அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்து கடந்த புதன்கிழமையுடன் சரியாக ஐந்து வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. ஈராக்கிற்கு படைகளை அனுப்புவதற்காக அமெரிக்கா கூறிய காரணத்தை உலகம் இன்னும் மறந்து விடவில்லை. சதாம் ஹுசைன் குவித்து வைத்திருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷும் அவரது நெருங்கிய நேச அணியான முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயரும் உரத்துக் கூறிய பேரழிவு ஆயுதங்களில் எந்தவொன்றையேனும் ஐந்து வருடங்களுக்குப் பின்னரும் கூட ஆக்கிரமிப்புப் படைகளினால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்காக உலகத்தினால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக எதையும் செய்யக் கூடியதாக இல்லை என்பது சமகால சர்வதேச அரசியலின் வேதனைமிக்கதொரு நிலைமையாகும். ஈராக் போரின் ஐந்து வருட நிறைவைக் குறிக்கு முகமாக வாஷிங்டனில் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனில் கடந்த புதனன்று ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் புஷ் உரையாற்றினார். முழு உலகினதும் அபிப்பிராயத்தை துச்சமென மதித்து படுமோசமான பொய்யைக் கூறி ஈராக்கை ஆக்கிரமித்தமைக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டிய புஷ், தனது அடாவடித்தனத்தை வீம்புத்தனமாக நியாயப்படுத்தி நின்றதையே அன்றைய தினம் காணக்கூடியதாக இருந்தது. அண்மைக் காலச் சரித்திரத்திலே உலகினால் பெரிதும் வெறுக்கப்படுகின்ற ஒரு அமெரிக்க ஜனாதிபதியென்ற பெயரைப் பெற்ற புஷ் `ஈராக் போரின் விளைவாக உலகம் சிறப்பானதாகவும் அமெரிக்கா முன்னரை விட பாதுகாப்பானதாகவும் இருக்கிறது' என்று பிரகடனம் செய்திருக்கிறார்.
2003 மார்ச் 19 ஆக்கிரமிப்பிற்கு பிறகு இன்று வரை படுகொலை செய்யப்பட்ட ஈராக்கியர்களின் தொகை 1,189,173 என்று பிரிட்டனின் `லான் செற்' மருத்துவச் சஞ்சிகையும் அமெரிக்க ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகமும் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் மூலமாக அறியப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் புள்ளிவிபரங்களின் படி சுமார் 50 இலட்சம் ஈராக்கியர்கள் அகதிகளாகியிருக்கிறார்கள் அல்லது உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். சுமார் 4 ஆயிரம் அமெரிக்கப்படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 29 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் காயமடைந்திருக்கிறார்கள். ஐந்தாண்டு காலப் போருக்கு அமெரிக்கா 50 ஆயிரம் கோடி டொலர்களை செலவழித்திருக்கிறது. இந்தப் புள்ளி விபரங்கள் எல்லாம் முன்னைய அமெரிக்க ஜனாதிபதிகளில் எவருமே செய்திராத மிகவும் படுமோசமான, கண்மூடித்தனமான காரியத்தைச் செய்த ஜனாதிபதியாக புஷ்ஷை தோலுரித்துக் காட்டியிருக்கும் அதேவேளை, அவரோ `ஈராக்கில் உள்ள எமது எதிரிகள் மேலாக நாம் கண்டிருக்கும் தந்திரோபாய ரீதியான வெற்றியைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது இந்த இழப்புகளும் செலவுகளும் அவசியமானவையே' என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அதிகப் பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் ஈராக் ஆக்கிரமிப்பு ஒரு பெரிய தவறு என்று கருதுகிறார்கள். அபிப்பிராய வாக்கெடுப்புகள் இதையே தெளிவாக வெளிக்காட்டுகின்றன. கடந்த புதன்கிழமை வாஷிங்டனிலும் ஏனைய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் படைகளை ஈராக்கிலிருந்து திருப்பியழைக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை திருப்பியழைப்பது தொடர்பான விவகாரமே குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெய்னுக்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக வரக்கூடிய பராக் ஒபாமா அல்லது ஹிலாரி கிளின்டனுக்கும் இடையேயான விவாதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக இருக்கப்போகிறது.
அமெரிக்க ஆக்கிரமிப்பையடுத்து மூண்ட கிளர்ச்சியினால் ஈராக்கில் தினமும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையான அப்பாவி மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருப்பது பெறுமதியானதே என்று அமெரிக்கர்களை நம்பவைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் புஷ் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஈராக்கின் வன்முறைக் கிளர்ச்சியை ஒசாமா பின்லேடனுடனும் 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுடனும் இணைத்துப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் புஷ் அன்றைய தினம் பென்டகனில் ஆற்றிய உரையிலும் ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறினால் அமெரிக்காவிற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று அமெரிக்கர்களை அச்சுறுத்தியிருக்கிறார். `ஈராக்கிலிருந்து நாம் பின்வாங்கினால் அந்த நாட்டில் பெரும் குழப்பநிலை தோன்றும். அதன்விளைவாக வலுவடையக்கூடிய அல்ஹைடா இயக்கம் அமெரிக்கா மீது தாக்குதல்களைத் தொடுக்கலாம். ஈரானும் உற்சாகமடைந்து அணுவாயுதங்களைத் தயாரிக்கும். இத்தகைய நிலைவரங்கள் தோன்ற அனுமதிப்பதென்பது செப்டெம்பர் 11 தாக்குதல்களிலிருந்து நாம் படித்துக் கொண்ட பாடங்களை அலட்சியம் செய்வதாக அமையும். இதன்விளைவாக செப்டெம்பர் 11 இல் நாம் அனுபவித்ததைப் போன்ற அனர்த்தம் மீண்டும் நிகழக்கூடும்' என்று புஷ் கூறியிருக்கிறார்.
ஈராக் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு புஷ் எப்போதுமே அமெரிக்கா மீதான பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தலைச் சாக்குப்போக்காகக் கூறிவந்திருக்கிறார். தொடர்ந்து அதையே செய்வதைத் தவிர அவருக்கு வேறுமார்க்கம் இல்லை என்பது தெளிவாகிறது. ஈராக் அமெரிக்காவுக்கு ஒரு ஆபத்தான மீளமுடியாத சகதியாக மாறிவிட்டது என்ற அமெரிக்கர்களின் அச்சத்தைத் தணிக்க அவர்களுக்கு செப்டெம்பர் 11 பூச்சாண்டியை புஷ் காட்டிக் கொண்டிருக்கிறார். பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரை புஷ் ஆரம்பித்து 7 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட அமெரிக்கர்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் தணியவில்லை என்றால் அந்தப் போரின் நிலைதான் என்ன? அமெரிக்கா தனது ஒற்றைக் குடையின் கீழ் உலகம் முழுவதையும் கொண்டுவந்து மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான மூல உபாயமாகவே பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நோக்கிலான தனது எந்த அணுகுமுறைக்கும் குந்தகமாக அமெரிக்கர்கள் மத்தியில் அபிப்பிராயங்களும் உணர்வுகளும் தோன்றும் போது அவர்களையே அச்சுறுத்துவதற்கு வசதியான ஒரு ஆயுதமாக செப்டெம்பர் 11 அமெரிக்க ஆளும் அதிகாரக் கும்பலுக்கு கை கொடுக்கிறது.