* அனுதாப செய்தியில் ஜனாதிபதி ராஜபக்ஷ
ஆர்தர் சி கிளார்க்கின் முக்கியமான மூன்று விருப்பங்களில் ஒன்றான இலங்கையில் நிலையான சமாதானத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தனது சக்திக்கு உட்பட்ட சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானியும் விஞ்ஞான புனைகதை எழுத்தாளருமான ஆர்தர் சி கிளார்க்கின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் ஆர்தர் சி கிளார்க்கின் இந்த விருப்பமே சகல இலங்கையர்களினதும் விருப்பம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அனுதாப செய்தியில் ஜனாதிபதி ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது;
வெளிநாட்டில் பிறந்து இலங்கையை தனது இல்லமாக வரித்துக் கொண்ட மிகவும் புகழ்பெற்றவரான ஆர்தர் சி கிளார்க்கின் மறைவையிட்டு நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.
1956 தொடக்கம் இலங்கையில் வாழ்ந்த ஆர்தர் சி கிளார்க், நாட்டுக்கு புத்தி ஜீவித்தனம், கலாசாரம், அறிவியல் துறைகளில் இலங்கையின் அபிவிருத்திக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அதேசமயம் அவருடைய விஞ்ஞானத்துறை ஆராய்ச்சியினதும் எழுத்துத்துறை படைப்பும் உலகளாவிய ரீதியில் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது.
அவர் இந்த நாட்டுக்கு ஆற்றிய பணிகளால் இலங்கை மக்கள் அவர் மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்தனர். விசேடமாக இயற்கை வளங்களையும் சுற்றாடலையும் பாதுகாப்பது தொடர்பாக அவர் மிகுந்த முயற்சியுடன் செயற்பட்ட விதம் மக்களைப் பெரிதும் ஈர்த்திருந்தது. இன்று மிக முக்கியமான விடயமாகியுள்ள காலநிலை மாற்றம் குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே அவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
2004 இல் கடல்கோள் அனர்த்தம் இடம்பெற்றதை தொடர்ந்து உடனடி நிவாரணம் தொடர்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் கடல்கோள் எச்சரிக்கை முறைமையின் தேவை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்தை திருப்ப மேற்கொண்ட செயற்பாடும் எப்போதுமே நினைவில் நீடித்திருக்கக் கூடியவையாகும்.
எழுத்தாளர், தூர நோக்குடையவர், விண்வெளி ஆய்வின் முன்னோடி, செய்மதி தொடர்பாடல்களின் கர்த்தா, உன்னதமான மனிதாபிமானி, விலங்குகளில் அன்பு கொண்டவர் ஆகிய உயர்ந்த தன்மைகளை கொண்டவராகிய ஆர்தர் சி கிளார்க் இலங்கையின் தனித்துவமான பிரஜை என்பதையிட்டு நாம் எல்லோரும் பெருமைப்படுகின்றோம்.
சில மாதங்களுக்கு முன்பு தனது 90 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய ஆர்தர் சி கிளார்க் மூன்று முக்கியமான விருப்பங்களை வெளியிட்டிருந்தார். அவற்றில் ஒன்று சாத்தியமான அளவுக்கு விரைவாக இலங்கையில் நீடித்த சமாதானம் தோன்றுவதை பார்க்க வேண்டும் என்பதாகும்.
இந்த துயரமான வேளையில் அவருடைய மறைவால் உலகம் அடைந்திருக்கும் கவலையில் இலங்கையும் இணைந்து கொள்கிறது.
அதேவேளை, அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற எனது அரசாங்கம் தனது சக்திக்குட்பட்ட வகையில் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமென உறுதியளிக்கிறேன். இதுவே, சகல இலங்கையரினதும் விருப்பமாகும்.