Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள்; மனித உரிமைமீறல்கள் மோசமடைவதன் வெளிப்பாடு
[20 - March - 2008] [Font Size - A - A - A]
* இலங்கையில் செய்தியாளர்கள் அவர்களது கடமையை செய்யும் போது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதி யான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் மீது சொல்லாலும் செயலாலும் தாக்குதல் நடத்தும் அரசாங்க உறுப்பினர்கள் மீது பகிரங்கமாக கண்டனம் தெரிவிப்பது முக்கியமாகும். ரூபவாஹினி ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உட்பட நாட்டில் எங்காயினும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டால் அது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசாங்கம் உத்தரவிட வேண்டும்.

இலங்கையின் வட பகுதியில் ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரிந்து வரும் அதேவேளை நாட்டின் ஊடகவியலாளர்களில் ஒரு பிரிவினர் வித்தியாசமான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள். செய்தியாளர்கள் என்ற தமது தொழிலை தொடர்ந்து மேற்கொள்வதற்காகவே அவர்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

தொலைக்காட்சி, அச்சு ஊடகம், இணையத்தள வெளியீடு ஆகியவற்றில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட மூன்று சம்பவங்கள் காரணமாகவே இந்த மோசமான நிலைமை தோன்றியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பரவிய இந்த சம்பவங்கள் அனைத்திலும் ஊடக செயற்பாட்டாளர்கள் கண்டனங்களுக்கு உட்பட்டதுடன் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக உரிமை காப்பு அமைப்புக்கள் ஆத்திரமடைந்துள்ளன.

தெற்காசிய தீவு நாடான இலங்கையில் பரந்த அளவிலான பார்வையாளர்களைக் கொண்டுள்ள அரசாங்க தொலைக்காட்சியான ரூபவாஹினியை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றியே இந்நாட்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 14 ஆம் திகதி காலை, அரசாங்க தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் ஊழியர் அனுரசிறி ஹெட்டிகே கொழும்பின் சுற்றாடலில் பஸ்தரிப்பு நிலையம் ஒன்றில் காத்து நின்றபோது இரும்பு பொல்லினால் தாக்கப்பட்டார்.

கடந்த 3 மாதங்களில் தாக்குதலுக்கு அல்லது பயமுறுத்தலுக்கு உட்பட்ட ஐந்தாவது ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர் இவராவார். அரசாங்க அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ரூபவாஹினிக்குள் பலவந்தமாக பிரவேசித்து செய்திப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை அவதூறாக பேசிய சம்பவத்துடன் இந்தத் தாக்குதல்களுக்கு சம்பந்தம் இருப்பதாக ஊடக அமைப்புகள் தெரிவிக்கின்றன. அமைச்சர் சில்வா இராணுவ பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது ஆத்திரமடைந்த ஊழியர்கள் அவரைத் தாக்கியதுடன் அவர் மீது வர்ணக் குழம்பையும் வீசினர்.

இந்த சம்பவங்கள் எல்லாம் டிசம்பர் 27 சம்பவத்துடன் தொடர்புபட்டவையே என்று உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் பொட்டல ஜயந்த ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். டிசம்பர் 27 சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதே தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு வழி வகுத்துள்ளது என்றும் அவர் கூறினார். ஆனால் ரூபவாஹினி ஊழியர்களே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் ஜயந்த தெரிவித்தார்.

ஜயந்தவுக்கும் இனந்தெரியாத நபர்கள் பயமுறுத்தல் விடுத்துள்ளார்கள். ரூபவாஹினி சம்பவத்தை அடுத்து ஒரு நள்ளிரவில் ஜயந்தவின் வீட்டிற்குச் சென்றவர்களே அவரை மிரட்டியுள்ளார்கள். அமைச்சர் சில்வா பாதுகாப்பாக ரூபவாஹினியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட போது ஜயந்தவும் ரூபவாஹினியில் இருந்துள்ளார். அமைச்சர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியதை ஜயந்த கண்டித்து உரையாற்றியுள்ளார்.

கடைசியாக இடம்பெற்ற ஊடகவியலாளர் மீதான தாக்குதலை அடுத்து சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய பணிப்பாளர் ஜக்குலின் பார்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; இலங்கையில் செய்தியாளர்கள் அவர்களது கடமையை செய்யும் போது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் மீது சொல்லாலும் செயலாலும் தாக்குதல் நடத்தும் அரசாங்க உறுப்பினர்கள் மீது பகிரங்கமாக கண்டனம் தெரிவிப்பது முக்கியமாகும். ரூபவாஹினி ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உட்பட நாட்டில் எங்காயினும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டால் அது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசாங்கம் உத்தரவிட வேண்டும்.

ஹெட்டிகே தாக்கப்பட்ட அதே தினம், ஊடகவியலாளர் எம்.பரமேஸ்வரியின் மத்திய இலங்கையிலுள்ள கம்பளை இல்லம் மீது இனம் தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

எந்தவொரு பிரஜையையும் குற்றச்சாட்டின்றி தடுத்து வைத்திருப்பதற்கான பரந்த அதிகாரங்களைக் கொண்ட அரசாங்க பயங்கரவாத புலன் விசாரணைப் பிரிவு (Terrorism Investigation Department) கடந்த வருடம் பரமேஸ்வரியை 3 மாதங்கள் தடுப்புக் காவலில் வைத்திருந்தது.

