Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
மீண்டும் டரல்ஹேர் ; ஆசிய நாடுகள் போர்க்கொடி தூக்குகின்றன
[21 - March - 2008] [Font Size - A - A - A]
டரல் ஹேர் சர்ச்சை மீண்டும் வெடிக்கிறது. சர்வதேச போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற இவருக்கு ஐ.சி.சி. அனுமதியளித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

2006 ஆம் ஆண்டு ஓவலில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி நடந்தது. நான்காம் நாள் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப் படுத்தியதாக டரல் ஹேர் குற்றம் சாட்டினார். இதற்கு அபராதமாக இங்கிலாந்துக்கு 5 ஓட்டங்களை வழங்கினார். உடனே அப்போதைய கப்டன் இன்சமாம் தேநீர் இடைவேளைக்குப் பின் களமிறங்க மறுத்தார். இதையடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் பிரச்சினை பற்றி சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) விசாரணை நடத்தியது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்தவில்லை என்பது நிரூபணமானது. தவறாகத் தீர்ப்பளித்ததாக ஹேர் மீது புகார் சுமத்தப்பட்டது.

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க ஹேருக்கு போட்டிகளில் பங்கேற்க ஐ.சி.சி. தற்காலிக தடை விதித்தது. இவரது ஒப்பந்த காலம் 2009 மார்ச்சில் முடிவடைகிறது. தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஹேர் மேன்முறையீடு செய்தார். தன்னுடன் ஓவல் டெஸ்ட் போட்டியில் பணியாற்றிய சக நடுவர் பில்டாக்டிரோவ் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்துக் கண்டித்தார்.

தனக்கு எதிராக இனவெறியுடன் செயற்படுவதாக குற்றம் சாட்டிய இவர் இழப்பீட்டுத் தொகையும் கோரினார். இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது.

இந்தச் சூழலில் ஹேர் மற்றும் ஐ.சி.சி. இடையே சமரசம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இனவெறி உள்ளிட்ட அத்தனை புகாரையும் ஹேர் வாபஸ் பெற்றார். இவர் 6 மாத கால தடை காலத்தை முடித்து விட்டதால் சர்வதேச போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற ஐ.சி.சி. அனுமதியளித்தது. இவரது ஒப்பந்த காலம் நீடிக்கப்பட வாய்ப்பில்லை. 12 மாதங்களுக்கு மட்டும் `எலைற்பனல்' நடுவராக இருப்பார்.

இது குறித்து டரல் ஹேர் கூறுகையில்;

"கிரிக்கெட்டுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். மீண்டும் நடுவராகச் செயற்பட வாய்ப்புக் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

இவருக்கு நிரந்தர தடை விதிக்கப்படுமென எதிர்பார்த்த பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் ஷாரியார் கான் கூறுகையில்;

"மாபெரும் தவறு செய்த ஹேருக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கக் கூடாது . தனது பொறுப்பை மறந்து செயற்பட்ட இவருக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது தவறு" என்றார்.

இதேநேரத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வரவேற்றுள்ளது. இதன் செய்தித் தொடர்பாளர் பீற்றர் யங் கூறுகையில்;

"உலகின் மிகச் சிறந்த நடுவர்களில் ஹேரும் ஒருவர். இவரைப் போன்றவர்கள் கிரிக்கெட்டுக்கு தேவைப்படுகிறார்கள்" என்றார்.

ஓவல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க மறுத்ததற்காக அப்போதைய கப்டன் இன்சமாமுக்கு நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இதுபற்றி இவர் கூறுகையில்;

"அன்று தவறு செய்த டரல் ஹேர் இன்றைக்கு `ஹீரோ' போல் போற்றப்படுகிறார். இவருக்கு அனுமதியளித்த விடயம் மிகுந்த அதிர்ச்சி தருகிறது.

இப்பிரச்சினையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சிட்னி டெஸ்ட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் சபை உடனடியாக செயற்பட்டது. தனது வீரர்களுக்கு ஆதரவாக இறங்கியதால் ஐ.சி.சி. பணிந்தது. இவர்ளைப் பார்த்து பாகிஸ்தான் நிர்வாகிகள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்" என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் டரல் ஹேர் நடுவராகப் பணியாற்றமாட்டார் என ஐ.சி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி. முகாமையாளர் டேவ் ரிச்சர்ட்சன் கூறுகையில்;

"நடுவர்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. ஹேர் அளிக்கும் ஒவ்வொரு தீர்ப்பும் சர்ச்சை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனைக் கருத்திற்கொண்டு பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளில் இவர் நடுவராக நியமிக்கப்பட மாட்டார்" என்றார்.

Email this page Your Opinion Print this page
துணைக் கப்டனாக கில்கிறிஸ்ட்
பாகிஸ்தானில் நடத்த முடியாது போனால் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் இலங்கையில்
பசுபிக் லைப் ஓப்பன் டெனிஸ் நாலாவது சுற்றில் சானியா தோல்வி
ஐ.சி.சி.நடவடிக்கை எடுக்குமென்ற அச்சமே களத்தில் அமைதியாக நடப்பதற்கு காரணம்
மீண்டும் டரல்ஹேர் ; ஆசிய நாடுகள் போர்க்கொடி தூக்குகின்றன
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com