* தமிழ் கூட்டமைப்பு தெரிவிப்பு
பி.ரவிவர்மன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பாக பிரேரனை எதிர்க்கட்சியான ஜக்கிய தேசிய கட்சி மற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன் கலந்துரையாடல்களை நடத்திய பின்னரே இறுதி முடிவெடுக்கப்படுமென்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக எவ்வாறான முடிவை எடுப்பது தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் கூடி ஆராய்ந்தனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின், பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மாலை 4.30 மணிக்கு கூடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கூடி இது குறித்து ஆராய்ந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு பின்னர் அங்குள்ள நிலைமைகள் மற்றும் நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டை முன்னெடுப்பது என்பது தொடர்பாக இங்கு விரிவாக ஆராய்ந்துள்ளனர்.கிழக்கு மாகாண சபைத்தேர்தல்கள் தொடர்பாக கூடி ஆராய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி மற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விடுத்துள்ள அழைப்பையேற்று அவர்களுடன் விரைவில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் நேற்றைய கூட்டத்தின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றின் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பின்னர் மீண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஆராய்ந்த பின்னரே கிழக்குத் தேர்தல் தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படுமென்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கமைய அடுத்து வரும் நாட்களில் இந்தச் சந்திப்புக்கள் நடைபெறுமென தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக எவ்வாறானதொரு நிலைப்பாட்டை முன்னெடுப்பது என்பது தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன் தினம் வியாழக்கிழமை நீண்ட நேரம் கூடி ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.