-கலைஞன்-
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கை அரசுக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள இந்திய இடதுசாரிக் கட்சிகள் அது தொடர்பில் கொடுத்து வரும் நெருக்கடிகள், அழுத்தங்களால் இந்திய மத்திய அரசு புதிய சிக்கல்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளால் மத்திய அரசை பாடாய்ப்படுத்தும் இந்த இடது சாரிகள் தற்போது மத்திய அரசுக்கு தீராத தலைவலியாய் இருக்கும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை கையிலெடுத்துள்ளதால் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸுக்கு அடுத்த அடி விழுந்துள்ளது.
இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் நடுநிலையான கருத்துகளை முன்வைத்து வந்த இந்த இடது சாரிகள் தற்போது இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாற்றப்பட வேண்டுமென இந்திய பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளதுடன் மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை அறிக்கை கடந்த புதன்கிழமை இந்திய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதே மத்திய அரசின் இலங்கையுடனான அணுகுமுறை கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டதுடன் அதனை மாற்ற வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா மத்திய அரசை கடுமையாக சாடினார். அவர் தனதுரையில்;
"இலங்கை அரசும் அமெரிக்க அரசும் இராணுவ ஆதரவு தொடர்பிலான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளன. ஆனால் இது குறித்து இந்திய அரசு எவ்விதமான கருத்துகளையும் வெளியிடவில்லை.
அணிசேரா நாடுகளின் தலைமை பொறுப்பு வகித்தது இந்தியா. ஆனால் இப்போது அது எங்கே போனது? அணிசேரா கொள்கை இந்தியாவின் கொள்கையென உங்களால் இப்போது கூறமுடியுமா?
ஆசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா முயற்சிக்கின்றது. அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. இலங்கை நிகழ்வுகள் இப்போது நமக்கு பல விடயங்களை உணர்த்துகின்றன.
இலங்கையில் அரசபடைகளால் சிறுவர்கள் எவ்வாறு படுகொலை செய்யப்படுகின்றனர்? விதவைப் பெண்கள் எப்படி துன்பத்துக்குள்ளாகின்றனர்? தமிழ் மக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றார்கள்? என்று இங்கே பேசுவதற்கு தயக்கப் படுகின்றனர்.
கச்சதீவு ஒப்பந்தம் கவலைக்குரியது. அந்த ஒப்பந்தத்தை மேற் கொண்டது யார்? இது தொடர்பில் மாநில அரசை யாரும் குற்றம் சொல்ல முடியாது? கச்சதீவு ஒப்பந்தத்தை மறுபரீசீலனை செய்ய வேண்டும்.
இலங்கை அரசின் அடாவடித்தனங்களை தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இலங்கை கடல் எல்லையில் கண்ணி வெடிகளை போட்டது யார்? அது தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? எமது நட்பு நாடென கூறப்படும் இலங்கை ஏன் கண்ணி வெடிகளை கடலில் போடுகிறது? இது அனைத்துலக நடைமுறைக்கு உகந்ததா? இதற்கு உங்கள் விளக்கம் என்ன? ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்?
நான் எந்த அமைப்புக்காகவும் ஆதரவாக பேசவில்லை, இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதற்காகவே பேசுகிறேன். இலங்கை பிரச்சினைக்கு இராணுவ தீர்வு சாத்தியமில்லையென எமது வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கிறார். ஆனால் இலங்கையரசுக்கு இராணுவ உதவிகளை அள்ளி வழங்குகின்றீர்கள்? எந்த அரசியல் தீர்வும் ஒருவரிடமும் இல்லாமல் எப்படி அரசியல் தீர்வை காண முடியும்?
இந்திய அமைதிப்படை காலத்தைய 13 ஆவது சரத்து தொடர்பில் இப்போது பேசுகின்றனர். உண்மையில் இந்திய அமைதிப் படைதொடர்பிலான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் 13 ஆவது சரத்து இடம் பெற்றிருக்குமேயானால் அது பற்றிய தற்போதைய நிலைப்பாடு என்ன?
எனவே இலங்கை தொடர்பான மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு மாற்றப்பட வேண்டியது அவசிய"மெனத் தெரிவித்தார்.
இதேபோன்றே தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளும் பாராளுமன்றில் இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்திய அரசின் அணுகுமுறை தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
இலங்கை இராணுவத்தளபதிக்கு இந்தியா அளித்த வரவேற்பு குறித்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஆனால் இது தொடர்பில் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி எந்த விதமான காத்திரமான பதில்களையும் தெரிவிக்க வில்லை. அத்துடன் இலங்கை இராணுவத் தளபதிக்கு வரவேற்பளிக்க வேண்டியது தமது அரசின் கடமை எனக் கூறி இக்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார்.
