அன்றாட அத்தியாவசிய பாவனைப் பொருட்களான அரிசி, கோதுமை மா, பாண், பால் மா, எரிபொருட்களின் விலைகள் கடந்த டிசம்பரின் பின் சடுதியாக அதிகரித்துள்ளதால் இலங்கை மக்களில் பெரும்பான்மையானோர் மூன்று வேளை உணவுக்கு பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கும் நிலையில் சுமைக்கு மேல் சுமையாக ஷெல் காஸின் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 261 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் கடந்த வருட சராசரி பணவீக்கம் 21.6 சதவீதமாகும். இது தெற்கு, தென்கிழக்காசியப் பகுதியிலேயே மிக அதிகமாகும். இதேவேளை, கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்களும் கடந்த மாதம் 5955 புள்ளிகளிலிருந்து 6302 புள்ளிகளாக அதாவது 347 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. மாதாந்த அதிகரிப்பில் இதுவே மிக அதிகளவிலான அதிகரிப்பாகும்.
இலங்கை மக்களின் அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியின் விலை கடந்த மூன்று மாதங்களில் சுமார் இருமடங்காக உயர்ந்துள்ளது. சம்பா அரிசி கிலோ 48 ரூபாவில் இருந்து தற்போது ரூபா 85- 100 ரூபாவுக்கு இடையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 70 ரூபாவுக்கு அண்டிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வருடம் 45 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலை இந்த வருட ஜனவரி தொடக்கம் மேலும் 16 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலை (காஸ்) 1,488 ரூபாவிலிருந்து 1,749 ரூபாவாக நேற்று முன்தினம் முதல் உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரியில் பெற்றோலின் விலை லீற்றர் 127 ரூபா ஆக அதிகரித்தது. வறிய மக்களின் பாவனைப் பொருளான மண்ணெண்ணெய் 70 ரூபாவாக உயர்ந்திருக்கிறது. கடந்த இரு வருடங்களில் எரிபொருள் விலைகள் இருமடங்காக கூடியுள்ளன. இதன் விளைவாக போக்குவரத்து கட்டணங்கள் உட்பட இதர பல பொருட்கள், சேவைகளுக்கான கட்டணங்களும் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை மின்சார சபையும் 43 சதவீதம் தொடக்கம் கட்டண அதிகரிப்புக்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக காத்திருக்கிறது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதே உள்நாட்டில் இவற்றுக்கான கட்டணங்களை அதிகரிக்கவேண்டியிருப்பதற்கான காரணம் என்று அரசாங்கம் கூறிவருகின்றபோதும் அரசின் பாரியளவிலான யுத்த செலவின அதிகரிப்பே இதற்கான பிரதான காரணியாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த நவம்பரில் பாதுகாப்பு செலவினத்தை 167 பில்லியன் ரூபாவாக 20 சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்தது. கடந்த பெப்ரவரியில் யுத்தசெலவினம் ஏற்கனவே 10 பில்லியன் ரூபாவால் அதிகரித்துவிட்டதாக பிரதிநிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பேட்டியொன்றின் போது குறிப்பிட்டிருந்தார்.
பணவீக்கம் தற்போது அதிகரித்துச் செல்லும் தன்மையைப் பார்க்கையில் இலங்கையிலுள்ள பல இலட்சக்கணக்கான வறிய மற்றும் தாழ்ந்த மட்டத்திலிருக்கும் மத்தியதர வர்க்கத்தினர் படுமோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருப்பதாக பொருளியல் நிபுணரான ஹர்ஷாடி சில்வா எச்சரித்திருக்கின்றார்.
அத்துடன், அவர் மற்றொரு முக்கியமான விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது தற்போதைய பணவீக்க அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாதுவிடின் வர்த்தகத்துறையில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்திவிடுமென்றும் இதன் விளைவாக பொருளாதாரத்தின் முழுக் கட்டுமானமே நிலைகுலைந்து விடுமென்பதும் அவர் விடுத்திருக்கும் அறிவுறுத்தலாகும்.
