ஐ.பி.எல். ஐதராபாத் அணிக்கு துணை கப்டனாக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அணிக்கு `ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐ.பி.எல்., அமைப்பின் சார்பில் நடத்தப்படவுள்ள `ருவென்டி - 20' போட்டிகள் ஏப்ரல் 18 ஆம் திகதி தொடங்கவுள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தயாராகி வருகின்றன.
`டெக்கான் குரானிக்கிள்' நிறுவனத்தால் வாங்கப்பட்ட ஐதராபாத் அணிக்கு இந்திய வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் கப்டனாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போது துணைக் கப்டனாக, சமீபத்தில் ஓய்வு பெற்ற அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பரும் துடுப்பாட்ட வீரருமான கில்கிறிஸ்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தில் நடந்த விழாவில் அணிக்கு புதிய பெயரும், சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டது. டெக்கான் குரானிக்கிள் நிறுவனத்தை நினைவூட்டும் வண்ணம், `டெக்கான் சார்ஜாஸ்' (டி.சி.) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. `மோதலுக்கு தயாராகும் காளை' யின் உருவம் அணியின் சின்னமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.