இலங்கை பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமில்லையென்பதில் தாம் உறுதியாக இருப்பதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். வழக்கமான அவரின் இந்த பல்லவியையே அடுத்தநாள் தனது கடிதமொன்றில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.
இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை அசட்டை செய்து எழுதப்பட்ட பிரதமரின் கடிதத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவது, தாக்கப்படுவது, கடத்தப்படுவது எல்லா வற்றையும் நியாயப்படுத்தி எழுதியிருந்தமை தான் வைகோவை மட்டுமன்றி பலரையும் விசனமடைய வைத்தது.
இலங்கை கடல் எல்லைக்குள் செல்வதாலும் இலங்கை கடற்படையின் எச்சரிக்கைகளை மீறுவதாலுமே தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழக மீனவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதைத் தவிர்த்தால் உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் தவிர்த்துக் கொள்ள முடியுமென பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தனது நாட்டு மீனவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதையே தடுத்து நிறுத்த முடியாது அல்லது தடுத்து நிறுத்த விரும்பாத மத்திய அரசு எவ்வாறு இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் உண்மையான அக்கறையை வெளிப்படுத்துமென நாம் எதிர்பார்க்க முடியும்? ஆனால் இதனை தமிழக அரசு எதிர்பார்ப்பதுதான் வேடிக்கையானது.
தமிழக பட்ஜட்டை கடந்த வியாழக் கிழமை தாக்கல் செய்த தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன், இலங்கை அகதிகளுக்கு தாம் அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர்களின் அகதி முகாம்களை புனரமைப்புச் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கை இனப்பிரச்சினை தீர வேண்டுமென்பதில் தமிழக அரசு அக்கறை கொண்டுள்ளதாகவும் ஆனால் அதனை வலியுறுத்தும் அதிகாரமும் பொறுப்பும் மத்திய அரசிடமேயுள்ளதால் தம்மால் எதுவும் செய்ய முடியாதெனவும் கூறி மத்திய அரசிடமே தமிழரின் தலைவிதி உள்ளதென்பதை தனது மேதாவித்தனம் மூலம் வெளிப்படுத்தினார்.
அற்பசொற்ப விடயங்களுக்கெல்லாம் தனது ஆதரவை விலக்கப் போவதாக கூறி மத்திய அரசை மிரட்டி காரியத்தை சாதிக்கும் கருணாநிதி அரசு, இலங்கைத்தமிழர் விடயத்தில் மட்டும் மத்திய அரசுக்கு அடங்கிய பிள்ளையாக நடப்பதாக நடித்து தமிழகத் தமிழரையும் இலங்கைத் தமிழரையும் ஏமாற்றி வருகிறது.
தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் தளங்கள் உருவாகிவிட்டதாக ஒப்பாரி வைத்த தமிழக காங்கிரஸையே தனது ஒருவரி எச்சரிக்கை மூலம் வாயடைக்க வைத்த கருணாநிதி அதே வரி எச்சரிக்கையை பயன்படுத்தி இலங்கைத் தமிழருக்காக ஒரு சிறு துரும்பையாவது மத்திய அரசைக் கொண்டு நகர்த்தியதில்லை.
தற்போதுள்ள தமிழக அரசியல் நிலைவரப்படி தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் தளங்கள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்தாலும். `இல்லை.. இல்லை அப்படி புலிகளின் தளங்களில் எதுவும் தமிழகத்தில் இல்லை' என்று மத்திய அரசு கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யும் நிலையே உள்ளது. இவ்வாறான நிலை ஒன்று அண்மையில் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
கடந்த வாரம் கேரள மாநிலம் ஆலப்புழைக்கு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு இருப்பதாகவும் இங்கிருந்தே புலிகள் அமைப்புக்கு உதவிகள் சென்றடைவதாகவும் குறிப்பிட்டதுடன் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் அமைப்புகள் மீது நடவடிக்கையெடுக்க தாம் தயாராகி வருவதாகவும் செய்தியாளர்களுக்கு கூறியிருந்தார்.
