Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
சேர் ஆர்தர் சி.கிளார்க்
[21 - March - 2008] [Font Size - A - A - A]
தொலைநோக்கு ஆற்றல் மிக்க மேதையும் விஞ்ஞான புனைகதை எழுத்தாளருமான சேர் ஆர்தர் சி.கிளார்க் தனது 90 ஆவது வயதில் நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பில் காலமானார். உலகளாவிய கௌரவத்தைப் பெற்ற அவரது மரணம் விஞ்ஞான - தொழில் நுட்ப உலகிற்கான தனது பங்களிப்புகளின் மூலமாக இலங்கைக்கு சர்வதேச அரங்கில் பெருமையைத் தேடித்தந்த முதன்மையான ஒரு பிரஜையை எம்மத்தியில் இருந்து அகற்றியிருக்கிறது. இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் சொமசெற் நகரில் ஒரு விவசாயியின் மகனாக 1917 டிசம்பர் 16 இல் பிறந்த கிளார்க், 1954 ஆம் ஆண்டு முதற் தடவையாக இலங்கை வந்தார். 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அவர் தனது நாடாக்கிக் கொண்டார். கிளார்க் மீது தாங்கள் கொண்டிருக்கும் பெருமதிப்புக் காரணமாக சில வெளிநாட்டவர்கள் இலங்கையை `கிளார்க்கின் நாடு' என்று கூட அழைப்பதாகக் கூறப்படுகிறது.

நூறுக்கும் அதிகமான நூல்களை எழுதியதன் மூலம் உலகெங்குமுள்ள விஞ்ஞானிகளுக்கு உதவிய சேர் கிளார்க், விண்வெளி ஆராய்ச்சியுகத்திற்குள் உலகைத் தள்ளிவிடுவதில் மகத்தான பங்களிப்பைச் செய்திருக்கிறார். செய்மதிகளை விண்வெளிக்கு செலுத்தி பூமியை வலம்வரச்செய்வதன் மூலமாக தொலைத்தொடர்புத் துறையில் பிரமாண்டமான புரட்சியைச் செய்ய முடியுமென்று முதலில் யோசனை தெரிவித்தவர் கிளார்க் ஆவார். 2000 ஆம் ஆண்டளவில் மனிதன் சந்திரனைச் சென்றடைவான் என்று 1940 களிலேயே கிளார்க் எதிர்வு கூறியிருந்தார். அப்போது அமெரிக்கர்கள் அவரின் கருத்தை அபத்தம் என்று வர்ணித்துப் பரிகாசம் செய்தனர். ஆனால், 1969 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் காலடி வைத்த போது `சந்திரனுக்கான தங்கள் பயணத்துக்குத் தேவையான புத்திஜீவித்துவ உந்துதலைத் தந்தவர் ஆர்தர் சி.கிளார்க் தான்' என்று அமெரிக்கர்கள் அவரை வியந்துபாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. `2001; அண்டவெளியில் ஒரு நெடும் பயணம்' (2001;A Space Odyssey) என்ற தனது நாவலிலேயே கிளார்க் மனிதன் சந்திரனைச் சென்றடையும் சாத்தியம் குறித்து எழுதியிருந்தார். 1945 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் `கம்பியில்லா தந்தி உலகம்' (Wireless World) என்ற சஞ்சிகையில் பிரசுரமான தனது ஆய்வுக்கட்டுரையொன்றில் தொலைத்தொடர்பு செய்மதி கோட்பாடு குறித்து கிளார்க் விளக்கமளித்திருந்தார். அவரது கனவு நிறைவேறுவதற்கு கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் எடுத்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் விண்கலங்களை உருவாக்குவது குறித்தும் அவற்றை விண்ணில் செலுத்துவதற்கான பொறிமுறைகள் குறித்தும் அமெரிக்க விஞ்ஞானிகளுடனும் பொறியியலாளர்களுடனும் சேர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். விண்வெளியை சமாதான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கிளார்க் ஆற்றிய உரை பெரிதும் பாராட்டைப் பெற்றது.

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்காக கிளார்க் வழங்கிய பங்களிப்பு சிறப்புமிக்கதாகும். தொலைத் தொடர்புச் செய்மதி கோட்பாட்டை வளர்த்தெடுத்தமைக்காக அவருக்கு பல விருதுகள் கிடைக்கப்பெற்றன. ஆனால், தொடர்ச்சியாக ஏராளமான விஞ்ஞானப் புனைகதைகளை எழுதிக் குவித்ததன் மூலமாக இலக்கிய உலகில் அவருக்கு தனித்துவமான இடம் ஒன்று உண்டு. கடந்தவருடம் தனது 90 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் தனது நண்பர்கள் மற்றும் நேயர்கள் மத்தியில் பேசிய கிளார்க், சகலவற்றுக்கும் மேலாக ஒரு எழுத்தாளர் என்ற வகையில் நினைவுகூரப்படுவதையே தான் விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். போலியோ நோயின் விளைவான பாதிப்பு காரணமாக கடந்த பல வருடங்களாக சக்கரநாற்காலியிலேயே தனது வாழ்வைக் கழித்த இந்த மேதை, இறுதியாகக் கொண்டாடிய அந்த பிறந்ததின வைபவத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தனது மூன்று இறுதி ஆசைகளை வெளியிட்டார். வேறு கிரகங்களிலும் ஜீவராசிகள் இருக்கின்றனவா என்பதற்கான சான்றைக் காண்பதற்கான ஆசை, பெற்றோலியப் பொருட்களில் தங்கியிராமல் தூய்மையான எரிபொருட்களை மனிதன் பயன்படுத்துவதைக் காண்பதற்கான ஆசை, இலங்கையில் தொடரும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து அமைதி, சமாதானம் திரும்புவதைக் காண்பதற்கான ஆசை. கிளார்க்கின் மறைவுக்கு சமுதாயத்தின் சகலமட்டங்களில் இருந்தும் அனுதாபமும் அஞ்சலியும் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளும் அனுதாபத்தைத் தெரிவித்த வண்ணமிருக்கிறார்கள். இலங்கையில் அமைதி, சமாதானம் ஏற்படுவதைக் காண்பதில் கிளார்க்கிற்கு இருந்த ஆசையை இந்த அரசியல்வாதிகள் நன்கு அறிவார்கள். உலகம் போற்றும் அந்த நிபுணர் கடந்த 52 வருடங்களாக தனது நாடாக்கிக் கொண்ட இலங்கையில் போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்புவதற்கு அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா? அவரின் முதல் இரு ஆசைகள் நிறைவேறினாலும் கூட, மூன்றாவது ஆசை நிறைவேற எமது அரசியல்வாதிகள் அனுமதிப்பார்கள் என்று நாம் நம்புவதற்கு நாதியில்லை!

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com