Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
பெற்றோரின் சமாதிகளுக்கு அருகே அநுராவின் பூதவுடல் நல்லடக்கம்
[20 - March - 2008] [Font Size - A - A - A]
* சுனேத்ரா, சந்திரிகா கண்ணீருடன் சகோதரனுக்கு இறுதி விடை

எம்.ஏ.எம்.நிலாம்

அநுரா பண்டாரநாயக்கா எம்.பி.யின் பூதவுடல் நேற்று புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு அன்னாரின் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த மூன்று தினங்களாக ஹொரகொல்லையிலுள்ள பண்டாரநாயக்கா குடும்பத்தின் வீட்டில் அமரர் அநுரா பண்டாரநாயக்காவின் பூதவுடல் மக்களஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று தினங்களிலும் கம்பஹா மாவட்டம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

செவ்வாய்க்கிழமை மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் அஞ்சலி செலுத்தியதாக இறுதிச் சடங்கு ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

நேற்று பகல் 12 மணி வரை பொதுமக்களஞ்சலிக்காக உடல் ஹொரகொல்லை வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பிற்பகல் 2 மணிக்கு சமயக்கிரியைகள் நடைபெற்றதன் பின்னர், அநுராவின் உடலைத்தாங்கிய பேழை விசேட வண்டியில் வைத்து அன்னாரது பெற்றோர்களான அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஹொரகொல்லை சமாதிக்கு எடுத்துவரப்பட்டது.

உறவினர்களால் எடுத்துவரப்பட்ட பூதவுடலைத் தாங்கிய பேழை ஹொரகொல்லை சமாதி வாயிலில் வைத்து கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்களால் பொறுப்பேற்கப்பட்டு றோயல் கல்லூரி கொடியினால் பேழையைப் போர்த்தி விசேட மேடைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அத்தனகலை ரஜ மகா விகாராதிபதியின் தலைமையில் பௌத்த சமயக் கிரியைகள் நடத்தப்பட்டதன் பின்னர் இரங்கலுரைகள் நிகழ்த்தப்பட்டன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்திருந்த இரங்கலுரையை அமைச்சர் டி.எம்.ஜயரட்ன வாசித்தார். அதன் பின்னர் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, சபாநாயகர் லொக்கு பண்டார, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அரசியல் தலைவர்களும் பிரதேச முக்கியஸ்தர்களும் அவர் கல்வி கற்ற றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்க சார்பிலும் இரங்கலுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இறுதியில் பண்டாரநாயக்காவின் குடும்ப உறவினர் ஒருவரால் நன்றியுரை வழங்கப்பட்டது.

மாலை 5.10 மணிக்கு பேழையை போர்த்தியிருந்த றோயல் கல்லூரி கொடியை பழைய மாணவர்கள் ஐவர் வந்து அகற்றியதன் பின்னர் உடலைத் தாங்கிய பேழை குடும்பத்தினரால் அமரர் பண்டாரநாயக்காவின் சமாதியை மூன்று தடவை சுற்றிக் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் மாலை 5.15 மணிக்கு பூதவுடல் அன்னாரது பெற்றோர்களின் சமாதிகளுக்கருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவரது சகோதாரிகளான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் சுனேத்ரா பண்டாரநாயக்காவும் சமாதியருகே சென்று தமது சகோதரருக்கு இறுதி அஞ் சலியை செலுத்தினர்.

இறுதிச் சடங்கில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதோடு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் பல வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்துகொண்டு பண்டாரநாயக்கா குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசுக்கு தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி விடை கொடுத்தனர்.

நேற்று நண்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பு கண்டி வீதியில் கலகெடி ஹேன சந்தியிலிருந்து நிட்டம்புவ வரையிலான பிரதான பாதை போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com