(நேற்றைய தொடர்ச்சி)
கேள்வி : கடந்த பெப்ரவரி மாதத்தில் நீங்கள் குறிப்பிட்டதனைப் போன்று அரசாங்கத் தரப்பு புள்ளி விபரங்களிலிருந்து 900 க்கும் அதிகமான படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இராணுவ வெற்றிகள் குறித்து எதிர்வுகூறல்கள் அவ்வளவு மெய்ப்பாடுடையதாக அமையவில்லையா?
பதில் : இராணுவ உத்திகள் பற்றியோ தந்திரோபாயங்கள் பற்றியோ எனக்குத் தெரியாது. நான் நினைக்கிறேன் அவர்கள் அதனை மிக இரகசியமாக பாதுகாப்பார்கள். எனினும், யுத்த முடிவுக்கான காலக்கெடு அடிக்கடி மாற்றப்பட்டால் அது சாதகமான நிலையாக அமையாது.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்டோம் என்று வைத்துக்கொள்வோம். அடுத்தது என்ன? நாட்டிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுக்காத போர் வெற்றியின் பயன் என்ன? இராணுவ வெற்றியின் மூலம் சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே போர் முன்நகர்வு பூரணப்படுத்தப்பட்டதொன்றாக அமையும்.
உதாரணமாக அமெரிக்கத் துருப்பினர்கள் ஈராக்கிற்குச் சென்றனர். எனினும் தற்போது அங்கு பல்வேறு குழப்ப நிலைமைகளே எஞ்சியுள்ளன. ஆயுதம் ஏந்தாதோருக்கு எம்மிடம் தீர்வுகள் இல்லையென்றால் மாவீரர் குடும்பங்கள் உயர்வாக போற்றப்படும். இந்த நிலைமை வேறு சில பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக்கூடும்.
1971 ஆம் ஆண்டு மக்கள விடுதலை முன்னணி முற்றாக அழிக்கப்பட்டதாக கருதப்பட்டது. எனினும், 1989 ஆம் ஆண்டு ஒரு புதிய சக்தியுடன் மக்கள் விடுதலை முன்னணியினர் களமிறங்கினர்.
கேள்வி : நீங்கள் தற்போது போரினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறிப்பிட்டீர்கள். அரசாங்கம் தற்போது 13 ஆவது திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த தீர்வுத் திட்டம் பொருத்தமானதாக அமையும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில் : பத்திரிகைகளின் மூலம் நான் வாசித்த தகவல்களின்படி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 13 ஆவது திருத்த யோசனை முதல் கட்ட நடவடிக்கையாகும். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்வுத் திட்டம் இப்போது உசிதமானதாக அமையாது.
நாங்கள் பயங்கரவாத கிளர்ச்சியாளர்களுடன் போராட்டம் நடாத்துகின்றோம் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பலமான மக்கள் ஆதரவு காணப்படுகிறது. மக்கள் எமது தீர்வுத் திட்டங்கள் தொடர்பாக நம்பிக்கை கொண்டால் பயங்கரவாதிகளுடனான போராட்டம் இலகுவானதாக அமையும். எனினும், மக்கள் ஆதரவு இருக்கும் வரை இந்தப் போர் கடினமான போக்கையே காட்டி நிற்கும்.
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனினும், சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தத் தீர்வுத் திட்டங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமான ஏதுவாக அமைய வேண்டும்.
கேள்வி : காணாமல் போனோர் தொடர்பான புள்ளிவிபரங்கள் அரசாங்கத்தின் தரவுகளில் உள்ளடக்கப்படாமை குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : இதுவொரு முக்கியமான பிரச்சினை. யாராவது ஒருவர் காணாமல் போனால் அவரது குடும்பத்தினருக்கு அது ஒரு பாரிய துயரமாகும். இதன் மூலம் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களின் துயரம் குறைவானது என்று அர்த்தப்படாது.
எனது மைத்துனர்கள் இருவர் மற்றும் மைத்துனியின் கணவர் ஆகியோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சோகங்களுக்கு ஒரு முடிவு காணப்பட்டது. அவர்கள் ஆறுதலடையக்கூடிய வகையில் உடல்கள் கிடைக்கப்பெற்றன. எனினும் காணாமல் போனோரின் குடும்ப நிலைமைகள் மிகவும் வேதனைக்குரியதாக அமையும். அவர்களின் ஒவ்வொரு விடியலும் வேதனையுடனேயே தொடங்கும்.
ஒருவர் கொலை செய்யப்பட்டு பூதவுடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அந்த துயரத்திற்கு ஒரு முடிவு இருக்கும். உண்மையில் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத துயரம் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், காணாமல் போனோரின் குடும்ப நிலைமைகள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு கலந்த வேதனையுடன் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதனையே நான் இங்கு குறிப்பிட முயற்சிக்கின்றேன்.
