அம்பாறை மாவட்டத்திலிருந்து வாபஸ்பெறப்படும் விஷேட அதிரடிப் படையினர் மணலாறு மற்றும் கெப்பிட்டிகொலாவ பகுதிக்கு மாற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை முதல் விஷேட அதிரடிப்படையினர் வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர்.
1990 ன் முற்பகுதியிலிருந்து அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிரடிப் படையினர் நிலைகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் 50 சதவீதமான பகுதிகளில் நிலைகொண்டிருந்த படையினர், அங்கு படுவான்கரை பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையை அடுத்து மாவட்டம் முழுமையாக அவர்களே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிரடிப் படையினர் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு அவர்களுக்குப் பதிலாக அங்கு இராணுவத்தினர் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
அம்பாறையிலிருந்து வாபஸ் பெறப்படும் அதிரடிப் படையினர் மணலாறு, கெப்பிட்டிகொலாவ, அநுராதபுரம் எல்லைப் பகுதிகளிலும் வவுனியா எல்லை பகுதியிலும் அமர்த்தப்படவுள்ளனர்.
அதிரடிப் படையினரை இப் பகுதிகளில் அமர்த்துவதன் மூலம், இந்தப் பகுதியிலிருந்து வாபஸ் பெறப்படும் படையினரை எதிர்காலத்தில் வேறு படைநடைவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியுமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதேநேரம் மன்னார் பகுதியில் நிலை கொண்டிருந்த அதிரடிப் படையினரும் அங்கிருந்து வாபஸ்பெறப்பட்டு அநுராதபுரம் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.