*புலிகள் தெரிவிப்பு
மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கடும் சமரில் 11 படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டிவிரிச்சான் பகுதியில் தங்களின் நிலையங்கள் சிலவற்றை அதிகாலை நடைபெற்ற மோதலில் படையினர் கைப்பற்றியதாகவும் பின்னர் தாங்கள் அப்பகுதியில் அதிரடித் தாக்குதலை நடத்தி அந்த இடங்களை மீளக் கைப்பற்றியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
அதிகாலை 5 மணிமுதல் 6.30 மணி வரை இந்த உக்கிர சமர் நடைபெற்றதாகவும் இதில் 11 படையினர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது கொல்லப்பட்ட மூன்று படையினரின் சடலங்களை கைப்பற்றுவதற்காக படையினர் கடுமையாக மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், அன்று பிற்பகல் 2 மணியளவில் முள்ளிக்குளம் பகுதியில் ஆழ ஊடுருவும் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் வசமிருந்து இரு கிளைமோர்கள் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.
வியாழக்கிழமையும் முள்ளிக்குளம் பகுதியில் கடும் மோதல் நடைபெற்றுள்ளது. இந்தப் பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினருடன் 45 நிமிட நேரம் கடும் மோதல் நடைபெற்றதில் படையினர் தங்கள் முன்னேற்ற முயற்சியை கைவிட்டு பழைய நிலைக்குத் திரும்பியதாகவும் புலிகள் தெரிவித்தனர்.
அன்று பண்டிவிரிச்சான் பகுதியிலும் கடும் சமர் நடைபெற்றுள்ளது.