எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெற அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கின்றது. இத்தேர்தலில் களமிறங்குவது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமான ஈடுபாட்டில் இறங்கியிருக்கின்றன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் 15 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல்கட்சிகள் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கத்தரப்பு இக்கிழக்கு மாகாணத்தை தம் ஆளுகைக்குள் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தயவை நாடி பிச்சாபாத்திரம் ஏந்திநிற்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது.
மட்டக்களப்பு உள்ளூராட்சிச் சபைத்தேர்தலின் போது தமிழ் பிரதேசங்களுக்கான தேர்தலாக அது அமைந்து காணப்பட்ட போதிலும் குறிப்பிட்ட சில பிரதேசசபைகளின் எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்கள் ஆளும்தரப்புக்கு ஆதரவானவர்களுக்கு வாக்களிப்பதை முற்றாக நிராகரித்து முஸ்லிம்காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து 7 உறுப்பினர்களை பிரதேசபைகளுக்கும், மட்டு. மாநகர சபைக்கும் அனுப்பிவைத்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அந்த உள்ளூராட்சி தேர்தலில் மூன்று உறுப்பினர்களையே எதிர்பார்த்தது. ஆனால் 7 பேர் தெரிவானதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் இருப்பு ஆழமாக வேரூண்றியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஆரம்பம் முதலே மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட காட்டுத்தர்பாருக்கு மத்தியிலும் கூட ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதனைபடைத்திருப்பதை தெளிவாகவே காணக் கூடியதாக அமைந்தது.
மட்டு உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் வன்முறைகள் மிகக் குறைவாகவே காணப்பட்ட போதிலும் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் கூடுதலான வன்முறைகள் இடம் பெற்றிருக்கின்றன. முஸ்லிம் அமைச்சரொருவரின் தலைமையிலான குழுவொன்றே இந்த அடாவடித் தனத்திலீடுபட்டதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலி பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றார்.
நடந்த தேர்தலை அவதானிப்பதற்காக தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் குழுவொன்று மட்டக்களப்புக்கு வாக்களிப்பு தினத்துக்கு இரண்டுதினங்களுக்கு முன்னரே அழைத்துச் செல்லப்பட்டன.
எவரது கட்டுப்பாடுகளுமின்றி நிலைமைகளை நேரில் கண்டறிவதற்கு எமக்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டிருந்தன. தமிழ் பகுதிகளில் எந்தவிதமான வன்முறைகளையும் எம்மால் காணக்கிடைக்கவில்லை. ஆனால், தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் அதாவது வாக்களிப்பு தினத்துக்கு முந்தைய தினம் முதல் வாக்களிப்பு இடம் பெற்று மறுதினம் வரை கிழக்குமாகாணத்தில் ஒன்றுமே காணப்படாத படைத்தரப்பு குவிக்கப்பட்டிருந்தது. அவற்றை பார்க்கும் போது ஜனநாயகநாட்டில் நடைபெறும் ஒரு தேர்தலா அல்லது மட்டக்களப்பில் இராணுவ நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படுறதாவெனச் சந்தேகிக்க நேர்ந்தது.
வாக்களிப்பு தினத்தில் வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டன. பொதுமக்களை விட படைத்தரப்பும், பொலிஸாருமே குவிந்து காணப்பட்டனர். அங்கு இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பது போன்றே காணப்பட்டது.
முஸ்லிம் மக்கள் வாழும் சில பகுதிகளில் வாக்குகள் பறிக்கப் பட்டதாகவும், முஸ்லிம் அமைச்சராலும் அவரது காடையர்களாலும் வேட்பாளர்களிருவர் கூடதாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு அடாவடித்தனங்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை வென்றெடுக்க முடிந்துள்ளது. ஆளும் தரப்பில் போட்டியிட்டவர்களில் ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினரையே அந்த அமைச்சரால் பெற்றெடுக்க முடிந்தது.
அரசு இயந்திரம் முழுமையாக பாவிக்கப்பட்ட போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் அங்கு சாதனை படைத்துள்ளது.
