* விரைவில் அம்பலப்டுபடுத்துவோம்; சோமவன்ச அமரசிங்க
-டிட்டோகுகன்-
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக காட்டிக் கொள்ளும் இந்தியா கிழக்கில் மக்களின் வளங்களை சூறையாடுவதாக கடும் குற்றச்சாட்டை தொடுத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முடிந்தால் அவர்களை, இந்தியாவை வெளியேற்றுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கொழும்பில் தேசிய நூலக ஆவணங்கள் சபை கேட்போர்கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த சவாலை விடுத்த ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, சம்பூர் விடுவிக்கப்பட்ட பின் அதிகளவு பயனைப் பெறுவது இந்தியாவே என்றும் அங்கு அனல் மின் நிலையத்தை அமைத்து முழு இலாபத்தையும் இந்தியாவே பெற்றுக்கொள்ளப்போவதாகவும் சாடினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் நாம் போட்டியிடுவோம். இதில் மக்கள் அச்சம், சந்தேகமின்றி வாக்களிக்கும் வகையிலான சூழ்நிலையை ஏற்படுத்த நாம் செயற்படுவோம்.
கிழக்கில் மாகாண சபை தேர்தலை நடத்துவது ஜனநாயக வெற்றியாகும். பயங்கரவாதத்தை தோற்கடிக்க படையினருக்கு பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியை ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தங்களது இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏனெனில், இவ்வாறெல்லாம் நடப்பதனாலேயே நாம் இதனைக் கூறுகிறோம்.
இதேநேரம், கிழக்கில் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாக அரசும் படையினரும் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எனினும், கிழக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிள்ளையான் அணியினர் ஆயுதங்களுடன் போட்டியிட்டனர். தங்களது பாதுகாப்புக்கென கூறி அணியொன்று ஆயுதங்களுடன் தேர்தலில் போட்டியிடுவதை எம்மால் ஏற்க முடியாது.
அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமாயின் பாதுகாப்பு படையினரைக் கொண்டு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து ஜனாதிபதி பிள்ளையான் அணியினரை ஆயுதங்களுடன் தேர்தலில் போட்டியிட அனுமதித்து ஆயுதங்களை தேர்தலுக்கு மறைமுகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். பாதுகாப்பு படையினரைக் கொண்டு ஜனாதிபதி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்காததற்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன.
இந்த நாட்டில் ஆயுதம் தாங்கிய படையொன்று மட்டுமே இருக்க முடியும். இல்லாவிட்டால் கிழக்கை மீட்டது பொய்யாகிவிடும். அரசாங்கம் என்றாலும் அல்லது வேறு எவராக இருந்தாலும் சரி ஆயுதங்களை தேர்தலுக்கு பயன்படுத்த முடியாது. பிள்ளையான் அணியினரிடமிருந்து ஆயுதங்களை அரசாங்கம் மீளப்பெறாதது ஏனென எம்மைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வினவுகின்றனர்.
இதேநேரம், 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கத்துக்கு நடைமுறைப் படுத்த முடியாமலில்லை. எனினும், ஒரு நோக்கத்திற்காகவே அரசாங்கம் இப்படி செய்கிறது. தேர்தல் சட்டத்தை மீறவே அரசு இவ்வாறு செயற்படுகிறது. பிரபாகரனை போலவே அரசாங்கமும் இன்று ஜனநாயகத்துக்கு பயப்படுகிறது. சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் போல் வந்த இந்தியா இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் காணிகளை கைப்பற்றி அப்பகுதியிலுள்ள மக்களுக்கு சொந்தமான வளங்களை சூறையாடி வருகிறது. இது முழு விபரங்களுடன் விரைவில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும்.
குறிப்பாக சம்பூர் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அதில் பயன்பெறுவது இந்தியா தான். அங்கு அனல்மின்நிலையத்தை நிறுவி அதன் முழு இலாபத்தையும் இந்தியாவே பெறப் போகிறது. இதை இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகரும் (நிருபமாராவ்) எம்மிடம் தெரிவித்திருக்கிறார். எனவே, முடிந்தால் இவர்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதிக்கு நாம் சவால் விடுக்கிறோம்.
திருகோணமலை துறைமுகத்தையும் இந்தியா கைப்பற்றி வருகிறது. இதுபற்றி சரியான தகவல்கள் வெளிப்படுத்தப்படும். எனவே, இந்தியா தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. இந்தியா தமிழ் மக்களின் விடுதலை விரும்பிகள் இல்லை. அது தமிழ் மக்களின் வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய வாதிகள் போல் இலங்கை மீது செயற்படுகிறது.
இந்தியாவை நாடு என்ற வகையிலோ அரசு என்ற வகையிலோ நாம் கண்டிக்கவில்லை. எமது நாட்டு விடயங்களில் தலையீடு செய்யும் அதிகாரப்போக்கையே நாம் கண்டிக்கிறோம்.
எனவே, இந்தியா உட்பட மேலைத்தேய அதிகார வர்க்கத்தினரை எமது நாட்டு உள் விவகாரங்களில் தலையிட இடமளிக்கக் கூடாது என்றார்.
இதேநேரம், கிழக்கு மாகாண தேர்தலில் ஜே.வி.பி. தனித்தே போட்டியிடத் தீர்மானித்திருப்பதாகவும் அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லையென்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா தெரிவித்தார்.