காலகண்டன்
`தலைவலி தனக்குத் தனக்கு வந்தால் தான் அதன் வேதனை புரியும்" என்று சொல்லப்படுவது எவ்வளவு உண்மை என்பது முன்பைவிட இப்போது தெற்கிலே நன்கு உணரப்பட்டு வருகிறது. இந்நிலை ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிகம் உணரப்பட்டும் வருகின்றது. அதுவும் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்களே அந்த வலியையும் வேதனையையும் அனுபவித்து வருவதுதான் குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை காலமும் வடக்கு கிழக்கின் தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையும் நோக்கியே அரசின் கரங்கள் பதம்பார்த்து வந்தன. பின்பு கொழும்பில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களை மட்டுமன்றி, அரசாங்க எதிர்ப்பு ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் இலக்கு வைத்து தாக்கப்பட்டும் வந்தன. இப்பொழுது அதன் நீட்சியானது அரசாங்க ஊடகமான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்கள் மீது தொடரும் தாக்குதல்களாகிக் கொண்டிருக்கிறது.
அண்மைய மூன்று மாதங்களில் ரூபவாஹினி ஒளிபரப்பைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்கள் மோசமாகத் தாக்கப்பட்டும் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டும் உள்ளனர். இவற்றுக்குப் பின்னால் அரசாங்கத்தின் கரங்கள் கெட்டியாக இருந்து வருவதாகவே ரூபவாஹினியின் ஊடகவியலாளர்களும் அவர்கள் அங்கம் பெறும் ஊடக அமைப்புகளும் திடமாக நம்புகின்றன. அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துகளிலும் அறிக்கைகளிலும் அரசாங்கச் சார்பு மறை கரங்களைப் பற்றிச் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதனை உறுதி செய்வது போன்ற அறிக்கைகளை ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் வெளியிட்டும் உள்ளன. அதேவேளை சர்வதேச ஊடகவியலாளர் அமைப்புகளும் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித்தும் வந்துள்ளன. பாராளுமன்ற விவாதங்களில் கூட தொடரும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபன ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவை எதுவும் அரசாங்கத்தின் செவிகளுக்கு ஏறியதாகத் தெரியவில்லை. பதிலுக்கு ஜனாதிபதியும் ஊடகத்துறை அமைச்சரும் இலங்கையில் ஊடக சுதந்திரம் உச்சத்தில் இருந்து வருவதாகவே பரப்புரை செய்து நிற்பதையே காணமுடிகின்றது. இப்பரப்புரைகள் பாசிச ஆட்சிகளின் கீழ் செய்யப்படும் பொய்யுரைகளை நினைவுபடுத்துவது போன்றே அமைந்திருக்கின்றன. எவ்வளவுக்கு ஊடக சுதந்திரம் பற்றி உரத்துக் குரல் வைக்கப்படுகிறதோ பரப்புரை செய்யப்படுகிறதோ அவற்றின் மறைவில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மறைகரங்கள் தமது பிடிகளை இறுக்கிக் கொள்வது தான் வரலாற்று நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. இதுதான் இலங்கையிலும் இடம்பெற்று வந்திருக்கிறது. இப்பொழுதும் அதன் தொடர்ச்சிதான் செயலாக்கப்படுகிறது.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபன ஊடகவியலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்குரிய பின்புலம் அரசாங்கப் பக்கத்திலேயே இருந்து வருவது எவருக்கும் இரகசியமான ஒன்றல்ல. கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் ஒரு குழுவினர் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்து அங்கிருந்த ஊடகவியலாளர்களுடன் தர்க்கத்திலும் மிரட்டலிலும் மட்டுமன்றி, அடிதடி முயற்சியிலும் இறங்கினர். இதனால் ஏற்பட்ட எதிர்நடவடிக்கைகளில் அந்தக் குழுவில் வந்த சில குண்டர்கள் தாக்கப்பட்டதுடன் அமைச்சர் மீதான வர்ணக் குழம்பு ஊற்றலும் இடம்பெற்றது. அமைச்சர் தலைமையிலான மேற்படி அடாவடித்தனக் குழுவினரின் அத்துமீறலையும் அராஜக முயற்சியையும் ரூபவாஹினி ஊடகவியலாளர்களும் ஊழியர்களும் ஒன்றுபட்டு முறியடித்தனர். இந்நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்றாகவும் விளங்கியது.
