அயர்லாந்து அணியுடனான போட்டியில் பங்களாதேஷ் அணி தொடரைக் கைப்பற்றியது.
அயர்லாந்து கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், 2 ஆவது ஒரு நாள் போட்டி மிர்புரில் வியாழக்கிழமை நடந்தது.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சிறப்பான தொடக்கத்தின் உதவியுடன் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்டங்களைச் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால் 46 ஓட்டங்களும், ஷகாரியர் நபீஸ் 60 ஓட்டங்களும் அப்தாப் அகமத் 61 ஓட்டங்களும் கப்டன் அஷ்ரபுல் 38 ஓட்டங்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய அயர்லாந்து அணி 38.3 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இதனால் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பங்களாதேஷ் பந்து வீச்சாளர் பர்கத் ரெசா 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ரெசா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.