* தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் மறுப்பு
கிழக்கிலிருந்து முற்றாக விஷேட அதிரடிப் படையினர் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் வேறிடங்களுக்கு அனுப்பப்படுவதாக வெளியான தகவல்களை அரசாங்கம் முற்றாக மறுப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிலையம் கூறுகையில்;
களநிலைமை, படையினரின் அவசர தேவை மற்றும் படையினரின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே விஷேட அதிரடிப் படையினர் வழமை போல் மாற்றப்பட்டுள்ளார்களே தவிர நேற்றைய தினம் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியானது போல் அதிரடிப் படையினர் முற்றாக கிழக்கிலிருந்து வாபஸ்பெறப்படவில்லை.
நேற்றைய தினம் சில ஊடகங்கள், ரி.எம்.வி.பி.யின் வற்புறுத்தலையடுத்தே மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விஷேட அதிரடிப் படையினர் வாபஸ் பெறப்பட்டதாக செய்திகளை வெளியிட்டுள்ளன. அதிரடிப் படையினர் அங்கு நிலைகொண்டிருப்பது ரி.எம்.வி.பி.யின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவேயுள்ளது. இதனால், இவ்வாறான புனையப்பட்ட செய்திகளை அரசு முற்றாக நிராகரிக்கின்றது.
கள நிலைமைக்கேற்பவும் படையினரின் தேவைக்கேற்பவுமே படையணிகள் வாபஸ் பெறப்படுவதும் புதிதாக அமர்த்தப்படுவதுமிருப்பதால் கிழக்கிலிருந்து விஷேட அதிரடிப் படையினர் முற்றாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எதுவித உண்மையுமில்லையெனவும் அரசு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.