மூச்சுடன் நிற்கிறது.

இதனால்தான் தெற்கில் இடம்பெறும் தாக்குதல்களிலிருந்து மக்களை காக்க முடியாது அனைவருமுள்ளனர். கடந்த சில வாரங்களில் இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. வடக்கை போன்று இன்று தெற்கின் நிலைமையும் வந்துவிட்டது. தினமும் எங்காவது ஏதாவதொரு பாரதூரமான சம்பவம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை கூட கொழும்பு -15 முகத்துவாரம் அளுத்மாவத்தை பகுதியில் தற்கொலைக் குண்டுதாரியொருவர் குண்டை வெடிக்க வைத்துள்ளார்.

அண்மையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் கூட பெண் தற்கொலைக் குண்டுதாரியொருவர் குண்டை வெடிக்க வைத்த போது பெரும் அனர்த்தமேற்பட்டது. அதேபோன்றல்லாது அளுத்மாவத்தையில் வீடொன்றினுள் தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்ததால் மோசமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. இவ்விரு தற்கொலைக் குண்டுதாரிகளதும் இலக்குகள் வேறு. எனினும் இலக்கை சென்றடைய முன்னர் அவை வெடித்துள்ளன. இதனால் இவர்களது இலக்குகள் என்ன என்பதை அறிய முடியாத நிலையில் படையினர் உள்ளனர்.

அத்துடன் இவ்வாறான சம்பவங்களில், குண்டுத்தாரிகளின் இலக்கை படையினரால் தடுக்க முடிந்தாலும் ஏற்படும் சேதங்களை தடுக்க முடியாதுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தலை நகரதும் தென்பகுதியினதும் பாதுகாப்பு குறித்து தினமும் மக்கள் கேள்வியெழுப்புவதுடன் தலைநகரில் நடமாடுவதே பெரும் ஆபத்தென்ற நிலையேற்பட்டுவிட்டதை அனைவரும் உணரத்தொடங்கிவிட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றது முதல் நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட்டனர். பெரும் சொத்தழிவுகளும் ஏற்பட்டு வருகிறது. முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு யுத்தம் தலைநகரிலும் தெற்கிலும் வியாபித்துவிட்டது. நாட்டின் எந்தப் பகுதியிலும் எவருக்குமே பாதுகாப்பு இல்லையென்றதொரு நிலை உருவாகிவிட்டது. எந்தவொரு பகுதியையும் அரசாலோ அல்லது படைத்தரப்பாலோ பாதுகாக்க முடியாத நிலைமையே உள்ளது.

தற்போதைய யுத்தத்தில் அரசின் கை ஓங்கியுள்ளது. எனினும் புலிகளை முற்றாகத் தோற்கடிக்க முடியாதென சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிறிது காலத்தின் பின் இதில் மாற்றமேற்படும். பின்னர் மீண்டும் மாற்றமேற்படும். அப்போது கூட இந்த ஆய்வாளர்கள் இப்படித்தான் கூறுவார்கள். அந்தந்த நேரத்திற்கேற்ப சிலவற்றை எதிர்வு கூறமுடியுமே தவிர இந்த யுத்தத்தில் இதுதான் நிரந்தரமானதென எவராலும் கூறமுடியாத நிலைமை இன்று நேற்றல்ல கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நிலவுகிறது.

இந்த நிலையில் யுத்தம் தற்போது தலைநகரையும் தென்பகுதியையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும் அரசும் படையினரும் யுத்தத்தை எதிர்கொள்ளும் நிலைமையேற்பட்டுள்ளது. யுத்தம் தான் இறுதித் தீர்வு என்ற நோக்கில் அரசு செயற்படுவதால் யுத்தம் நாடு முழுவதும் பரவிவிட்டது. இதனை வடக்குடன் மட்டுப்படுத்தி விட முனைந்த அரசின் அனைத்து முயற்சிகளும் இன்று தோல்வியடைந்துவிட்டது.

Email this page Your Opinion Print this page
தெற்கிலும் வியாபிக்கும் தாக்குதல் அச்சுறுத்தல்
மகிந்த - ரணில் பேச்சுகள் திருப்பத்தை ஏற்படுத்துமா?
கொசோவோவின் விடுதலையும் இலங்கைத் தமிழர் பிரச்சினையும்
மட்டு.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: அக்கறையற்ற நிலையில் மக்கள்
சர்ச்சைக்குள் `முஸ்லிம் தேசியம்'
சுஜாதாவின் மறைவு
அரசின் யுத்த முன்னெடுப்புக் கொள்கை சமாதானத்தை உருவாக்கப் போவதில்லை
பாக்.தேர்தல் முடிவுகள் அந்நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு வழிகோலுமா?
புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு கலைஞர் ஆட்சி கலைக்கப்படும்
ஒரு நேர உணவுக்குக் கூட கையேந்தும் அவலம்
எரிக் சொல்ஹெய்ம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com