Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஈராக் போரின் ஐந்தாண்டுகள் தரும் பாடம்
[20 - March - 2008] [Font Size - A - A - A]
கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கிற்குள் புகுந்த அமெரிக்கக் கூட்டுப் படையினர் தற்போது அந்த நாட்டில் புகுந்த ஐந்தாவது ஆண்டில் இவ்வாரம் கால் பதிக்கிறார்கள். இந்தப் போர் உலகின் அரசியல், பொருளாதாரத்தில் பாரிய மாறுதல்களை உண்டு பண்ணிய போர். உலகளாவிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலை உயர்வு, வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு என்று ஏழை முதல் பணக்காரன் வரை உலகில் உள்ள எல்லோரையுமே பாதித்துள்ள போராகும்.

ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹூசைன் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறார். அவரிடம் இரசாயன ஆயுதங்கள் உள்ளன. சர்வதேச அமைதிக்கு அவர் பெரும் அச்சுறுத்தலான ஒருவர் என்பது முதலாவது குற்றச்சாட்டு. அல் ஹைடா பயங்கரவாதிகளுடன் அவர் தொடர்புடையவராக இருந்தார் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. உலக சமுதாயம் இதைக்கேட்டு உறைந்த அமைதி காக்க இந்தப் போர் ஆரம்பமானது. இப்போது தெளிவான அறிக்கைகள் இந்த இரண்டு கேள்விகள் தொடர்பாக வெளியாகியுள்ளன.

01. சதாம் ஹூசைனிடம் அணு குண்டு இல்லை. அதுகுறித்த முயற்சிகள் நடைபெற்றமைக்கான தடயங்களும் இல்லை.

02. அல்- ஹைடாவுடன் சதாமிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ யாதொரு தொடர்புகளும் இல்லை.

போர் ஆரம்பிக்கப்பட்டமைக்கான இரண்டு பெரும் நோக்கங்களும் அடிபட்டுப் போய்விட்டன. அமெரிக்க அதிபர் இந்த விடயத்தில் மொத்தம் 930 வரையான பொய்களைக் கூறியிருக்கிறார் என்று கணக்கீடுகள் கூறியிருந்தன. கொலின் பவல், கொண்டலீசா ரைஸ் என்று பொய்களை உரைக்காதவர் எவரும் இல்லை என்றளவுக்கு பொய் ஆட்சி செய்த போராக இப்போர் இருந்தது.

இதுகுறித்த அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினரான கிளாரி கிளின்டன் கூறும்போது;

தான் அமெரிக்க அதிபராக வந்தால் எண்ணி 60 தினங்களில் அமெரிக்கப் படைகளை ஈராக்கில் இருந்து வாபஸ் வாங்கிவிடுவேன் என்றுகூறியுள்ளார். மேலும், அவர் கூறும்போது சுமார் ஒரு த்ரிலியன் (10,0000000000 டொலர்) (தமிழில் இதன் பெயர் ஒரு கர்ப்பம் டொலர்கள்) அமெரிக்க வரியிறுப்பாளர் பணம் நாசமாகியுள்ளது. 2500 வரையான அமெரிக்கப்படையினர் உயிர் துறந்துள்ளனர். இவை தான் கண்ட மிச்சம் என்பது அவருடைய கருத்து.

இதுமட்டும் நடைபெறவில்லை யு.என்.எச்.சி.ஆர். அறிக்கையின்படி சுமார் 4.5 மில்லியன் மக்கள் ஈராக்கை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளார்கள். ஒவ்வொரு எட்டு ஈராக்கியருக்கும் ஒருவர் என்ற வீதத்தில் இந்த வெளியேற்றம் நடைபெற்றுள்ளது. சென்ற ஆண்டு மட்டும் 45,200 ஈராக்கியர்கள் கைத்தொழில் நாடுகளுக்கு அடைக்கலம் கேட்டு வந்துள்ளார்கள். உலகளவில் அகதிகளாக போகும் மக்கள் தொகையில் ஈராக் அகதிகள் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

தினசரி ஈராக்கில் எங்கோ ஓர் இடத்தில் குண்டு வெடித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு குறுங்காலத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்று நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2668 பாலியல் அத்துமீறல்களில் அமெரிக்கப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் 60 வீதம் பாலியல் பலாத்காரம் என்றும் கூறப்படுகிறது.

சதாம் ஹூசைனும் அவர் மைத்துனர் கெமிக்கல் அலியும் இரசாயன தாக்குதல்களினால் கொன்ற குர்டிஸ்தானிய படுகொலைகளின் எண்ணிக்கையைக் கடந்து போய்விட்டது. இந்தப்போரில் இறந்தோர் தொகை. சதாம் ஹூசைன் அணுகுண்டு வீசியிருந்தால் அவரால் இத்தனை பேரைக் கொன்றிருக்க முடியுமா என்பது சிந்தையைத் தூண்டும் கேள்வியாகும்.