விலைவாசி அதிகரிப்பால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் மோசமான நெருக்குதல்களுக்கு மத்தியில் பணவீக்கத்தால் ஏற்றுமதித்துறையும் படுபாதகமான முறையில் பின்னடைவை எதிர்கொள்ளவேண்டி நேரிடும். நாணயத்தின் பெறுமதியை உயர்த்தும் நடவடிக்கையானது ஏற்றுமதிப் பொருட்களின் போட்டித்தன்மைக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அத்துடன், உத்தேச மின்கட்டண அதிகரிப்பு இத்துறையில் படுமோசமான பாதிப்பை கொண்டுவரும்.
பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதன் விளைவாக அதிகளவு பணத்தை அச்சிடும் நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. கடந்த வருடம் மே மாதத்திற்கும் செப்டெம்பருக்கும் இடையில் 49 பில்லியன் (4,900 கோடி) ரூபா பணத்தை வெளியிட்டிருப்பதாக கடந்த பெப்ரவரியில் ஐ.ஏ.என்.எஸ். செய்தி சேவைக்கு ஹர்ஷா டி சில்வா தெரிவித்திருந்தார். இந்தப் பண நிரம்பலும் பணவீக்கத்தை அதிகரிப்பதற்கு பங்களிப்பினை வழங்கியுள்ளது.
இவற்றைவிட உலக சந்தையில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பும் பணவீக்கத்தை இங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. 2007 இல் இலங்கையின் வர்த்தக நிலுவை பற்றாக்குறை 3.56 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2006 இனை விட 6 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
இவை யாவற்றுக்கும் மேலாக அரசியல் நிலைவரம் மற்றும் மீண்டும் உக்கிரமாக இடம்பெற்றுவரும் மோதல்கள் என்பன பொருளாதாரத்தில் பாரியளவில் பின்னடைவு காண்பதற்கு பங்களிப்பு செய்து வருகின்றன என்பதை எவரும் நிராகரித்து விட முடியாது.
விலைவாசி அதிகரிப்பை கட்டுப்படுத்துமாறு பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.க. சுவரொட்டிப் பிரசாரத்தை கடந்த பெப்ரவரி 14 இல் ஆரம்பித்திருந்தபோதும் அதன் போராட்டத்திற்கு ஆக்கபூர்வமான விளைவு ஏற்பட்டதாக தென்படவில்லை. கடும்போக்கு கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை அரசாங்கத்தின் ஊழல் மோசடி தொடர்பாகவும் பாரிய அமைச்சரவையுமே பணவீக்கத்திற்கான காரணமென்ற தொனியில் பேசிவருவதுடன் தற்போதைய யுத்தத்துக்காக மக்கள் தமது வாழ்க்கைத் தரத்தை தியாகம் செய்ய வேண்டும் என்ற தொனியில் வலியுறுத்துகின்றன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை மக்களின் அன்றாட பிரச்சினையான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மௌனம் சாதித்துவருகின்றன.
அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளை பரிபாலிக்கும் வங்கிகளின் வங்கியான இலங்கை மத்திய வங்கியோ உலகின் பல நாடுகள் பணவீக்கத்திற்கு எதிராக கடுமையாகப் போராடுவதாக முன்னுதாரணம் காட்டும் தன்மையையே வெளிப்படுத்துகின்றதே தவிர பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே தற்போதுள்ள முக்கியமான இலக்கு என்பதில் கரிசனை செலுத்துவதாக தோன்றவில்லை.
விலைவாசி உயர்வால் அவதிப்படும் வறிய மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்காக அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் நெருக்கடி நிலைமை தொடர்பாக எதிர்க் கட்சிகள் அரசுக்கு எடுத்துரைத்து அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளின் விலை, கட்டண அதிகரிப்பை தடுத்துநிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் குறிப்பாக நலிந்த வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆகாயத்தை முட்டுமளவுக்கு அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலை அதிகரிப்பால் வானத்தைப் பார்த்து மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலைமையே நீடிக்கப்போகின்றது என்பதே தற்போது பெரும்பாலானவர்களின் மனநிலையாகும்.