இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிய அரசு ஒரு வாரத்துக்குள் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பாராளுமன்ற தேசியப் பேரவைக்கும் இதர நான்கு மாகாண சட்டமன்றங்களுக்கும் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான பொதுத் தொகுதிகளுக்கான அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணைக்குழு சனிக்கிழமை அறிவிக்க உள்ளது. பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான முடிவுகள் மார்ச் 3 ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அனைத்து முடிவுகளும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் இதுபற்றிய விவர அறிக்கை ஜனாதிபதி முஷாரபுக்கு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிவைக்கும். அதன் பிறகு இரண்டொரு நாளில் பாராளுமன்றத்தின் தேசியப் பேரவை கூட்டப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எனினும் தேசியப் பேரவைக் கூட்டம் மார்ச் 5 ஆம் திகதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தினங்கள் மட்டுமே இக்கூட்டம் நடைபெறும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி முதல் நாளன்று நடைபெறும். இரண்டாவது நாளான்று தேசியப் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும்.
அதன் பிறகு மார்ச் 2 ஆவது வாரத்தில் பிரதமர் தேர்வு நடைபெறும், அதற்கு முன்பாக தனிப்பெரும் கட்சியின் ஒப்புதல் பெறப்படும். புதிய பிரதமருக்கு பதவிப் பிரமாணத்தையும் ரகசிய காப்புறுதியையும் அதிபர் முஷாரப் செய்துவைப்பார். அதிபர் மாளிகையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாராளுமன்ற தேசியப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) அவாமி தேசிய கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து புதிய அரசை அமைக்க திட்டமிட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபோதிலும் அதிகாரபூர்வமாக சனிக்கிழமைதான் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தேர்தல் ஆணைக்குழு கூட்டம் சனிக்கிழமை இஸ்லாமாபாதில் நடைபெற உள்ளது. புதிய உறுப்பினர்கள் தங்களது சொத்து விவரங்களையும் தேர்தல் செலவு விவரங்களையும் வியாழக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வாறு விவரம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என தேர்தல் ஆணைக்குழு தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகளை விரைவில் அறிவிக்க வேண்டுமென பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்), அவாமி தேசிய கட்சி ஆகியவை தொடர்ந்து கோரிவந்தன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டால்தான் பாராளுமன்ற தேசியப் பேரவையைக் கூட்ட முடியும். புதிய அரசு பதவியேற்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவை வலியுறத்திவந்தன.
இதையடுத்து பாராளுமன்ற தேசியப் பேரவையின் தேர்தல் முடிவுகளையும் நான்கு மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகளையும் அதிகாரபூர்வமான முறையில் சனிக்கிழமை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு முன்வந்துள்ளது. நான்கு மாகாணங்களுக்கான புதிய அரசு இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.