கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பரந்துபட்டளவில் கூட்டமைப்பொன்றை உருவாக்கி அதில் போட்டியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்புக்கு பத்துக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசின் ஆதரவுடன் குதித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றதையடுத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் மிகப்பெரும் கூட்டமைப்பொன்றை அமைத்து வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.
இதுவரை இந்தக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட பத்துக் கட்சிகள் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட முன்வந்துள்ள கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி (ஜனநாயகப்பிரிவு) , ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைத் தவிர ஏனையவை ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிப்பவை.
தற்போதைய நிலையில் கிழக்கு மாகாணத் தேர்தலுக்கான பரந்துபட்ட கூட்டமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதியின் சகோதரரும் எம்.பி.யு.மான பசில் ராஜபக்ஷவே அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதுவரையான பேச்சுகள் மூலம் இந்தக் கூட்டமைப்பில் இணைந்து கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி (ஜனநாயக பிரிவு) , ஜாதிக ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) , தேசிய முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் ஐக்கிய முன்னணி (எம்.ஈ.பி), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட பத்துக் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டமைப்பில் ஏற்கனவே, அங்கம் வகித்த ஜே.வி.பி. இம்முறை கிழக்கு தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதேநேரம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்(பத்மநாபா அணி) அமைப்புகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளன.
இந்தநிலையில், இத்தேர்தலில் தங்களுடன் இணைந்து போட்டியிட வருமாறு ஜே.வி.பி.க்கும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுகள் நடத்தியிருந்தார். இதற்கான பதிலை அவர் இன்று தெரிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.