அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.ஆதரவளிப்பதாக உறுதியளித்திருக்கின்றபோதும் அதனை அமுல்படுத்துவதற்குரிய உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்குரிய களநிலைவரம் தற்போதைக்கு சாதகமாக அமையாது என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இனநெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கான நோக்கத்துடன் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இருநாடுகளுக்குமிடையிலான உடன் படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடமென்ற அங்கீகாரத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வட,கிழக்குமாகாணசபையும் உருவாக்கப்பட்டது. சுமார் 19 வருடங்களின் பின் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பிரிக்கப்பட்ட மாகாணங்களை மீண்டும் இணைத்தாலேயே வடக்கு கிழக்கில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியுமென தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத சட்ட நிபுணர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
அத்துடன் வடக்கில் ஆலோசனை சபையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் அவர் எதிர்மறையான கருத்தை தெரிவித்திருக்கிறார். அரசியலமைப்பு ரீதியாக வடக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றதே (Established) தவிர அதற்குரிய சட்டமியற்றுதல் (Enactment) இடம் பெறவில்லையெனவும் இணைந்த வட,கிழக்குமாகாண சபைக்கான சட்டமியற்றுதலே இடம் பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அத்துடன் குறித்த ஒரு மாகாண சபை நிர்வாகம் செயலற்றுப் போகும் சந்தர்ப்பத்திலேயே அங்கு ஆலோசனை சபையை ஏற்படுத்த முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செவ்வனே நடைமுறைப்படுத்தப் போவதாக அரசாங்கம் கூறினாலும் சர்ச்சைக்குரிய விடயங்களான காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கம் தற்போதைய சூழ்நிலையில் முன்வராதென்று அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற சிங்கள கடும் போக்கு கட்சிகள் இந்த அதிகாரங்களை வழங்குவதற்கு ஒருபோதும் இணங்கப்போவதில்லை. இந்நிலையில் ஐ.தே.க. முழுமையாக ஒத்துழைக்கப்போவதாக அறிவித்திருப்பது தமிழ் மக்களின் வாக்குகளை கவரவும் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்குமான உபாயமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் மாற்றம் எதுவும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லையென இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் பணி புரிந்த காலத்தில் இந்திய ரோவின் தலைவராக இருந்த ஏ.கே.வர்மா தெரிவித்திருக்கிறார். ஷ்ரீலங்கா கார்டியன் என்ற இணையத்தளத்தில் அவர் இது தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவில் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதுடன் அதனுடன் இந்தியா தொடர்பு எதனையும் கொண்டிருக்கவில்லை. அதேபோன்று உதட்டளவில் அனுதாபம் காட்டுவதைத் தவிர இலங்கை அரசாங்கத்தின் தரப்பிற்கு அதிகளவில் புதுடில்லியால் சார்பாக செயற்பட முடியாது. ஏனெனில் இலங்கை அரசாங்கம் அதிகளவில் சீனா, பாகிஸ்தானின் வளங்களை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்துவதால் இந்தியா அதிகளவுக்கு இலங்கை பக்கம் சாய முடியாத நிலைமை உள்ளது.
இலங்கையும் விடுதலைப் புலிகளை அழித்துவிட வேண்டுமென்ற முழு அளவிலான முனைப்பில் உள்ளது. இது மிகவும் சுலபமான விடயமல்ல என்று குறிப்பிட்டிருக்கும் ஏ.கே.வர்மா வட, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்காலத்தில் எத்தனை பல வருடங்களுக்கு துன்பப்பட வேண்டுமென்று விதிக்கப்படுகின்றதோ என்று குறிப்பிட்டிருக்கிறார்.