இப்போது மாகாண சபைத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையை தம்வசப்படுத்த வேண்டுமானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தயவு தேவைப்படுகிறது என்ற உண்மையை இரண்டு பிரதான கட்சிகளும் உணர்ந்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவை ரவூப் ஹக்கீமிடம் தூதனுப்பி பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எதிர்பார்த்த பலனெதுவும் அரச தரப்புக்கு இன்னமும் கிட்டியதாகத் தெரிய வில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைமைத்துவம் சூடுகண்ட பூனையாகும். இன்னொரு தடவை கைகளைச் சுட்டுக்கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸோ தலைவர் ரவூப் ஹக்கீமோ தயாராக இல்லை என்பதை பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றது. சிறிய எலும்புத்துண்டுகளுக்காக முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக் கொடுக்க மு.கா.ஒருபோதும் முன்வரப்போவதில்லை என்பதை அக்கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கட்சியிலிருந்த சில நயவஞ்சகர்களின் போக்கிலித் தனமான போக்குகாரணமாகவே அரசுக்கு முண்டு கொடுக்க நேர்ந்ததையும் தலைமைத்துவம் ஏற்றுக் கொண்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் கட்சியினதும், முஸ்லிம்களதும் தனித்துவ அரசியல் இருப்பை உத்தரவாதப் படுத்த முடியும் என்று நம்பினாலும் கூட தனித்துப் போட்டியிடுவதன் மூலம் மாகாணசபை அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமென்று எதிர்பார்க்க முடியாது.
எனவே மு.கா. தனது சமூகத்தின் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் எவருடனாவது கூட்டுச் சேர்ந்தே ஆக வேண்டியுள்ளது.
மர்ஹூம் அஷ்ரப்புக்குப் பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸை துண்டாடுவதற்கான காய் நகர்த்தல்களையே பல்வேறு கட்டங்களிலும் முன்னெடுத்தன. அதில் ஓரளவு வெற்றியையும் கண்டதை மறுக்க முடியாது. ஆனால், பதவிகளுக்காக கட்சியை இவர் காட்டிக்கொடுத்த போதிலும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இன்னமும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கொடியின் கீழேயே அணிதிரண்டிருப்பதை மட்டு. உள்ளூராட்சித் தேர்தல் மீண்டுமொரு தடவை நிரூபித்துள்ளது. எனவே, சேர்ந்து கழுத்தறுப்பவர்கள் விடயத்தில் மு.கா.தலைமைத்துவம் விவேகமாக நடந்து கொண்டே ஆக வேண்டும்.
அதேசமயம் அடுத்த பிரதான கட்சியான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ளும் விதத்தில் அந்தப் பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் என்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும், ஐக்கிய தேசியக் கட்சியையுமே கடந்தகாலத்தில் ஆதரித்து வந்துள்ளனர். இன்னமும் கூட அம்மக்கள் அந்த நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை. இத்தகையதொரு நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆரோக்கியமான ரீதியில் அதன் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் கிழக்குமாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனம் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒன்று பட்டு பொதுக் கூட்டணியை அமைத்து இத் தேர்தலை எதிர் கொள்ள வேண்டுமென அதன் தலைவர் மௌலவி எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
ஆனால், இவர்களை ஒன்றிணைப்பது என்பது சாத்தியப்படக்கூடியதாக எதிர்பார்க்கவே முடியாது. சுயநல நோக்கம் கொண்ட அரசியல் சக்திகள் பொதுநலனுக்காக ஒன்றுபட ஒருபோதும் முன்வரப்போவதில்லை. இது வரலாற்றில் நாம் கற்றுக் கொண்ட பாடமாகும்.
புத்தி ஜீவிகளும் முஸ்லிம் தலைமைகளும் காட்டுகின்ற அக்கறையில் துளியளவையேனும் முஸ்லிம் தலைமைகள் காட்ட முன்வந்தால் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் பேரினவாதச் சக்திகளால் கறிவேப்பிலையாக பாவிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும்.
இந்தக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் அரசியல் சக்திகள் இன்னொரு வரலாற்றுத்தவறை செய்வதை தவிர்க்க முன்வராவிட்டால் முஸ்லிம் சமூகம் மீட்சிபெறுவதற்கு இனிமேலும் வாய்ப்புக்கிட்டுமா என்பது கேள்விக்குறியாக அமைந்துவிடும்.