அன்றைய சம்பவத்தில் பொலிஸாரும் பாதுகாப்புப் பிரிவினரும் அமைச்சரையும் அவரது குழுவினரையும் பாதுகாத்து மீட்டுச் சென்றனர். ஆனால், சம்பவத்திற்கு முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை. அமைச்சர் மீது ஒழுக்காற்று விசாரணைகளோ கண்டனத் தீர்மானமோ அரசாங்கப் பக்கத்திலிருந்து முன்னெடுக்கப்படவில்லை. அல்லது பகிரங்கமாகவே அடாவடித்தனம் புரிந்து அக்குழுவில் இடம்பெற்ற குண்டர்களின் நடவடிக்கைகளுக்காக எவரும் கைது செய்யப்படவும் இல்லை. ஒரு அரசாங்க கூட்டுத்தாபனத்திற்குள் அரசாங்க அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற அராஜகத்தை ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட தாக்குதலாகவோ இழிவான நடவடிக்கையாகவோ அரசாங்கம் எடுத்துக் கொள்ளவில்லை. அத்தகைய கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபன ஊடகவியலாளர்கள் மீதே பாதுகாப்புத் தரப்பிலிருந்தும் பொலிஸாரிடமிருந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறானவர்களில் 21 பேர் பட்டியலிடப்பட்டு விசாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இச்சூழலிலேயே ஜனவரி 25 ஆம் திகதி ரூபவாஹினி ஊடகவியலாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட எவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜனவரி 29 ஆம் திகதி இரண்டு ஆயுததாரிகள் மற்றொரு ரூபவாஹினி ஊடகவியலாளரின் வீட்டிற்குள் புகுந்து அவரது தாயாரை மிரட்டி கொலை அச்சுறுத்தல் விட்டுச்சென்றனர். அவ்வாறு பெப்ரவரி 27 ஆம் திகதி மற்றொரு ஊடகவியலாளர் அவரது வீட்டில் வைத்து அச்சுறுத்தி கொலை மிரட்டலுக்கு ஆளாகினார். மேலும் மார்ச் 5 ஆம் திகதி பெண் ஊடகவியலாளர் ஒருவர் பஸ்ஸில் வைத்து முதுகுப் புறத்தில் கூரிய உலோகத் தகட்டால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டார். மார்ச் 14 ஆம் திகதி அடுத்த ஊடகவியலாளர் பஸ் தரிப்பில் வைத்து இரு காடையர்களால் இரும்புக் கம்பி கொண்டு தாக்கப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டார்.
இவ்வாறு ஐந்து ரூபவாஹினி ஊடகவியலாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும் மிரட்டப்பட்டும் இருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே பாதுகாப்புப் பிரிவினரால் விசாரிப்பதற்கு பட்டியலிடப்பட்ட 21 ஊடகவியலாளர்களில் உள்ளடங்குவர் எனவும் தெரிய வருகிறது. ஒரு அரசாங்க ஊடகத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கே இக்கதி என்றால் ஏனைய தனியார் ஊடகங்களில் பணிபுரிவோரின் நிலை எத்தகைய ஆபத்துகள் கொண்டவையாக இருக்க முடியும் என்பது சிந்தனைக்குரியதாகும். ரூபவாஹினி ஊடகவியலாளர்களில் ஐந்தாவது தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் ஹெட்டிகே முதல் நாள் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அப்படியானால் தொடரும் இத்தாக்குதலின் பின்னணி எதுவாக இருக்க முடியும் என்பது இலகுவில் உணரக்கூடியதேயாகும். அது மட்டுமன்றி, இதுவரை மேற்படி சம்பவங்களில் தாக்குதல் நடத்திவரும் எவர் ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை. இது ஏன் என்பது புரியாத புதிர் அல்ல.
இந்நிலையிலே, ரூபவாஹினி ஊடகவியலாளர்கள் தத்தமது அமைப்புகளின் ஊடான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முயன்ற வேளையில், கடந்த திங்கள் அன்று அவர்களை உள்ளே அனுமதிக்காது திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் சுதந்திர சதுக்க வளாகத்தில் கூடி எதிர்ப்புத் தெரிவித்த வேளை பொலிஸாருக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் தர்க்கமும் முறுகல் நிலையும் ஏற்பட்டது. அன்று மாலை இடம்பெற்ற ரூபவாஹினி ஊடகவியலாளர் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இணக்கப்பாட்டைக் கொண்டுவர முயன்றார். இனிமேல் இவ்வாறான தாக்குதல்களோ அச்சுறுத்தல்களோ இடம்பெறாதென வாக்குறுதியும் வழங்கினார். அதேவேளை, தாக்குதல் நடத்திய குண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஊடகவியலாளர் பிரதிநிதிகள் வற்புறுத்தவும் செய்தனர். இதில் வேடிக்கை என்னவெனில் இச்சந்திப்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவும் கலந்து கொண்டிருந்தமைதான். அவர் ஒரு சந்தர்ப்பத்தில் தான் எவ்வித வாக்குறுதியையும் வழங்கத் தயார் இல்லை என்றும் ஏனெனில் தான் எதிலும் சம்மந்தப்படவில்லை என்றும் கூறிக்கொண்டார்.
