த. சிவசுப்பிரமணியம்
கொழும்புத் தமிழ்ச்சங்கம் நல்லெண்ணம் கொண்ட அறிஞர் பெருமக்களால் 1942 ஆம் ஆண்டு இலங்கையின் தலைநகரில் நிறுவப்பெற்றது. தமிழ் மொழியோடு, பண்பாடு கலை, இலக்கியம், கல்வி ஆகியவற்றை வளர்ப்பதை நோக்காகக் கொண்டு இந்நிறுவனம் செயற்படத் தொடங்கியது. அரச அமைப்புக்கள், கல்வி அமைப்புக்கள், வணிக அமைப்புக்கள் ஆகியவற்றின் அறிஞர்களும், ஆர்வலர்களும் சங்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.
ஆரம்ப காலத்தில் வாடகை இல்லத்தில் சங்கப் பணிகள் நடைபெற்றன. 1950 ஆம் ஆண்டு சங்கங்களுக்கான சட்டவிதிகளின்படி பதிவுபெற்றது. அந்த வருடத்தில் சங்கத்திற்காக 42 பேர்ச் நிலம் விலைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்டது. 1956 முதல் இந்த நிலத்திலிருந்த இல்லத்தில் சங்கப் பணிகள் நடைபெற்று வந்தன. 1968 ஆம் ஆண்டு கட்டிட நிதிக்கான வரிவிலக்கு அனுமதி கிடைத்தது. கொடை வள்ளல்களின் நிதி உதவியாலும், சாதாரண மக்களின் சிறுசிறு அன்பளிப்பையும் மனமுவந்து பெற்று 1975 ஆம் ஆண்டு புதிய கட்டிட அமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டது.
சங்கப் பணிகளை முன்னெடுக்க அங்கத்தவர்களின் உறுப்புரிமைப் பணத்துடன் கண்காட்சி, திரைப்படக் காட்சி, அதிஷ்டச் சீட்டு, நாடகம் ஆகியவற்றின் மூலமும் ஆர்வலர்களின் நன்கொடை மூலமும் நிதி பெறப்பெற்றது. சாதி, சமய, சமூக, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சங்கப் பணிகள் தலைநகரிலிருந்து நாடு முழுவதற்கும் ஏன் இன்று உலகளாவிய ரீதியில் விரிவடைந்துள்ளன.
தலைநகரில் பல விழாக்களையும், இலக்கியச் சொற்பொழிவுகளையும், கருத்தரங்குகளையும் அவ்வப்போது ஒழுங்குசெய்து நடாத்திவருகின்றது. உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் அறிஞர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றிச் சிறப்பித்ததுடன் தமிழ்ச் சங்கப் பணிகளை வியந்து பாராட்டியுள்ளார்கள். தமிழ்மொழி பேசும் மாணவ சமுதாயத்தினரின் அறிவாற்றலையும் ஆக்கத்திறன்களையும் வளர்த்தெடுப்பதற்காக அகில இலங்கை ரீதியில் தமிழ்த்திறன், பேச்சு, கவிதை, இசை ஆகிய தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்திவருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் ஆக்கப் பணியில் உள்ளவர்களின் பல்வகை ஆய்வுக் கட்டுரைகள், நூலாக்கங்கள் ஆகிய தேர்வுகளையும் ஆண்டுதோறும் ஒழுங்கு செய்து பணப்பரிசும், நூல்களும், சான்றிதழ்களும் வழங்கப்பெறுகின்றன. அத்துடன், சில அறிஞர்களின் நூல்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பெற்றுள்ளன.
இலங்கையில் மிகச் சிறந்த நூலகம் ஒன்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் மிக அரிய நூல்களையும் கொண்டுள்ளது. சிறந்த ஆய்வு நூலகத்திற்கு வேண்டிய உசாத்துணைப் பிரிவுகளையும் உள்ளடக்கி சிறப்பான பணியை ஆற்றி வருகின்றது. இன்று 42,000 நூல்களை கொண்டுள்ள நூலகத்தில் புதிதாக சட்ட நூல்களை உள்ளடக்கிய உசாத்துணைப் பிரிவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிறந்த அறிஞர்களின் 25 இற்கும் மேற்பட்ட பல்துறை சார்ந்த நூல்களை வெளியிட்டுச் சிறப்புப் பெற்ற தமிழ்ச் சங்கம் `இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும்' என்னும் மகுடத்தில் தமிழ் வளர்த்த பெரியார்கள் பற்றிய ஆய்வு நூல்களை மாதம் ஒன்றாக வெளியிட்டு வருகின்றது. மேலும், `ஓலை' என்னும் சஞ்சிகையையும் வெளியிட்டு வருகின்றது.
