அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தெரிவுக்காக மாநிலங்கள் தோறும் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட தேர்தல்களில் மிச்சிக்கன் மாநிலத்திற்கான வாக்கெடுப்பை மீள நடத்துமாறு செனட்டர் ஹிலாரி கிளின்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தெரிவு செய்வதற்கான போட்டி செனட்டர் பராக் ஒபாமாவிற்கும் ஹிலாரி கிளின்டனுக்குமிடையில் தீவிரமடைந்திருக்கும் நிலையிலேயே ஹிலாரி இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் மிச்சிக்கன் மற்றும் புளோரிடா மாநிலங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்ட போதும் இரு மாநிலங்களும் கட்சி விதிகளை மீறியுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில் இதன் முடிவுகள் தேசிய கட்சியினால் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.
இம் மாநிலங்களில் ஹிலாரி வெற்றி பெற்றுள்ளமையால் இதில் கிடைக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையானது ஒபாமாவை வெற்றிகொள்ள உதவுமென ஹிலாரி கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனநாயகக் கட்சிக்கான தேர்தலை மிச்சிக்கன் மாநிலத்தில் மீள நடத்துவதற்கான தனது கோரிக்கைக்கு ஒபாமா ஆதரவளிக்க வேண்டுமெனவும் ஹிலாரி கேட்டுக் கொண்டுள்ளார். மிச்சிக்கன் மற்றும் புளோரிடா மாநிலத்தின் வாக்குகளை மீள எண்ணவேண்டும் அல்லது முழுமையான தேர்தல்கள் மீள நடத்தப்பட வேண்டுமென ஹிலாரி கோரியுள்ளார். ஹிலாரியின் இக் கோரிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்க ஒபாமா கூடியளவான பிரதிநிதிகளின் எண்ணிக்கையைப் பெறும் அரசியல் கணிப்பீட்டின் அடிப்படையிலேயே ஹிலாரி இக் கோரிக்கையை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இங்கு தேர்தலை மீளவும் நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லையென நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.