அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் மிர்பூரில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து, முதலில் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய போர்டர்பீல்ட் (1), ஸ்ட்ரைடம் (8) இருவரும் குறைந்த ஓட்டங்களில் மொர்டாசா பந்தில் ஆட்டமிழந்தனர்.
மோர்கன் (35) ஓரளவு ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முடியாமல் பெவிலியன் திரும்பினர். குசாக் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்து மொர்டாசா பந்தில் ஆட்டமிழந்தார். கப்டன் ஜான்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் மொர்டாசா 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு பங்களாதேஷ் அணி களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் தமிம் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், நபீஸ் சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தார். அப்தாப் 11 ரன்களில் வெளியேறிய நிலையில், நபீசும், கப்டன் அஷ்ரபுல்லும் ஜோடி சேர்ந்து அயர்லாந்தின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இவர்களை பிரிக்க அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் கடும் முயற்சி எடுத்தும், கடைசி வரை முடியவில்லை. இருவரும் அரைச்சதம் அடித்ததுடன் மூன்றாவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து மிரட்டினர். 39.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி இழக்கை எட்டியது.
சிறப்பாக விளையாடிய நபீஸ் 90 ரன்களுடனும், கப்டன் அஷ்ரபுல் 64 ரன்களுடனும் ஆட்டமிழக்காமலிருந்தனர். அயர்லாந்து சார்பில் லாங்போர்ட், ஜான்ஸ்டன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய பங்களாதேஷின் மொர்டாசா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.