விழா மண்டபம், கேட்போர் கூடம், நூலகம், படிப்பகம், ஈழத்து எழுத்தாளர்களின் நூல் விற்பனை நிலையம் என்று விசாலமான அமைப்புடன் மாடிக் கட்டிடங்களுடன் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கிறது கொழும்புத் மதிழ்ச் சங்கம்.
தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்த மூத்த உறுப்பினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருகின்றது. அத்தகைய நிகழ்வின் நீட்சியாக 66 ஆவது நிறுவுனர் தினவிழாவில் சங்கச் சான்றோர் விருது வழங்கிச் சிறப்பு செய்ய இருப்பவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். தமிழ்ச் சங்கமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு பல்லாண்டுகளாக தன்னலங்கருகாது சேவையாற்றி வரும் தமிழவேள் இ.க. கந்தசுவாமி அவர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தன்னாலான அரும்பெரும்பணிகளை ஆற்றிய பல நூல்கள் தந்த நூலாசிரியர் ஜனாப் எஸ்.எம். ஹனிபா அவர்களும் தந்தை வழிநின்று அவர் பெயரில் கட்டிடங்கள் நிறுவ உதவியவரும் தந்தையார் யாத்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவருமாகிய சங்கரப்பிள்ளை நகேந்திரன் அவர்களும் சங்கச் சான்றோர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படவுள்ளனர். இந்நிகழ்வு நாளை சனிக்கிழமை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
சங்கச் சான்றோர் விருது பெறுவோர் தமிழவேள் இ.க. கந்தசுவாமி
செந்தமிழும் சிவநெறியும் ஏற்றமுற்று எழில்பொங்க, நாற்றிசையும் போற்றுகின்ற கலை வல்லாளர்களை தன்னகத்தே கொண்டு மணம் பரப்பும் திருவூராம் இணுவில், சின்னத்தம்பிப் புலவரை தந்து நற்பெயர் கொண்ட இணுவையம்பதி அந்த மண்ணின் மைந்தனாகப் பார்போற்றும் தமிழறிஞர் இ.க. கந்தசுவாமி பிறந்தார். கோண்டாவில் சைவ வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலத்தில் தொடக்கநிலை, உயர்நிலை மாணவ சங்கங்களின் செயலாளராக இருந்து செயற்பட்டு மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பாராட்டுகளைப் பெற்றார். அங்கு பெற்ற பாராட்டுகளும் அனுபவங்களும் அவரைப் பொதுப் பணிகளில் ஈடுபட ஊக்குவித்தன. கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் சேர்ந்து பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளிவந்தார். இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலை (தற்பொழுது இணுவில் மத்திய கல்லூரி) ஆசிரியராகப் பணிபுரிந்து நல்மாணாக்கர் பலரை உருவாக்கிய பெருமை தமிழவேள் கந்தசுவாமியையே சாரும். ஆசிரியராக இருந்த காலத்தில் பல்வேறு பொது அமைப்புகளின் செயலாளராகவும் செயற்சபை உறுப்பினராகவும் பணியாற்றி அனைவரினதும் பெருமதிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றார்.
தலைநகருக்கு வந்து கொழும்பு றோயல் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றும் வேளை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகி அச்சங்கப் பணிகளில் பங்குபற்றிச் செயற்பட்டபோது அங்கு தமிழறிஞர்களின் தொடர்பு ஏற்பட்டது. தமிழ்ச் சங்கத்தின் முதுகெலும்பாக நின்று அவர் ஆற்றிய பணிகள் பல. 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது எல்லோரும் உயிர்காக்க ஓடிய வேளையிலும் தன் உயிரைத் துச்சமென மதித்து தனி ஒரு மனிதனாக நின்று சங்கத்திற்கு எதுவித இழப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்த பெருமை அவரையே சாரும். கொழும்பு வாழ் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் மொழிப் பண்பாடுகளை தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்க வேண்டும் என்ற ஆவலில் இலவச வகுப்புகளை முன்னின்று நடத்திவந்தார்.