நாராயணனின் இக் கூற்று தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் கருணாநிதியும் தமிழக பொலிஸ் ஆணையரும் தமிழகத்தில் புலிகளின் ஊடுருவல் இல்லையெனக் கூறிவரும் நிலையில் தமிழகத்திலும் கேரளவிலும் புலிகளின் தளங்கள் உண்டென நாராயணன் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து கருணாநிதியின் கவலையும் கண்டனமும் கலந்து தகவல் டில்லி காங்கிரஸாரை சென்றடைந்தது. நாராயணனின் கருத்து தொடர்பில் கருணாநிதி அதில் சாடிருந்தார். இதனால் தமிழக அரசுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளையும் அதனால் காங்கிரஸ் சந்திக்க வேண்டிய விளைவுகளையும் குறிப்பிட்டிருந்தார்.
உடனடியாகவே இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் தளம் இருப்பதாக நாராயணன் தெரிவிக்கவில்லை. கேரளாவில் புலிகளின் நடமாட்டம் இருக்கின்றதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு அது குறித்து விசாரிக்கப்படுமென்று மட்டுமே நாராயணன் தெரிவித்தார்.
தமிழகத்திலோ வேறு பகுதிகளிலோ விடுதலைப்புலிகளின் தளங்கள் இருப்பதாகவோ அல்லது அவை தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவோ அல்லது புலிகளின் நடமாட்டங்கள், ஊடுருவல்கள் இருப்பதாகவோ நாராயணன் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் புலிகளின் தளங்கள் இருப்பதாக வெளியான செய்திகள் ஊடகங்களின் திரிபு படுத்தப்பட்ட விடயங்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு சிறு விடயங்களுக்கு கூட மத்திய அரசை மிரட்டும் கருணாநிதி அரசு, இலங்கைத் தமிழர் பிரச்சினையை மட்டும் மத்திய அரசின் தலையில் சுமத்தி விட்டு. தனது குடும்ப அரசியலுக்கு பங்கம் வராத வகையில் நடந்து கொள்ளவே விரும்புகிறது.
இதேவேளை இந்திய- இலங்கை அரசுகளின் உறவு ஒருதலைக் காதலாகவேயுள்ளது. இலங்கை அரசு மீது இந்திய அரசு தீராக் காதல் கொண்டுள்ள போதும் இலங்கையரசு இந்திய அரசை வேண்டாப் பொண்டாட்டியாகவே நடத்துகிறது. இராணுவ உதவிகளுக்கு மட்டும் இந்தியாவை நாடும் இலங்கையரசு ஏனையவற்றுக்கு இந்தியாவின் பகைநாடுகளுடனேயே சொந்தம் கொண்டாடுகிறது.
பாகிஸ்தானுடன் சீனாவுடன், அமெரிக்காவுடனென இந்தியாவின் இருப்புக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் நாடுகளுடன் எல்லாம் இலங்கை கூடிக் குலாவுகையில் அதனை வேடிக்கை பார்க்கும் இந்திய அரசு, இலங்கை தமிழருக்கு விடுதலை கிடைத்து விடக் கூடாதென்பதில் மட்டும் உறுதியுடன் செயற்பட்டு வருவது இலங்கையரசுக்கு நன்கு தெரியும்.
நாம் இந்தியாவை எப்படி நடத்தினாலும் அவர்கள் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஒரு போதும் எடுக்க மாட்டார்களென்ற நம்பிக்கையிலேயே இந்திய அரசை இலங்கையரசு தனது தாளத்திற்கேற்ப ஆடவைத்துக் கொண்டிருக்கிறது. தன்னை ஒரு வல்லரசாக மாற்றிக் கொள்ளும் இந்தியாவும் ஒரு குட்டி நாட்டின் தாளத்துக்கேற்ப சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில், இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளையோ வேறு வகை உதவிகளையோ வழங்கக் கூடாதென இந்தியாவில் யார் கத்தினாலும் அது மத்திய அரசின் செவிட்டுக்காதில் கேட்கப்போவதில்லை.
இதேவேளை இலங்கைப் பிரச்சினை தொடர்பான இடது சாரிகளின் தற்போதைய நிலைப்பாடு கூட முற்று முழுதாக தமது அரசியல் நலன் சார்ந்ததாகவேயுள்ளது. இடதுசாரிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியுடன் இருக்கிறது.
அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் ஆட்சியை கவிழ்ப்போம் என்ற இடதுசாரிக்கட்சிகளின் மிரட்டலைக்கூட மத்திய அரசு கவனத்தில் எடுக்கவில்லை. இவ்வாறான நிலையிலேயே மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடிகளை கொடுக்க வேண்டுமென்பதற்காக இலங்கைப் பிரச்சினையை இடதுசாரிகள் தற்போது கையிலெடுத்துள்ளனர்.