இந்திய முன்னாள் அணி உலகக் கிண்ண வெள்ளி விழாவை கொண்டாடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.கபில்தேவ், சந்தீப் பட்டேல் உள்ளிட்ட ஜாம்பவான்கள் எதிர் அமைப்பான ஐ.சி.எல். பக்கம் உள்ளனர். இதையடுத்து இவர்களை கௌரவிப்பதா.... வேண்டாமா என்ற குழப்பத்தில் இந்திய கிரிக்கெட் உள்ளது.
1983 இல் இங்கிலாந்தில் உலகக் கிண்ணப் போட்டி நடந்தது. இதில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. `கபில் டெவில்ஸ்' என வர்ணிக்கப்படும் அளவுக்கு எதிரணிகளை போட்டுத் தாக்கியது. உதாரணமாக லீக் சுற்றில் சிம்பாப்வேக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்கள் எடுத்து திணறியது. இந்த நேரத்தில் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட கபில் 175 ஓட்டங்களை விளாசினார். இறுதியில் 8 விக்கெட்டுக்கு 266 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி, சிம்பாப்வேயை (235 ஓட்டங்கள்) வீழ்த்தியது.
தனது வெற்றிநடையை தொடர்ந்த இந்திய அணி 1983, ஜூன் 25 ஆம் திகதி நடந்த இறுதியாட்டத்தில் கிளைவ் லொய்ட் தலைமையிலான மேற்கிந்திய அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.இந்த மகத்தான வெற்றி பெற்று 25 ஆண்டுகள் நெருங்குகிறது. ஜூன் 25 ஆம் திகதி வெள்ளிவிழா கோலாகலமாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் உலகக் கிண்ண நாயகர்களான கபில்தேவ், மதன் லால், பல்விந்தர் சிங் சந்து, சந்தீப் பட்டேல் உள்ளிட்டோர் எதிர் அமைப்பான இந்தியன் கிரிக்கெட் லீக்கில் (ஐ.சி.எல்.,) உள்ளனர். இதனால், விழா நடத்துவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபைக்கு (பி.சி.சி.ஐ.,) பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத் தொடரில் 303 ஓட்டங்கள் (சராசரி 60.6) எடுத்து மிகச் சிறந்த சகலதுறை வீரராக பிரகாசித்த கபில்தேவ், தற்போது ஐ.சி.எல்., அமைப்பின் செயற்குழு தலைவராக உள்ளார். தங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட அமைப்பில் சேர்ந்ததால் கபிலுடன் உறவை பி.சி.சி.ஐ., முழுமையாக துண்டித்துக் கொண்டது. இவரை தேசிய கிரிக்கெட் அக்கடமியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது.
மதன் லால் தற்போது ஐ.சி.எல்., `டில்லி ஜயன்ட்ஸ்' அணியின் பயிற்சியாளராக உள்ளார். மற்றொரு அணியான `சண்டிகர் லயன்சிங்' பயிற்சியாளராக பல்விந்தர் சிங் சந்து பணியாற்றி வருகிறார். `மும்பை சாம்ப்ஸ்' அணியின் பயிற்சியாளராக சந்தீப் பட்டேல் உள்ளார். இவர்கள் அனைவரையும் பி.சி.சி.ஐ., ஏற்கனவே கடுமையாக கண்டித்தது. இந்தச் சூழலில் வெள்ளி விழா நடத்தப்பட்டால், இவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது ஐ.சி.எல்., க்கு சவாலாக இந்திய கிரிக்கெட் சபை சார்பில் ஐ.பி.எல்., (இந்தியன் பிரிமியர் லீக்) `ருவென்ரி -20' அதிரடி போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகள் ஏப்ரல் 18 ஆம் திகதி தொடங்கவுள்ளது. இதற்கான பணிகளில் பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் மிகவும் `பிஸியாக' உள்ளனர்.
இது குறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், "வெள்ளி விழாவுக்கு போதிய கால அவகாசம் இருக்கிறது. இவ்விடயம் பற்றி 25 ஆம் திகதி சென்னையில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். கபில்தேவ் உள்ளிட்டவர்கள் எதிர் அமைப்பில் இருப்பதால் பிரச்சினை இல்லை. அனைவரும் கௌரவிக்கப்பட வாய்ப்புள்ளது" என்றார்.