*சுட்டிக்காட்டுகிறது ஆசிய சட்ட வள நிலையம்
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்கள் தவிர்க்கப்பட முடியாதவையென்ற இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பானது நேர்மையான முறையில் நியாயப்படுத்த முடியாதது என்றும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் ஆசிய சட்ட வள நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக மனித உரிமை பேரவையினால் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்படும் மீளாய்வுக்கு ஆசிய சட்ட வள நிலையம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்திருக்கும் இந்த அமைப்பானது, உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் முன்வைக்கப்படும் சிபார்சுகளை அமுல்படுத்துவதில் இலங்கையானது கவலையளிக்கத்தக்க விதத்தில் தடம் புரண்ட பதிவுகளை கொண்டிருப்பதாகத் தான் கருதுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியது என்று கருதப்படும் சில சிபார்சுகளையும் ஆசிய சட்ட வள நிலையம் முன்வைத்துள்ளது.
இந்தச் சிபார்சுகளை அமுல்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அந்த அமைப்பின் சிபார்சுகள் வருமாறு;
2007 டிசம்பர் 10 இல் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் தனது அறிக்கையில் முன்வைத்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றாகும். உடனடியாக இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பலுவலகத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்துவதன் பிரதான நோக்கம் அரசாங்கத்தின் ஆற்றலை மேம்படுத்துவதாகும். இதன் மூலம் மக்களின் இறைமையை மீள நிலைநாட்ட முடியும்.
மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தை அமுல்படுத்துவதன் மூலம் இதற்கான அரசாங்கத்தின் கடப்பாடுகளை நிறைவேற்ற முடியும். அத்துடன் மனித உரிமைகள் குழுவின் கருத்துகளை செயற்படுத்துவதற்கான சட்ட மூலத்தை இயற்றுவதன் மூலம் இலங்கையில் இதனை நடைமுறைப்படுத்த முடியும்.
சிங்கராஜா வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானமானது அத்தகைய சட்ட மூலத்தின் அவசரத் தேவையை சுட்டிக் காட்டுகிறது.
குற்ற விசாரணைகள், காட்டுப்பாட்டுப் பொறுப்பு மற்றும் அரசியல் மயமாக்கப்படாத பொலிஸ் படை ஆகிய விடயங்கள் தொடர்பாக பரிகாரம் காணப்பட வேண்டும்.
குற்றவியல் நடவடிக்கைகளுக்கான விசாரணைகளில் சட்ட மா அதிபரின் வகிபாத்திரம் தொடர்பாக தெளிவான வரையறைகளுடன் சட்டமூலம் இயற்றப்பட வேண்டும்.
அத்துடன், சகல பாரதூரமான குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரங்களைக் கொண்ட சுயாதீன அரச விசாரணையாளர் அலுவலகமொன்றை மாற்று நடவடிக்கையாக அமைத்தல் வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான மரணங்கள், குறிப்பாக சட்டத்தை அமுல்படுத்தும் அமைப்புகள் வசமிருக்கும் போது இடம்பெறும் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்பாக நீதிபதிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும்.
மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமானதென்று கருதப்படும் சில அத்தியாவசியமான அதிகாரங்களை நீதிபதிகளிடமிருந்து பறிக்கும் அவசரகால அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட விதிகளை அரசாங்கம் மேற்கொள்வதைத் தடுக்க வேண்டும்.
மேலும் சாட்சிகளைப் பாதுகாக்கக் கூடிய தெளிவான ஏற்பாடுகளைக் கொண்ட சட்டம் இயற்றப்படுதல் வேண்டும். இது விசாரணை மற்றும் நீதித்துறையை உள்ளடக்கிய சம்பந்தப்பட்ட சகல அமைப்புகளினதும் கடப்பாடுகளை பாதுகாக்கும்.