தாரகா
முன்னர் சிறுவர்களுக்காக வெளிவந்த `அம்புலி மாமா' இதழில் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதாக ஒரு கதை வந்த ஞாபகம் இருக்கிறது. எனது சிறு வயதில் அதனை படித்திருக்கிறேன் அந்தக் காலத்தில் பெரும்பாலும் அம்புலிமாமாவை படிக்காத சிறுவர்களைக் காண்பது கடினம். அந்தளவிற்கு `அம்புலிமாமா' சிறுவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது. விக்கிரமாதித்தியன் என்ற மன்னனிடம் கதைகளைக் கேட்டுவரும் வேதாளம், அந்தக் கதைகளில் சற்றும் திருப்தி கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற்றிக் கொள்வதும் அதனை கீழிறக்குவதற்கு சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியன் மீண்டும் மீண்டும் கதைகள் சொல்வதுமாக நீளும் அந்த வேதாளக் கதை.
தற்போது மீண்டும் இந்தியா, இலங்கை அரசியலில் அதிகளவில் தலையீடு செய்ய முயல்வதாக வெளிவந்த செய்திகளை படித்த போது சிறு வயதில் படித்த அந்த வேதாளத்தின் கதைதான் எனது ஞாபகத்திற்கு வந்தது. ஒருவகையில் இந்தியாவின் இலங்கை அரசியல் மீதான தலையீடு என்பது குறிப்பாக தமிழர் விடுதலை அரசியல் மீதான குறுக்கீடு என்பது அந்த வேதாளத்தின் கதை போன்றதுதான் தமிழர் தேசம் தனது தரப்பு நியாயங்களை தொடர்ந்து சொல்லி வருவதும் ஆனால், இந்தியாவோ மீண்டும் மீண்டும், சிங்களத்தின் முதுகில் ஏறிக் கொள்வதுமாக தொடர்கிறது இந்தியாவிற்கும் நமக்கும் இடையிலான பிரச்சினைகளின் கதை.
2006 இன் இறுதிப் பகுதியிலிருந்து யுத்த நிலைமைகள் தீவிரமடைந்தன. சிங்களத்திற்கும் தமிழர் தேசத்திற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருக்கும் போதே ஷ்ரீ லங்கா அரசு பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்றை விடுதலைப் புலிகள் மீது தொடுத்தது. இறுதியில் இவ்வருட ஆரம்பத்தில் உத்தியோக பூர்வமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டதன் மூலம் ஷ்ரீலங்கா அரசு தனது போர் பிரகடனத்தை பகிரங்கப்படுத்தியது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அது நோர்வேயின் அனுசரணையுடனான புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தை ஒரு அவதானிப்பாளர் நிலையிலேயே அணுகியது. ஆனாலும் இந்தியாவின் கடந்த கால அரசியல் அணுகுமுறைகளை கருத்தில் கொண்டு பார்ப்போமானால் நோர்வேயின் மத்தியஸ்த காலத்திலும் இந்தியா தனக்கேயுரித்தான ஒரு பாதாள அரசியல் அணுகு முறையையும் கைக்கொண்டிருக்கும் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்.