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கென தனிநாடு ஒன்றை அமைப்பதற்காக கடந்த 3 தசாப்தங்களாக போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர்களுக்கு உதவியதாகவும் பரமேஸ்வரி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரைக் கைது செய்தவர்களால் அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் போனதையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

தாம் புலிகளுக்கு உதவுவதாக தமது கிராம மக்கள் கூறிவருவதால் தமது குடும்பத்தினரை சிலர் பயமுறுத்தி வருவதாக பரமேஸ்வரி கூறுகிறார். பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டதிலிருந்து அவரது பாதுகாப்புக்காக அவர் கொழும்பிலேயே வசித்து வருகிறார்.

இதேபோன்று, அண்மையில் 5 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பெரும்பான்மை சிங்களவர்களும் சிறுபான்மை தமிழருமான இந்த 5 ஊடகவியலாளர்களும் தற்போதைய இனப்பிரச்சினை சம்பந்தமாக நடப்பு நிகழ்வுகள் பற்றிய செய்திகளை வெளியிடும் "Outreachsl.com" என்ற இணையத் தளத்துடன் தொடர்புகளை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத புலன் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த 5 பேரில் மதிப்பு வாய்ந்த சுயாதீன ஆங்கில வாரப் பத்திரிகையான சன்டே ரைம்ஸின் பத்தி எழுத்தாளர் ஜயபிரகாஷ் திஸ்ஸநாயகமும் இணையத்தளத்தின் ஆசிரியரும் அடங்குவர்.

திஸ்ஸநாயகம் இணையத்தளத்துடன் தொடர்புள்ள மற்றும் நால்வருடன் கடந்த 7 ஆம் திகதியிலிருந்து பயங்கரவாத புலன் விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டு எதுவும் இன்னமும் சுமத்தப்படவில்லை. சட்ட ஆலோசனை பெறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. புலிகளிடமிருந்து நிதி பெற்றதாக அல்லது அவர்கள் சார்பில் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் இதை கண்டித்துள்ளன. இணையத்தளத்தை நடத்துவதற்கான நிதி சட்டபூர்வ வட்டாரங்களிலிருந்தே பெறப்பட்டதாக இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன. FLICT எனப்படும் பரிசில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள எல்லைகளற்ற நிருபர்கள் என்ற அமைப்பு இந்த இணையத்தளத்திற்கு தாமே நிதி வழங்கியதாக தெரிவித்துள்ளது. இணையத் தளத்தை நடத்துவதற்காக 2007 ஆம் ஆண்டு நவம்பரில் 12,000 யூரோவை (18,800 அமெரிக்க டொலர்) திஸ்ஸநாயகம் பெற்றுக் கொண்டதாக பரிஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

யுத்த நிலைமையை மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு நிதியளிக்கும் FLICT அமைப்புக்கு ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனம் ஒன்று ஆதரவளித்து வருகிறது. இந்த செய்தியாளர்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து நிதி பெறுவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவுப் பொலிஸார் குற்றம் சாட்டுகின்றார்கள். ஆனால் விசாரணை நடத்திய பின்னர் ஜேர்மன் நிறுவனமும் வெளிநாட்டில் வதியும் தமிழர்களும் இவர்களுக்கு நிதியளித்தார்கள் என்பதை தங்களால் உறுதிப்படுத்த முடியுமென எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தியாளர்கள் ஆரம்பத்தில் ஒப்புதல் வாக்குமூலத்தை பெறுவதற்காக கடுமையாக தாக்கப்பட்டமை குறித்து தாம் கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உண்மையில், அரசியல் யாப்பு விவகார அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுக்களும் சமாதான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் செயலகமும் FLICT அமைப்பின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளன.

தடுத்து வைக்கப்பட்ட 5 பேரில் ஒருவரான வி.ஜசிகரன் கிழக்கிலங்கையில் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஜேர்மனியில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து நிதியுதவி பெற்றுள்ளார் என்று எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே மோசமடைந்துள்ள மனித உரிமை பேணல் விவகாரம் மேலும் மோசமடைவதையே ஊடகவியலாளர்கள் மீதான தற்போதைய தாக்குதல்கள் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, 2006 ஆம் ஆண்டில் எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு வருடாந்த ஊடக நிலைமை பற்றி மேற்கொண்ட மதிப்பீட்டில் இலங்கை 141 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த 2002 ஆம் ஆண்டு மதிப்பீட்டில் இலங்கை 51 ஆவது இடத்தில் இருந்தது.

எவ்வாறாயிலும், அரசாங்கம் யதார்த்தத்தை வேறுவிதமாக நோக்குகிறது. நாட்டில் பூரண ஊடக சுதந்திரம் அனுபவிக்கப்படுகிறது என்று ஜனாதிபதி ராஜபக்ஷ வலியுறுத்திக் கூறினார். ஆங்காங்கே சில சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக அரசாங்க ஆங்கில தினசரியான டெய்லி நியூஸ் பத்திரிகை அதன் சனிக்கிழமைப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளது.

-ஐ.பி.எஸ்.-

Email this page Your Opinion Print this page
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள்; மனித உரிமைமீறல்கள் மோசமடைவதன் வெளிப்பாடு
ஈராக் போரின் ஐந்தாண்டுகள் தரும் பாடம்
கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான தேர்த்திருவிழா
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com