Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான தேர்த்திருவிழா
[20 - March - 2008] [Font Size - A - A - A]
இலங்கையில் கீர்த்தி சிவாலயமாக மிளிர்வது கொழும்பு ஸ்ரீபொன்னம்பலவாணேஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் யாவும் ஒருங்கே அமைந்துள்ள சிவாலயம் இது. முற்றிலும் கருங்கல்லினாலான கோவில். அங்கே சிற்பிகளின் கைவண்ணங்களை நாம் காணமுடியும். சிவாகம முறைக்கமைந்த பூஜை, உற்சவங்களைக் கொண்டு விளங்குவது இச்சிவாலயம்.

தினமும் ஆறு காலப் பூஜைகள் நிகழ்கின்றன. காலையும், மாலையும் நிகழும் நித்தியோற்சவத்தில் மூர்த்தியும், அம்பாளும் மங்கள வாத்தியம், சங்கு, சேமக்கலம், பக்தகோடிகள் புடைசூழத் திருப்பல்லக்கில் எழுந்தருளுவது இவ்வாலயத்துக்கான சிறப்பம்சமாகும். வேதம் சிவபெருமான் அக்னி வடிவினன் எனக் கூறுகின்றது. அதற்கமைய மஹா மண்டபத்தில் மூலவரான ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரருக்கு முன்பாக நித்தியாக்கினி வளர்க்கப்படுகின்றது. இந்த அக்னி கார்யந்திற்கு பல மூலிகைகள், பழவகைகள் என்பன மந்திரபூர்வமாக அக்கினியில் இடப்படுகின்றது.

நித்தியோற்சவத்துடன் பக்ஷ உற்சவமாக பிரதோஷம், ஏகாதசி, என்பன சிறப்புறச் செய்யப்படுகின்றன. மாத உற்சவமாக பௌர்ணமி, சதுர்த்தி, கார்த்திகை ஆகியன உள. மாதாமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஏகாதசி ருத்ர ஜபம், அபிஷேகம், விஷேட பூஜை என்பன பக்திபூர்வமாகச் செய்யப்படுகின்றன. தைப்பூசம், மாசி சிவராத்திரி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆவணி சதுர்த்தி, புரட்டாதிச் சனி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவெம்பாவை முதலான உற்சவங்கள் இவ்வாலயத்தில் நன்கு நடைபெற்று வருவது குறிப்பிடக்கூடியது.

இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் பங்குனி உத்திரத்தை அந்தமாக கொண்டு நடைபெறுகின்றது. அதேபோல அம்பாள் உற்சவம் ஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்டு இலட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது. சிவனை நோக்கி அம்பாள் நோற்ற 21 நாட்களை கொண்ட கேதாரகௌரிப் பூஜை, வழிபாடுகள் செவ்வனே செய்யப்பட்டு வருகின்றன.

பங்குனி மாதம் ஒரு சிறப்பான மாதம். சிவன், பார்வதி, திருக்கல்யாணம் நிகழ்ந்தது பங்குனி உத்திரத்திலேயாம். பங்குனி உத்திரத்தை அந்தமாக கொண்ட திருவிழாவில் வேட்டைத் திருவிழா, சப்பறத் திருவிழா, பிக்ஷாடனர் ஸ்ரீ நடராஜர் திருவிழா என சிறப்பான திருவிழாக்களை நாம் தரிசிக்கின்றோம்.

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேர்த்திருவிழாவில் ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்தியானவர் சிற்ப வேலைப்பாடமைந்த திருத்தேரில் எழுந்தருளுகின்றார். சிவாலயங்களில் ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்திக்குத் தனிக் கோவில் உள்ளது. அங்கே அவர் அம்பாளுடன் நடுவே குழந்தைப் பருவ முருகனோடு எழுந்தருளி உள்ளார். அவர்களுக்குப் பக்கத்தே வீரசக்தி எழுந்தருளி இருப்பதை நாம் காணலாம். சோமாஸ்கந்த முகூர்த்தத்தில் ஒரு குடும்பப் பற்று உள்ளது. அம்பாள் தனது இளைய குமாரனைப் பார்த்த வண்ணம் இருக்க சிவனாரோ இவைகளைப் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளார். எனவே தான் வீரசக்தி அதாவது ஆதிபராசக்தியானவள் உலக கே்ஷமத்துக்காக அங்கே உள்ளார். இஃது ஓர் தேவேந்திர முகூர்த்தம். பிள்ளைப் பாக்கியம் வேண்டுவோர் ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்தியை விரதம் இருந்து வழிபடுவது நல்லது. இந்த முகூர்த்தமே தேர்த்திருவிழாவில் நாயகனாக வீதிவலம் வருகின்றது. அம்பாள் லோக மாதா ஆனமையில் தனக்கே உரித்தான தனித் தேரில் வீதிவலம் வரும்போது சிவனருள் பெற்ற சண்டேஸ்வரர் சிவத்தியானத்தோடு தமது தேரில் வீதிவலம் வருகின்றார். பிள்ளையார், முருகன் ஆகிய மூர்த்திகளின் உற்சவமும் உள்ளது. சிவாலயத் தேரின் தனிச்சிறப்பம்சத்தை ஈண்டு நோக்கினோம்.

தேர்த்திருவிழாவினைப் போலத் தீர்த்தத் திருவிழாவும் மிக முக்கியமானது. விரத அநுட்டானங்களுடன், திருவிழாக்காலத்தில் மூர்த்திகளை வணங்கிய நாம் இறையருளைப் பெறுவது தீர்த்தத்திருவிழாவிலேயாம். தீர்த்தம் ஆடித் தீர்த்தம் பருகுதல் வேண்டும். பங்குனி உத்திரம் பஞ்ச கிருத்திய நாயகனான ஷ்ரீ நடராஜப் பெருமானின் அபிஷேக தினமும் ஆகும். அவர் எமக்கு அருளுவது தூக்கிய திருவடியாகிய குஞ்சிதபாதத்தால் ஆகும். அவரின் அபிஷேகம், பூஜை, உற்சவம் யாவும் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரத்தில் சிறப்புறை இடம்பெற்று வருகின்றது.

பேரருள்மிக்க ஸ்ரீ சிவகாமசௌந்தரி அம்பிகா சமேத ஷ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரரின் பேரருள் எல்லோருக்கும் கிட்டுவதாக!

Email this page Your Opinion Print this page
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள்; மனித உரிமைமீறல்கள் மோசமடைவதன் வெளிப்பாடு
ஈராக் போரின் ஐந்தாண்டுகள் தரும் பாடம்
கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான தேர்த்திருவிழா
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com