விடுததலைப் புலிகளுக்கும் ஸ்ரீ லங்கா அரசிற்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடையத் தொடங்கியதும் இந்தியா படிப்படியாக தனது பாதாள நிலையைத் தவிர்த்து வெளிப்படையாகவே களமிறங்கத் தொடங்கியது. தற்போது ஸ்ரீ லங்கா இராணுவத்திற்கான பயிற்சி. புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், பொருளாதார ரீதியில் மிக மோசமான வீழ்ச்சியை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் அரசிற்கு முண்டு கொடுத்தல் மற்றும் வர்த்தக முதலீடு எனப் பலவழிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்று வருகின்றது. தற்போது இந்தியா, இலங்கை அரசியலில் அதிக ஈடுபாட்டைக் காட்டுவதற்கு வெளித் தெரியக் கூடிய இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று தனது பிராந்திய நலன்களுக்கு சவால் விடும் வகையில் அந்நிய சக்திகள் இலங்கை அரசியலில் தலையீடு செய்வதைத் தடுத்தல் மற்றையது குறிப்பாக சமீப காலமாக சீனா அதிகளவில் ஸ்ரீ லங்கா அரசுடன் நெருங்கி வருவதைத் தடுத்தல். வெளித் தெரியக் கூடியவகையில் இந்த இரண்டு காரணங்கள் தான் நமக்கு புலப்படுகின்றன. முதலாவது காரணத்தினடிப்படையில் நிகழ்ந்ததுதான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பதை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்த இடத்தில் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி அந்நிய சக்திகளின் தலையீடுகளை தடுக்கும் நோக்கில் தான் தற்போது இந்தியா அதிகளவில் இலங்கை அரசியலில் தலையீடு செய்ய முயல்கின்றது. எனின் நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் ஏன் இந்தியா தன்னை பார்வையாளராக சுருக்கிக் கொண்டது? உண்மையில் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிக்கு பின்னர் தான் இலங்கை அரசியலில் அமெரிக்கா, ஐரோப்பிய தலையீடுகள் முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு அதிகரித்தன. அதற்கு முன்னர் இலங்கையின் அரசியல் குறிப்பாக தமிழர்களின் பிரச்சினைகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் தான் அதிகம் ஐரோப்பிய மயப்படுத்தப்பட்டது. ஆனால், நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிக்குப் பின்னர் தான் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் மயப்பட்ட பிரச்சினையாக மாறியது தவிர நோர்வேக்கு பின்னரான இக்காலக்கட்டம் தமிழர் விடுதலை அரசியலின் இராஜதந்திர பரிணாமத்திற்கான காலமாகவும் மாறியது. எனவே, அந்நிய சக்திகளின் தலையீட்டை தடுப்பதுதான் இந்தியாவின் நோக்கமாயின் அது நிச்சயமாக நோர்வே பிரசன்னத்தின் போதே நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஒன்றும் நிகழவில்லை மாறாக பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்ட பின்னர் தான் இந்தியா தனது கைவரிசைகளை காட்ட முற்படுகின்றது. இங்கு நாம் ஒரு தெட்டத் தெளிவான உண்மையை தரிசிக்க முடியும் இலங்கை அரசியலில் தனக்கு சாதகமான சூழல் வரும் வரைக்கும் இந்தியா மிகவும் அமைதியாகக் காத்திருந்திருக்கிறது என்பது தான் அந்த உண்மை.
தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதில் வேறு எவரைக் காட்டிலும் தடையாக இருக்கப் போவது தானே என்பதை இந்தியா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்து வந்திருக்கிறது. மிகவும் சமீபத்தில் கூட அதனை இந்தியா நிரூபித்திருந்தது. 2000 இல் பலாலி இராணுவத் தளத்தை நோக்கி புலிகள் முன்னேறிய போது இந்தியா தனது படைபலத்தைக் காட்டி அச்சுறுத்தியது. பாகிஸ்தான் அரசு இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கு அனுசரணையாக இருந்தது. நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் ஜே.வி.பி.யின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின் பலமாக தொழிற்பட்டது. இந்தியாவின் அரசியல் தலையீட்டை சுருக்கமாகச் சொல்வதானால் தமிழ்த் தேசிய இறைமையை அரசியல் அர்த்தத்தில் இல்லாதொழிப்பதுதான் இந்தியாவின் அனைத்து நிழ்ச்சி நிரல்களினதும் உள்ளடக்கமாக இருக்கின்றது. ஆனால், இதில் இந்தியா தொடர்ந்தும் அவமானகரமான தோல்விகளையே சந்தித்து வருகின்றது. இந்த இடத்தில் அது சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியனாகவும் தொழிற்பட்டு வருகிறது. இதிலுள்ள சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா வேதாளமாகவும் விக்கிரமாதித்தியனாகவும் தொழிற்படுவதுதான்.