இவற்றை எல்லாம் நோக்கும் போது, இன்று இலங்கையானது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பற்ற ஆபத்தான நாடாக விளங்குகின்றது என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டு வருவதையே எடுத்துக்காட்டுகின்றது. அன்று வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் ஊடகங்கள் மீதான வேட்டை ஆரம்பமாகிய போது தெற்கில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. சுதந்திர ஊடக இயக்கம் போன்ற ஓரிரு அமைப்புகளும் அதன் தலைமைகளுமே அக்கறை காட்டி வந்தன. அவற்றின் தலைமைகள் எடுத்த முன் முயற்சியால் தமிழ், சிங்கள முஸ்லிம் ஊடக அமைப்புகள் ஒன்று சேர்ந்து அவ்வப்போது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தும் கண்டனம் தெரிவித்தும் வந்துள்ளன.
அதேவேளை, அரசாங்க ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் இதில் அக்கறை செலுத்தாது இருந்தும் வந்தனர். ஆனால், இன்று அதே அரசாங்கக் கரங்கள் அரசாங்க ஊடகத்தின் ஊடகவியலாளர்களை ஒருவர் பின் ஒருவராகப் பதம் பார்த்து வருகின்றன.
ஆட்சி அதிகாரத்திற்கும் ஆதிக்க அரசியலுக்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் துதிபாடும் வரை அத்தகையோர் சிறந்த ஊடகவியலாளராகப் போற்றப்படுவர். பொன்னாடை போர்த்தி விருதுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவர். ஆனால், ஆட்சியினரையும் ஆதிக்க சக்திகளையும் விமர்சனம், கண்டனம் செய்ய முற்பட்டால் அத்தகையோர் மீது அரசின் அடக்குமுறைக் கரங்கள் தமது கோரத்தனத்தைக் காட்டவே செய்யும்.
இன்றைய அவசரகாலச் சட்டமும் அதன் கீழ் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமும் நாட்டு மக்களை குறிப்பாகத் தமிழ் மக்களைப் பழிவாங்கி வருகிறது. அதேபோன்று ஊடகவியலாளர்களையும் அவை விட்டு வைப்பதாக இல்லை.
ஏற்கனவே பல ஊடகவியலாளர்கள் "சிங்களப் புலிகள்" தமிழ்ப் புலிகள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு முழுவதிலும் ஊடகவியலாளர்கள் கொலை, தாக்குதல், மிரட்டல் , பழிவாங்கல் போன்ற அடக்கு முறைகளை எதிர்நோக்கி நிற்கின்றனர். ஏற்கனவே, இடம்பெற்ற எந்தவொரு ஊடகவியலாளரினதும் கொலைக்கோ தாக்குதல்களுக்கோ உரிய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றால், அதன் பின்னணியாக இருப்போர் யார்? அரசாங்கம் உரிய பதிலைக் கூறக் கூடிய நிலையில் இல்லை.
இதேபோன்றநிலை தான் அரசாங்கத்தின் பிரதான காட்சி ஊடகமான ரூபவாஹினியின் ஊடகவியலாளர்கள் பிரச்சினையிலும் இருந்து வருகிறது. இந்நிலையில், அரசாங்கம் ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் சுனில் சில்வா என்பவரை ரூபவாஹினியின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யவும் முகாமைத்துவத்தைப் பலப்படுத்தவும் எனக் கூறி பதவி நியமனம் செய்துள்ளது.
இது ஊடகத்துறையை இராணுவ மயமாக்க எடுக்கப்பட்டுள்ள முதலாவது நடவடிக்கை என்றே கொள்ள முடியும். அடுத்தடுத்து அரச ஊடகங்களில் இத்தகைய இராணுவ மயப்படுத்தும் முயற்சிகள் தொடரப்படலாம். இது முன்பு ஜே.ஆர்.காலத்தில் எடுக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளை அரசாங்க நிறுவனங்களின் பதவிகளுக்கு அமர்த்திய செயற்பாட்டின் மீள் முயற்சியாகும். இது 1977-94 கால யூ.என்.பி. யின் இருண்ட ஆட்சிக் காலத்தை மீண்டும் மகிந்த சிந்தனையின் கீழ் நடைமுறைப்படுத்தும் போக்கா? என்றே எண்ணத்தோன்றுகிறது. ஆளும் அதிகார வர்க்கம் எந்தப்பாதையில் பயணிக்கிறது. ஜனநாயக வழிகளிலா அல்லது சர்வாதிகாரச் செயற்பாடுகளிலா? மக்கள் தான் உரிய பதில் கூற வேண்டியவர்கள்.