*ஜனாதிபதி புஷ்
ஈராக்கிலிருந்து தற்போது அமெரிக்கப் படைகள் வெளியேறினால் அயல்நாடான ஈரான் அல்-ஹைடா போராளிகளைப் பயன்படுத்தி அமெரிக்காவைத் தாக்க முயற்சிக்குமென அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டில் ஈராக்கை அமெரிக்க படைகள் ஆக்கிரமித்தன. அந்நாட்டின் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அங்கு அடிக்கடி குண்டு வெடிப்புகள் நடைபெறுகின்றன. அமெரிக்க வீரர்கள் 3,990 பேர் இதுவரை இப்போரில் இறந்துள்ளனர்.
இந்நிலையில் ஈராக்கை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து 5 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வாஷிங்டனிலிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் புஷ் உரையாற்றினார்.
ஈராக் போரில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அரசுக்குப் பெரும் செலவு ஏற்பட்டுள்ளது. எனினும், அதற்காக கவலைப்படவில்லை. அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டுமென வாஷிங்டனில் சிலர் கூறுகின்றனர்.
அப்படி வாபஸ் பெற்றால் அல் ஹைடா பயங்கரவாதிகளுக்கு ஈரான் உதவும். பணமும் பயங்கர ஆயுதங்களும் பயங்கரவாதிகளுக்குக் கொடுத்து அமெரிக்காவைத் தாக்க ஈரான் தூண்டும். ஈராக் போரில் அமெரிக்காவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதனால்தான் என்னை குறை சொல்பவர்கள் இந்தப் போரினால் அரசுக்கு அதிக செலவு ஏற்படுகிறது என்றும் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் புஷ்ஷின் ஈராக் மீதான கொள்கையை கடுமையாக விமர்சிக்கின்றனர். ஈராக்கில் புதிய அரசை ஏற்படுத்துவதும் அங்குள்ள பல்வேறு பிரிவினரிடையே உள்ள மோதலை நிறுத்துவதும் அந்தநாட்டு மக்களின் பொறுப்பு. அந்த வேலையில் ஈடுபடாமல் அமெரிக்கப் படைகள் திரும்பி வர வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஜான் டிங்கெல் கூறுகிறார்.