* விரைவில் ரணில், ஹக்கீம் அடுத்த சந்திப்பு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையே தேர்தல் உடன்பாடு ஏற்படும் சாத்தியமிருப்பதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் காலம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக கட்சிகளின் செயற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 5 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் தமது கூட்டணி பற்றி அறிவிக்கவுள்ளன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் கிழக்கு தேர்தல் குறித்து முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பு நடைபெற்ற சில மணித்தியாலங்களின் பின்னரே பசில் ராஜபக்ஷ எம்.பி. ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
எனினும், ஐ.தே.க.வுடன் கூட்டுச் சேருவதே சாத்தியமென முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இக்கூட்டணி நிபந்தனையுடனானதாக அமையுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, முதலமைச்சர் மற்றும் 3 அமைச்சர் பதவி தமக்கு கிடைக்க வேண்டும், 3 மாவட்டங்களில் தலைமை வேட்பாளர்களாக முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் நிறுத்தப்பட வேண்டுமென்ற இருபிரதான நிபந்தனைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கவுள்ளது.
இவ்விரு பிரதான நிபந்தனைகளையும் ஐ.தே.க. தலைமை ஏற்கும் சாத்தியமிருப்பதாவும் எனவே, அவர்களுடனான கூட்டணிக்கே அதிக வாய்ப்பிருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
அடுத்து வரும் சில தினங்களில் ரணில் விக்கிரமசிங்க ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறுமெனவும் இதனையடுத்து தேர்தல் உடன்பாடு பற்றிய அறிவிப்பு வெளியாகுமெனவும் தெரியவருகிறது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமையும் ஆளும் கட்சி அரசியல் பங்காளிகளுக்கிடையிலான முக்கிய கூட்டம் நடைபெறவுள்ளது.
அநேகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவாரென ஆளும் தரப்பு அமைச்சர்கள் உறுதிப்பட தெரிவித்தனர்.
தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள், முதலமைச்சர் மற்றும் வியூகங்கள் குறித்து அறிந்து அதற்கேற்ற வகையில் தீர்மானங்களை மேற்கொள்ள காத்திருப்பதாகவும் அடுத்த வாரம் இது பற்றிய மேலதிக விபரங்கள் வெளியாகுமெனவும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.