தமிழ் நாட்டில் எம்.ஜி. இராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த காலத்தில் பன்னீராயிரம் நூல்களை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருந்து செயற்பட்டார். தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் பங்காற்றியவர்களைப் பற்றிய நூல்களையும் அவர்களால் எழுதப்பட்ட நூல்களையும் தமிழ்ச்சங்க வெளியீடாகக் கொண்டுவர அரும்பாடுபட்டார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றி அதன் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் படிக்கல்லாக இருந்து செயற்பட்ட பெருந்தகை தமிழவேள் இ.க. கந்தசுவாமி ஆவார்.
வயது முதிர்ந்த வேளையிலும் ஓயாது உறங்காது தமிழே மூச்சென வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழவேள் ஐயா பல நூல்களை எழுதியும் பதிப்பித்துமுள்ளார். "ஈழத்துப் பூதந்தேவனார் வரலாறும் பாடல்களும்" என்னும் வரலாற்றுப் பதிவுகளை வெளிக்கொணரும் நூலை யாத்துத் தந்துள்ளார். தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது. இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம் "சங்கப் புலவர்களுள் குறிப்பிடத்தக்கவராகிய ஈழத்துப் பூதந்தேவனார் வரலாற்றினையும் வரலாறும் - பாடல்களும் என்ற தலைப்பில் தமிழவேள் இ.க. கந்தசுவாமி சிறந்த நூல் ஒன்றினை உருவாக்கியுள்ளார். ஈழத்துப் பூதந்தேவனார் அவர்களது வரலாற்றோடு சங்ககாலப் புலவர்கள் பற்றிய குறிப்பினையும் சங்க இலக்கிய மரபுகளையும் நூலாசிரியர் இணைத்துக் கூறியிருப்பது பாராட்டத்தக்கது" என்று தெரிவித்துள்ளது.
தமிழவேள் இ.க. கந்தசுவாமி கல்வி அமைச்சின் தமிழ் நூற் பாடத்திட்டப் பகுதியிலும் தமிழ் நூல் ஆக்கப் பகுதியிலும் பணிபுரிந்து பல பாடநூல்களை உருவாக்க உதவியவர். தமிழ்ப் புலவர் கழகத்தை அமைத்து அதன் செயலாளராகவும் செயற்பட்டார். யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் புலவர் மாநாட்டையும், உலகம் போற்ற நடத்தினார். 89 வயது நிரம்பிய இவர் ஆர்வம் குன்றாமல் இன்றும் தமிழ்ப்பணி செய்துவருகின்றார். சைமன் காசிச்செட்டி நினைவுப் பணிமன்றத்தின் செயலாளராக இருந்து சேவையாற்றுவதுடன் அவர் பற்றிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இணுவில் திருவூர் ஒன்றியம் - கனடாவில் அவருக்கு விழா எடுத்து "தமிழ்க் காவலன்" என்னும் விருதையும் வழங்கி சிறப்பித்துள்ளது.
அத்தகைய பெரியருக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் தனது 66 ஆவது நிறுவனதின விழாவில் சங்கச் சான்றோர் விருது வழங்கிச் சிறப்பிக்கவிருக்கிறது.
சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா
இலங்கைத் தீவின் நடுவன் ஓங்கியுயர்ந்த மலைவளத்தால் அழகொளிர விளங்கும் மத்திய மாகாணத்தில் எழில் பொங்கும் இயற்கை வளத்தால் சிறந்து விளங்கும் "கல்ஹின்னை" என்னும் ஊரில் எஸ்.எம். ஹனிபா பிறந்தார். பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், பன்னூலாசிரியராகவும், பள்ளி ஆசிரியராகவும், வழக்கறிஞராகவும் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டார். தான் பிறந்த ஊரின் பெருமையை ஏனையோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்னும் உந்துதல் காரணமாக `எங்கள் ஊர் கல்ஹின்னை' என்னும் நூலை யார்த்துத் தந்துள்ளார். இந்நூலை ஆக்கியதன் மூலம் அவர் ஒரு வரலாற்றாசிரியராகவும், ஆய்வாளராகவும் அறிமுகப்படுத்தப்படுகின்றார்.
