பாகிஸ்தானில் பிரதமரை தெரிவு செய்யும் உரிமையை தனிநபருக்கு வழங்காமல் கூட்டணிக் கட்சிகள் இணைந்து பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டுமென பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் மஹ்தூம் அமிம் பாஹிம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பிரதமர் ஆகலாம் என்ற கனவில் இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆஸிப் அலி சர்தாரிக்கு அடுத்த தலைவலி ஆரம்பமாகியுள்ளது.
ஆட்சி அமைக்கவுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்),அவாமி தேசியக் கட்சி, ஐமியாத் உலேமா - இ - இஸ்லாம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டம் புதன்கிழமை பாராளுமன்ற வாளாகத்தில் நடந்தது.
இந்தக் கட்சிகளைச் சேர்ந்த 240 எம்.பி.க்கள் மற்றும் 10 சுயேச்சை எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதில்,பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்குப் போட்டியிட ஆதரவு தெரிவிப்பதாக கூட்டணிக் கட்சிகள் சர்தாரியிடம் தெரிவித்தன.
இந்நிலையில,கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுக்கலாம், தனி ஒருவரின் முடிவுக்கு இதனை விட்டு விடக்கூடாது என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத்தலைவர் பாஹிம் தனது அதிருப்தியை கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பிரதமர் வேட்பாளராகப் பரிசீலிக்கப்பட்டவருமான முகமது சௌத்ரி கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார்.
கூட்டம் முடிந்தபின் பாஹிம் கூறியதாவது:-
சர்தாரி எனக்கு நண்பர்களின் நண்பர். இந்த விடயத்தில் பாகிஸ்தான் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனக்கு அளித்த சத்தியத்தை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.
பாஹிமின் இந்தச் சூசகமான பேச்சையடுத்து, சர்தாரியும் பாஹிமும் ஏற்கெனவே உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
தனக்கு அடுத்த படியாகப் பிரதமராக யார் வர வேண்டும் என்பதை பெனாசிர் முடிவு செய்திருப்பார். அது பாஹிமாகக் கூட இருக்கலாம். இது தொடர்பாக பாஹிமும் சர்தாரியும் உடன்பாடு செய்து கொண்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
`நீங்கள்தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என பெனாசிர் விரும்பினார்.பிரதமர் வேட்பாளர் நீங்கள்தான்.கட்சியின் பொதுக்குழுவில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்' என பெனாசிர் கொல்லப்பட்ட மூன்றாவது நாள் பாஹிமிடம் சர்தாரி கூறியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால்தான் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு விட்ட போதிலும்,பாஹிம் இன்னமும் போட்டியில் உள்ளதாகத் தகவல் வெளியானது.
இதற்கிடையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பர்ஜான ராஜா,பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு விட்டது.அவர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரி, துணைத்தலைவர் மக்தூம் அமீம் பாஹிம்,பாராளுமன்ற தேசியப் பேரவையின் முன்னாள் தலைவர் யூசுப் ராஜா கிலானி, முகமது சௌத்ரி உள்ளிட்ட 5 பேர் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாகப் பரிசீலனையில் இருந்தனர்.
தேர்தல் நடந்து முடிந்த ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பாகிஸ்தான் அரசியல் கட்சிகளிடையே இன்னமும் முடிவு எட்டப்படவில்லை.