நான் மேலே குறிப்பிட்ட இந்தியத் தலையீட்டிற்கான காரணங்கள் பொதுவாக இந்திய நலனை பாதுகாத்தல் என்ற அர்த்தத்திலேயே முதன்மை பெறுகின்றது. ஆனால், இதிலுள்ள முரண்நகை அரசியல் என்னவென்றால் எப்போதுமே இந்தியா தனது பிராந்திய நலன்களை பாது காத்துக் கொள்வதற்கான பலிக்கடாக்களாகக் கையாள்வது ஈழத் தமிழர்களைத் தான். எனவே, மீண்டும் நாம் ஒரு கேள்விக்குச் செல்லலாம். இந்தியா தனது பிராந்திய நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏன் சிங்களத்தை பலிக்கடாவாகக் கருதவில்லை? அது ஏன் மீண்டும் மீண்டும் தமிழ்த் தேசிய இறைமையின் மீதே மேலாதிக்கம் செலுத்த முற்படுகின்றது? இதில் இந்திய கொள்கை வகுப்பு பிரிவினருக்கு இருக்கும் பிரத்தியேக ஈடுபாடு என்ன? சமீபத்தில் இந்தியத் தலையீடு குறித்து இந்தியாவினை எச்சரிக்கும் தொனியில் எழுதியிருந்த முன்னாள் `றோ' அதிகாரியும் உத்திகள் தொடர்பான கற்கைகள் அமைப்பின் இயக்குநருமான இராமன் தற்போதைய இந்தியத் தலையீட்டிற்கான இரண்டு காரணங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். ஒன்று ராஜீவ் கொலையாளிகளுக்குத் தண்டனை அளிக்க வேண்டுமென இந்தியா கருதுகிறது மற்றையது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ந்தும் ஆற்றலுடன் தான் இருக்கிறது என்பதை நிரூபிப்பது. உண்மையில் இராமன் குறிப்பிடும் இந்த இரண்டுமே மிகவும் மேலோட்டமானது என்பதுடன் இந்தியத் தலையீட்டில் மறைந்து கிடக்கும் காரணங்களைத் திட்டமிட்டு மறைக்கும் நோக்கமாகக் கொண்டதாகவும் தெரிகிறது.
ஆரம்பத்தில் இந்தியாவின் இலங்கை அரசியல் மீதான மேலாதிக்கம் என்பது சிங்கள ஆட்சியாளர்களை எப்போதுமே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதும் சிங்கள ஆட்சியாளர்கள் தனது எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பால் செல்லும் போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வலுவான ஆதரவுத் தளமொன்றை இலங்கையில் வைத்திருப்பதும் என்ற இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக இருந்தது. இந்தப் பின்புலத்தில் தான் ஈழப் போராளிக் குழுக்களுக்கு பயிற்சியளித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயன்றது. விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து இயக்கங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் இந்தியா வெற்றியும் பெற்றது. 1987 இல் இந்தியா- இலங்கை ஒப்பந்தம் என்ற பேரில் சட்ட ரீதியாகவே இலங்கை அரசியலில் நேரடியாகத் தலையிடும் அதிகாரத்தைப் பெற்றது. இறுதியில் மிகவும் அவமானகரமான தோல்வி அனுபவங்களுடன் இந்தியா வெளியேறியது. அன்று விடுதலைப் புலிகள் குறித்து மிகவும் சாதாரணமான மதிப்பீட்டைக் கொண்டிருந்த இந்திய உளவுப் பிரிவான `றோ' தனது தோல்வி அனுபவங்களில் புலிகள் தொடர்பான தமது மதிப்பீட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. விடுதலைப் புலிகள் ஒருபோதும் பலம்பொருந்திய இந்தியப் படைகளுடன் மோத முற்படமாட்டார்களென்றும் அவர்களை சாதாரணமாக அச்சுறுத்தி அடிபணிய வைத்துவிடலாம் என்றுமே இந்தியக் கொள்கை வகுப்பினர் கருதியிருந்தனர். இந்த அடிப்படையில்தான் தீட்சித் எனது சுங்கான் பற்றி முடிவதற்குள் உங்களை இருந்த இடம்தெரியாமல் ஆக்கிவிடுவோம் எனப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எச்சரித்தார்.