பூர்வீக வரலாற்றிலிருந்து வரன் முறையாக எடுத்துக் காட்டும் வரலாற்று நூலாக விளங்குகின்றது `எங்கள் ஊர் கல்ஹின்னை' என்னும் அரும் நூல். ஓர் ஊரின் பழம் வரலாற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் அவ்வூரில் வாழும் மக்களின் பாரம்பரியத்தையும் பண்புகளையும் அறியமுடிகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக எஸ்.எம். ஹனிபா அவர்கள் எழுதிய நூல் அமைந்துள்ளமை பெருமைப்பட வேண்டியதொன்று. அவர் இந்நூல் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடர்ந்த காடுகளின் மத்தியில் ஒரு குக்கிராமமாயிருந்த கல்ஹின்னை இன்று பலதுறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னேற்றம் காணத்துடிக்கும் ஏனைய கிராமங்களுக்கு எங்கள் ஊர் ஒரு முன்மாதிரி. எமது முயற்சிகளைப் பலரும் அறிந்து பயன்பெற வேண்டுமென விரும்பியதுடன் இன்றுள்ளவர்களுக்கும், இனிவரும் சந்ததிகளுக்கும் எமது ஊர்வரலாற்றை அறிய வகைசெய்யும் முயற்சியின் வெற்றிதான் இந்நூல்" எனவே தான் பிறந்த மண்ணை நேசிக்கும் ஒரு பற்றாளனாக எஸ்.எம். ஹனிபா அவர்கள் முன்நிற்கின்றார்.
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜனாப் எஸ்.எம். ஹனிபா, பிரசுரக் களம் அமைக்க முன்வந்தார். அவர் தமது பள்ளிப்பருவத்தில் இலக்கியச் செயற்பாடுகளிலும் சிறுசிறு சஞ்சிகைகளை அச்சிட்டு வெளியிடுவதிலும் மும்முரமாக இருந்தார். "சமுதாயம்" என்னும் பருவ ஏட்டை நடத்தியமையால் அவரைப் `சமுதாயம் ஹனிபா' என்றே எல்லோரும் அழைத்தனர். 1951 இல் இலங்கை பல்கலைக்கழகத்தில் எஸ்.எம். ஹனிபா அவர்கள் சேர்ந்த காலத்திலும் தமிழ்நூல் பிரசுரவெளியீடுகளிலும் அக்கறைகாட்டிச் செயற்படத் தவறவில்லை. அக்காலத்தில் பல்கலை்கழகங்களிலும் அரச நிறுவனங்களிலும் ஆங்கிலம் கோலோச்சிய காலத்தில் தான் பிறந்த ஊரான கல்ஹின்னையின் பெயரால் `தமிழ் மன்றம்' என்னும் பிரசுராலயத்தை நிறுவினார். அவர் பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்தில் பேராசிரியர் ம.மு. உவைஸின் " Muslim Contribution to Tamil literature" பேராசிரியர் சு. வித்தியானந்தனின் `இலக்கியத் தென்றல்', `தமிழர் சால்பு' ஆகிய நூல்களை தமிழ்மன்ற வெளியீடாக வெளிக்கொணர்ந்தார்.
கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் நிறுவனரான இவர் இதுவரை 100 நூல்களைத் தனியொரு மனிதராக நின்று பதிப்பித்துள்ளார். எதுவித பிரதிபலனும் பாராத இலட்சிய சாதனையாக இவருடைய பணியை எல்லோரும் போற்றுகின்றார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய ஈடுபட்டோடும், இலட்சியப் பிடிப்போடும் ஹனிபா அவர்களால் ஆற்றப்பட்ட பதிப்புப்பணி பாராட்டுக்குரியதொன்றாகும்.
கல்ஹின்னை தமிழ் மன்றத் தாபகரான எஸ்.எம். ஹனிபா தனது பணியின் ஆர்வத்தினால், கொழும்புத் தமிழ்ச்சங்க உறுப்பினராகச் சேர்ந்து அதன் முன்னேற்றத்திற்காக உழைத்தார். அத்தகைய பெரியாருக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது 66 ஆவது நிறுவுனர் தின விழாவில் `சங்கச் சான்றோர்' விருது வழங்கிக் கௌரவிக்கவிருக்கின்றது.
டாக்டர் சங்கரப்பிள்ளை நாகேந்திரன்
தமிழ்ப் பேரறிஞர் சங்கரப்பிள்ளையின் மகனான நாகேந்திரன் அவர்கள் தந்தை வழிநின்று பணியாற்றிய ப