ஈராக்கில் மூன்று பிரிவுகளாக உடையும்படியாக இப்போது முரண்பாடுகள் முறுகலடைந்து செல்கின்றன. வடக்கே குர்டிஸ்தானிய பிரிவு, மத்தியில் சியா முஸலீம் பிரிவு, தெற்கே சன்னி முஸ்லீம் பிரிவு என்று மூன்று பிரிவாக பிளவுபட்ட ஈராக்கை இப்போது காண்கிறோம். வடக்கே துருக்கி சில வாரங்களுக்கு முன் 10,000 துருப்புக்களுடன் உள்நுழைந்து 200 பேர்வரை கொன்று திரும்பியது. பீ.கே.கே.போராளிகளை தேடிப் போவதாகவும் அது கூறியது.

மத்தியில் உள்ள சியா முஸ்லீம்கள் ஈரானுடன் உறவு கொண்டு பேசியுள்ளனர். உலகின் பிரதான சியா முஸ்லீம் நாடான ஈரானின் தலைவர் அகமடீனா நஜிட், முதல் தடவையாக பக்தாத் சென்று மேலை நாடுகளின் படைகள் அங்கிருப்பது வெட்கக் கேடான செயல் என்று கூறிவிட்டுப் போயுள்ளார்.

தெற்கே சன்னி முஸ்லீம் பகுதியில் உள்ள பெருமளவு எரிபொருள் வளத்தை யார் அனுப்பிவிப்பது என்பது தொடர்பான போட்டியால் குண்டு வெடிப்புக்கள் நடைபெற்ற வண்ணுமுள்ளன. அங்கிருக்கும் பிரிட்டன் படையும் வரும் ஆகஸ்ட் மாதமளவில் வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளன.

ஈராக்கில் ஓர் அரசு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அரசுக்கு சாதாம் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகள் விலத்தப்பட்டுளன. எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தினால் அவர்கள் இப்போது பெருந்தொகை பணத்தை உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அந்தப் பணத்தை நிர்வாகம் செய்ய ஒரு சரியான நிர்வாகமில்லாமல் இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மறுபுறம் விரைவில் ஈராக்கிய விமான சேவையும் ஆரம்பமாக இருக்கிறது. இதற்காக பல பில்லியன் டொலர்களில் விமானங்களை அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டன. ஈராக்கிய அரசு தனது படைகளால் நாட்டை நிர்வகிக்க முடியும் என்று கூறுகிறது. ஆனால் அவர்ளுடைய பலம் போதியதல்ல என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஈராக்கில் நிலவும் ஒற்றுமையீனமும் மதப்பிரிவுகளும்,அரசியல் வன்மங்களும் அங்கு ஒரு நிரந்தர அமைதிக்கு தடையாகவே இருந்து வருகின்றன.

மதிப்பீடு!

ஐ.நா.வின் ஆய்வறிக்கை ஒன்று இரண்டாவது உலகப் போரை மட்டும் நடத்தாமல் இருந்திருந்தால் உலகத்தில் உள்ள அனைவரும் வறுமையற்று வாழ்ந்திருக்கலாம் என்கிறது. ஒவ்வொரு குடும்பமும் ஐந்து அறைகளை கொண்ட வீட்டுக்கு உரிமையாளராக இருந்திருக்கலாம் என்றும், ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் ஒரு வைத்தியர் என்றளவில் உலகில் வைத்தியர்கள் இருந்திருப்பர் என்றும், அதற்குப் பிறகு போரில்லா உலகம் ஒன்றை உருவாக்கும் சிந்தனை மலர்ந்திருக்கும் என்றும் கூறுகிறது. ஒருவரை வெற்றிகொள்ள போர் சரியான வழியல்ல என்று ராமகிருஷ்ணர் கூறுவார். நீங்கள் களைகளை அழிக்க வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது களை உள்ள இடமெல்லாம் நெல்லை விளையுங்கள் என்பதுதான். ஈராக்கில் போருக்கு செலவிட்ட பணமான 10,0000000000 டொலரை ஈராக் உட்பட மத்திய கிழக்கு அமைதிக்கு செலவிட்டிருந்தால், பயங்கரவாதத்திற்கு துணை போகும் அனைவரையும் அங்குள்ள மக்களே தோற்கடித்திருப்பார்கள். புஷ் ராமகிருஷ்ணபரம ஹம்சரைப் படித்திருக்க வேண்டும்.

போரின் முடிவில் தன்னுடன் போர் புரிந்த சூரனை சேவலும் மயிலுமாக்கி தன்னோடு இணைத்து இருவரும் வென்ற ஒரு போரை உலகிற்கு அறிமுகம் செய்தான் தமிழ் முருகன்.

ஒருவரை வில்லனாக்கி, இன்னொருவரை கதாநாயகனாக்கி முடிவடைவது சினிமா, வாழ்விற்கு அதுபொருத்தமானதல்ல என்பதே ஈராக் போரின் ஐந்தாண்டுகள் தரும் பாடமாகும். ஈராக் போர் இனிவரும் காலங்களில் ஆயுதம் தூக்கும் அனைவருக்கும், அதைத்தூக்க முன்னர் எச்சரிக்கை தரும் அரிய பாடமாகும்.

நன்றி: அலைகள்

Email this page Your Opinion Print this page
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள்; மனித உரிமைமீறல்கள் மோசமடைவதன் வெளிப்பாடு
ஈராக் போரின் ஐந்தாண்டுகள் தரும் பாடம்
கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான தேர்த்திருவிழா
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com