இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்பு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமைந்திருக்கும். அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டும் காதில் போட்டுக் கொண்டு செல்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தயாராகவில்லை என்பதை அவர்களுடைய அறிக்கை தெளிவாக உணர்த்தியிருக்கின்றது. மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ள போதிலும் மனித உரிமைகள் நிலை பெரும் கவலையளிப்பதாகவே இருக்கின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மிகப் பலமானவை. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் முதன்மையானது. அத்துடன், இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பான இணைத் தலைமையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு முக்கியமானது. இந்த நிலையில் இலங்கையில் உருவாகியுள்ள மோசமான மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அக்கறை கொள்வது இயற்கையானதுதான். இருந்த போதிலும் இந்த அக்கறை தமக்கு சாதகமாக இல்லாததால் இதனை ஒரு அநாவசியத் தலையீடு எனவும் ஆக்கிரமிப்பு எனவும் பேரினவாதிகள் கூறுவதற்கு முற்படுவார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்.
இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கியிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அரசாங்க மற்றும் எதிர்த் தரப்பு உறுப்பினர்களையும் மட்டுமின்றி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துப் பேசிய பின்னரே தமது கருத்துகளை வெளியிட்டிருக்கின்றது. பாரதூரமான மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு அதனைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச நிபுணர்கள் குழு நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தன்னுடைய கவனத்தைச் செலுத்தியிருந்தமையை அதன் அறிக்கையின் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் விவகாரத்தில் மோசமடைந்து வரும் சர்வதேச அபிப்பிராயத்தை மாற்றியமைப்பதற்கு வழி தெரியாமல் திண்டாடும் ஒரு நிலைமையிலேயே அது இருக்கின்றது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பிலான உண்மை நிலையை அம்பலமாக்கிக் கொண்டேயிருக்கின்றன.
இந்த நிலையில் தான் சில வாக்குறுதிகளை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவுக்குக் கொடுத்திருக்கின்றது. இந்த வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்படும் என்பது ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்குத் தெரியாவிட்டாலும் இந்த நாட்டு மக்களுக்கு அது நன்கு தெரியும்.
யுத்த நிறுத்தம் முறிவடைந்து, யுத்தம் தான் என்ற நிலை ஏற்பட்ட போதே மனித உரிமை மீறல்கள் மோசமடையத் தொடங்கியது. கொலை, கடத்தல், கப்பம் பெறுதல் போன்றவற்றின் பின்னணியில் படையினரும் துணை இராணுவக் குழுக்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட போதிலும் அதனையிட்டு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதிலாக - வழமைபோல மறுப்பறிக்கைகளையே வெளியிட்டுக் கொண்டிருந்தது. திருமலையில் இடம் பெற்ற 5 மாணவர்களின் படுகொலைகள் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் உண்மைகளை இப்போது அம்பலமாக்கிக் கொண்டிருக்கின்றது. சர்வதேச ரீதியாக உருவாகியுள்ள பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவே இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அரசாங்கம் உள்ளாகியது என்பது கவனிக்கத்தக்கது.
ஆக, அரச படைகள் எந்தளவு மோசமான மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டன என்பது இதன் மூலம் உறுதியாகின்றது. அரச படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதென்பது இந்த நாட்டைப் பொறுத்தவரையில் புதிய விடயமல்ல. இனநெருக்கடி தீவிரமடையத் தொடங்கிய காலத்திலேயே மனித உரிமைமீறல்களும் மோசமடையத் தொடங்கிவிட்டது. இவற்றில் சம்பந்தப்பட்டதாக ஆதாரங்களுடன் கைதானவர்கள் கூட எவ்வித தண்டனைகளுக்கும் உள்ளாகாமல் சுதந்திர புருஷர்களாகவே நடமாடுகின்றனர். இந்த நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் எந்தளவுக்கு நியாயமாக முன்னெடுக்கப்படும் என்பதும், அது தொடர்பான வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்படும் என்பதும் கேள்விக்குறிதான்.
விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பெனக் கூறி தடைவிதித்த ஐரோப்பிய ஒன்றியம், தமிழர்களுக் கெதிரான பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு காரணமான அரசாங்கத்துக்கு எதிராக எவ்வாறான அழுத்தங்களைக் கொடுத்தது? ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெறும் நிலையில் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
மனித உரிமைகள் நிலையை சரியான முறையில் புரிந்து கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அதனை மேம்படுத்துவதற்கு உரிய முறையில் அழுத்தங்களைக் கொடுப்பது அவசியம். வெறும் அறிக்கைகள் பலனைத் தரப்போவதில்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வது அவசியம்.