ஆனால், புலிகளோ இந்தியப் படையுடன் மோதியது மட்டுமல்லாமல் இந்தியாவின் இராணுவ நகர்வுகளின் வரலாற்றிலேயே ஒரு கெரில்லா அணியிடம் படுமோசமான தோல்வியைச் சந்தித்த அனுபவத்தையும் இந்தியப் படைகளுக்கு வழங்கினர். இந்திய ஆய்வாளர்களின் கருத்துப்படி 1962 சீன - இந்திய எல்லைப்புற யுத்தத்திற்கு பின்னர் இந்தியா அடைந்த படுமோசமான வரலாற்றுத் தோல்வி இலங்கையில் புலிகளிடம் தோல்வியடைந்ததுதான் எனக் குறிப்பிடுகின்றனர். எனவே இந்த இடத்தில் மீண்டும் ஒரு கேள்வி தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. தொடர்ந்தும் இந்தியா தனது பிராந்திய மேலாதிக்க அரசியலின் பலிக்கடாக்களாக, ஈழத் தமிழர்களை கையாளமுற்படும் கொள்கை முன்னெடுப்பின் பின்னணியில், அதன் கடந்த கால அவமானகரமான தோல்வி அனுபவம் செல்வாக்கு செலுத்தி வருகின்றதா? அதுவே இந்தியா தொடர்ந்தும் திரைமறைவிலும், பகிரங்கமாகவும் விடுதலைப் புலிகள் பலப்படுவதையும் தமிழர்கள் தமது உச்ச இலக்கை அடைவதையும் எப்பாடுபட்டேனும் தடுத்துவிட கங்கணங்கட்டிக் கொண்டிருப்பதன் பின்னணியா?
நான் இப்படி ஒரு கேள்வியை எழுப்புவதற்கு காரணங்கள் உண்டு. புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையாக இருந்தது இராணுவ வலுச்சமநிலையாகும். ஒருவரை ஒருவர் வெல்ல முடியாதவாறான இராணுவ வலுவைக் கொண்டிக்கின்றனர் என்பதே இராணுவ வலுச்சமநிலையின் அடிப்படையாகும். உண்மையில் ஒப்பந்த காலத்தில் இந்தியா இலங்கையில் அமைதி நிலவ வேண்டுமென்பதில் தான் அக்கறையுடன் இருப்பதுபோன்று பாசாங்கு காட்டினாலும், இராணுவ வலுச்சமநிலை அடிப்படையிலான பேச்சுவார்த்தையை விரும்பியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இராணுவ வலுச்சமநிலை வாதமானது விடுதலை இராணுவத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை மறைமுகமாக வழங்கிவிடுகின்றது. இதனை நிச்சயமாக இந்தியா விரும்பியிருக்காது அதேவேளை ஸ்ரீலங்கா படைத்தரப்புக் கணிப்பாளர்கள் போலல்லாது இந்தியப் புலனாய்வுத்துறையினர் புலிகள் குறித்தும் குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் துல்லியமான சில கணிப்புகளை கொண்டிருப்பர். புலிகள் இதனை ஒரு தந்திரோபாயமாக கைக்கொள்வர் என்ற பயம் இந்தியாவிற்கு நிச்சமாக இருந்திருக்கும். எனவே, இவற்றை கூட்டிக் கழித்துப் பார்த்தால், இலங்கை அரசியலில் மீண்டும் மோதல் சூழல் வலுவடைய வேண்டுமென்பதில் இந்தியா மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தது என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.
இவ்வாறு நான் குறிப்பிடுவதற்கு பிறிதொரு முக்கியமான காரணமும் உண்டு. இந்தியா தன்னைச் சுற்றி இருக்கும் நாடுகளில் சுமுகமான நிலைமை இருக்க வேண்டும் என்பதையே தனது பிராந்திய நலனுக்கு சாதகமான விடயமாகக் குறிப்பிடுவதுண்டு. அதேவேளை, இந்தியா அந்த காரணத்தினையே தன்னை சுற்றி இருக்கும் நாடுகளில் தலையிடுவதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்கின்றது.
(தொடர்ச்சி Sunday Thinakkural 02 ஆம் பக்கம் பார்க்க)