கேள்வி : சில காணாமல் போதல் சம்பவங்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியதாக கருதப்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது?
பதில் : நான் அவ்வாறு நினைக்கவில்லை. காணாமல் போன ஒருவரை தப்பியோடியதாக கருதினால் அவரது சம்பளங்கள் ஏனைய கொடுப்பனவுகள் நிறுத்தப்படும். அதாவது படைவீரர் ஒருவர் தப்பியோடியதாக காட்டப்பட்டால் அவரது முழுக் குடும்பமுமே பாதிக்கப்படும்.
கேள்வி : உங்களிடம் இது தொடர்பான தரவுகள் ஏதும் உள்ளனவா? படையிலிருந்து தப்பியோடுபவர்களினால் போர் முன்நகர்வுகளுக்கு எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படக்கூடும்?
பதில் : என்னிடம் தரவுகள் ஏதுமில்லை. எனினும், போர் நீண்டுகொண்டு சென்றால் இந்த நிலைமை அதிகரிக்கக்கூடிய அபாயம் நிலவுகிறது. 1999 ஆம் ஆண்டில் போர் நீடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தப்பியோடும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றன.
நீங்கள் ஒரு படைவீரர் என்று வைத்துக்கொள்வோம். போர் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டால் உங்களுக்குள் இருக்கும் உத்வேகமும், ஆற்றலும் வெகுவாக குன்றக்கூடிய நிலைமையை தவிர்க்க முடியாது.
கேள்வி : போர் முன்நகர்வுகளின் காரணமாக இராணுவத் தரப்பிற்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக விளங்குகிறது. பல இழப்புக்களைத் தாண்டி கைப்பற்றப்படும் நில எல்லைகள் எவ்வளவு முக்கியத்துவமாக காணப்படும்?
பதில் : முதலாவதாக நீண்ட காலப் போர் எங்களுக்கு பாதகமான நிலைமையை தோற்றுவிக்கும். குறிப்பாக எப்போதும் நாம் குறைந்தளவு இழப்புக்களுடன் எதிரிகளை அழித்தொழிக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் போர் முன்நகர்வுகளில் பாதகமான விளைவுகளே எஞ்சி நிற்கும். கேள்வி : இரண்டு விதமான விடயங்களை போரின் போது கைப்பற்ற முடியும். முதலாவது வெறும் நிலப்பரப்புகளை கைப்பற்றல், மற்றையது சிவில் மக்களை பாதுகாத்தல். உண்மையில் வெற்று நிலங்களை கைப்பற்றுவதனூடாக எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை. கேள்வி : யாழ்ப்பாண தீபகற்பத்தின் தற்போதைய நிலையை எவ்வாறு நீங்கள் உணர்கின்றீர்கள்? பதில் : முகமாலையிலிருந்து தென்மராட்சிவரை எமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடமராட்சியிலிருந்து நாகர்கோவில் வரையிலும் எமது கட்டுப்பாடு நிலவுகிறது. வலிகாமம், கைதடி, மண்டைதீவு என்பவற்றின் கட்டுப்பாட்டை முழுமையாக எமது இராணுவத்தினர் கொண்டுள்ளனர். அங்குள்ள மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களா என்பது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. ஏனெனில் நான் இராணுவத்திலிருந்து விலகியதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவில்லை. கேள்வி : கிழக்கு இராணுவப்படைத் தளபதி மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலைமை இராணுவத்தில் முரண்பாடுகளை தோற்றுவிக்குமா? பதில் : இராணுவ அதிகாரியாக இருந்தாலும்,படைவீரராக இருந்தாலும் இராணுவச் சட்டங்கள் ஒரே மாதிரி நடைமுறைப்படுத்தப்படும். மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலேயே நீதிமன்றத்தை நாடுகின்றனர். உயர் அதிகாரியொருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பல பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். படையதிகாரி என்பவர் சீருடையணிந்த படையினரின் தந்தை நிலையில் வைத்துப் போற்றப்படக்கூடியவர். எனவே அவருக்கு எதிராகமேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கக்கூடும். கேள்வி : மேஜர் பராக்கிரம பன்னிபிட்டிய உடனடியாக கொழும்பு தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். பல்லாயிரக்கணக்கானோரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கருணாவிற்கு பிரபுக்கள் சலுகை வழங்கப்பட்டிருப்பதனையும் எவ்வாறு நோக்குகின்றீர்கள்? பதில் : இவை இரண்டும் இருவேறு நிலைமைகள். கருணாவின் நிலைமை ஒரு அரசியல் இராஜதந்திரம். சிலர் அவர் வெளிநாடு செல்ல உதவி செய்துள்ளனர். எனினும், பராக்கிரம பன்னிபிட்டியவின் நிலை தனிப்பட்டதொன்று. இவை இரண்டையும் இரு வேறு சம்பவங்களாக நோக்கப்பட வேண்டும் என்றார் அவர்.