கொழும்பு முகத்துவாரம் அளுத்மாவத்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாக்குதலினால் படுகாயமடைந்த பொலிஸார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஒருவரே சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மூன்று பொதுமக்களும் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை, இத்தற்கொலைக்குண்டுத்தாக்குதலை நடத்தியவர் வவுனியாவை சொந்த இடமாகக் கொண்ட நடராஜா விஜேந்திரன் (வயது 26) என விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சார தொழில்நுட்பவியலாளராக கடமையாற்றிய இவர் தனது சகோதரியின் உதவியுடனேயே கொழும்புக்கு வந்ததாகவும் கர்ப்பிணியான இவரது சகோதரியும் அவரது பிள்ளைகளும் மீண்டும் வவுனியாவுக்கு சென்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இத் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் பலரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.