* சீனாவின் குற்றச்சாட்டையும் நிராகரிப்பு
திபெத்தில் நிகழும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு அழைப்பு விடுத்துள்ள ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா திபெத்தின் கலவரங்களுக்கு அவரே காரணமென்ற சீனாவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
மேலும், சீன மக்களுடன் இணைந்து வாழ வேண்டிய தேவை திபெத்தியர்களுக்கு இருப்பதாகவும் தலாய் லாமா குறிப்பிட்டுள்ளார்.
திபெத் தலைநகர் லாசாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 13 பேர் பலியானதாக சீனா தெரிவிக்கும் அதேவேளை, இதில் 99 பேர் பலியானதாக நாடு கடந்து வாழும் திபெத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சீனாவின் அடாவடித்தனத்தால் தமக்கு பாரிய இழப்பு ஏற்பட்டதாக தெரிவிப்பதற்கு ஆதாரமான புகைப்படங்களை திபெத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்தவார இறுதியில் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது சீன பாதுகாப்பு படையினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் இவை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த லண்டனிலுள்ள சீனத் தூதரகத்தின் அதிகாரியொருவர் இப் படங்களிலிருந்து நடந்த சம்பவங்களை தீர்மானிப்பது கடினமெனவும் இப் படங்கள் உண்மையைப் புலப்படுத்தக் கூடியதாக இருந்தால் அதற்கான விளக்கம் கோரப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திபெத்திய கலகக்காரர்களை தாம் கையாண்ட விதத்தை விளக்கும் ஒளிநாடாவை சீன அதிகாரிகளும் வெளியிட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவிலுள்ள தராம்சாலா என்னுமிடத்தில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த தலாய்லாமா!
மனித இயற்கைக்கு எதிரானவையே வன்முறைகள். சீனர்களுக்கு எதிரான உணர்வுகளை நாம் கட்டியெழுப்பவில்லை. நாங்கள் இணைந்து வாழவே விரும்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவிடமிருந்து திபெத் சுயாட்சி அதிகாரத்தை விரும்புகிறதே தவிர சுதந்திரத்தைக் கோரவில்லையென வலியுறுத்தியுள்ள தலாய் லாமா இக் கலவரங்களுக்கு தலாய் லாமாவே மூலகாரணமென்ற சீனப் பிரதமர் வென் ஜியாபோவின் குற்றச்சாட்டையும் நிராகரித்துள்ளார்.
அத்துடன், இவ் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென தலாய் லாமா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.