பிரிட்டிஷ் கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் அன்ரூ செலாஸ் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த தகவல்களில் ஷ்ரீலங்காவில் இயங்கும் புலிகள் இயக்கத்தினர் திருட்டுக் குழுவினர் எனவும் இவ்வாறு நியூயோர்க்கில் வைத்து அவருடைய மனைவியின் `கிரடிற்காட்' கடன் அட்டைகளை ஷ்ரீலங்கா புலிகள் இயக்க உறுப்பினர்களே களவாடியுள்ளதாகவும் அவற்றைப் பயன்படுத்திப் பெருந்தொகையான பணத்தை அவர்கள் திருட்டுத்தனமாகப் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுபற்றி பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் அன்ரூ செலொஸ் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவிக்கையில் அவருடைய மனைவி இந்த வருடம் ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுலாவுக்குச் சென்று நியூயோர்க் நகரில் தங்கியிருந்த பொழுது அவருடைய "கிரடிற் காட்" கடன்அட்டைகளிலிருந்து நியூயோர்க்கில் 1000 பவுண்கள் களவாடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த மோசடிகளை ஷ்ரீலங்கா புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆட்களே செய்திருப்பதாகவும் இதை உறுதிப்படுத்தும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் இதனைப் பாராளுமன்றத்தில் நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் இவ்வாறான பயங்கரவாத அமைப்பின் செயற்பாடுகளுக்கும் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கும் எதிராக அவற்றை முற்றாகத் தடுத்து நிறுத்துகையில் பிரிட்டிஷ் அரசு அந்த இயக்கத் தொடர்புகளுக்கான கதவுகளை மூடிவிட வேண்டும் எனவும் மேற்படி பிரிட்டிஷ் கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் அன்ரூ செலொஸ் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இவ்வாறு ஷ்ரீலங்காவைச் சேர்ந்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் குழுவினர் பிரிட்டனில் மேற்கொண்டதாக பிரிட்டிஷ் குற்ற விசாரணைப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு புலிகளின் குற்றச் செயல்கள் பற்றி வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையையும் அன்ரூ செலொஸ் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கைக்கு ஏற்ப புலிகள் இயக்க உறுப்பினர்கள் பிரிட்டனில் "கிரடிற்காட்' கடன் அட்டை மோசடிகளைப் பெரும் எண்ணிக்கையில் செய்து பெருந்தொகையில் பணத்தைக் களவாடிவிட்டார்கள் எனவும், இவ்வாறு லண்டனில் மட்டும் 745 கடன் அட்டை உரிமையாளர்களிடமிருந்து கடன் அட்டைத் திருட்டுகளைச் செய்து பெரும் தொகை பணத்தைச் சூறையாடி இருப்பதை மேற்படி பிரிட்டிஷ் குற்றவியல் விசாரணை அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் அன்ரூ செலொஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வகையில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைதேர்ந்த "பிக்பொக்கெற்"காரர்கள் போல் லண்டன் நகரமெங்கும் நடமாடி வருகிறார்கள் என மேலும் பிரிட்டிஷ் கொன்சர்வேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் புலிகளுக்கு எதிராகப் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லங்காதீப வெளிநாட்டுப் பத்திரிகைகள் பகுதி: 16.03.2008