Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
சூடுபிடித்துள்ள கிழக்கு மாகாண தேர்தல் களம்
[23 - March - 2008] [Font Size - A - A - A]
-அஜாதசத்ரு-

மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடாத்தி, தமக்குச் சாதகமானதொரு சூழ்

நிலையை உருவாக்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அடுத்த கட்டமாக கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை துரிதமாக நடத்துவதற்கான தீவிர முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான திகதி இம்மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3 ஆம் திகதி வரையாகும் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளிலும் பாரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் பல்வேறு சிரமங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மீண்டுமொரு நெருக்கடியான சூழ்

நிலைக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அப்பிரதேச மக்களுக்கு அமைந்துள்ளது.

நடந்துமுடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் வடக்கு, கிழக்கு பிரதேச மக்களிடையே கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஆகக் கூடுதலான பிரதிநிதிகளைப் பெற்றெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன போட்டியிட முன்வரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில அரசியல் கட்சிகளுக்கு அவ்வாறானதொரு அச்சுறுத்தலான நிலைமை உள்ளதை எவரும் மறுப்பதற்கில்லை.

கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட முன்வரும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுமென்று அரச தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுமென்றே முன்னரும் அரச தரப்பினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவ்வாறானதொரு சூழல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பவ்ரல் அமைப்பு குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பாதுகாப்பற்ற சூழலும் அச்சுறுத்தலும் காணப்படுவதாகக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அதேநேரம், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தனித்துநின்று போட்டியிட்ட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது.

அரசாங்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் கையாட்கள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீது நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தின் போது பல தடவைகள் தாக்குதல்களை நடத்தியது மட்டுமன்றி கொலை மிரட்டல்களையும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வறான நிலைமைகளுக்கு மத்தியிலேயே மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த சூட்டோடு சூடாக கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் போலன்றி அனைத்து அரசியல் கட்சிகளின் பெரும் வியூகங்களுக்கு மத்தியில் பெரும் களமொன்றை எதிர்கொள்ளப்போவதற்கான அரசியல் முனைப்புகளே மேலோங்கிக் காணப்படுகின்றன.

நடந்து முடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்திலும் ஏனைய 8 உள்ளூராட்சி சபைகளிலும் சுயேச்சைக் குழுவாகவும் போட்டியிட்டு பிள்ளையான் (சின்னத்துரை சிவநேசன்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகக் கூடுதலான பிரதிநிதிகளைப் பெற்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மீண்டும் கூட்டாக இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

அதேநேரம், கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடத் தயாரென அரசாங்கம் அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றதைப் போன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதையே காணக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான நிலைமையில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதற்கான பேரம் பேசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

அதேநேரம், இவ்வாறான ஒரு கூட்டு முன்னணிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்க்கொள்ளப்பட்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் கடந்த சில தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு தடவைகள் கலந்துரையாடியுள்ள போதும், எந்தவொரு இறுதி முடிவையும் இதுவரை உத்தியோக பூர்வமாக வெளியிடவில்லை.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாகக் கலந்துரையாடிய பின்னர் அடுத்த வாரம் இறுதித்தீர்மானம் பற்றி அறிவிக்கப்படுமென்று தெரிவித்துள்ளது.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கிற்கு செல்ல முடியாதவாறு தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலான சூழல் உட்பட பல்வேறு நெருக்கடியான நிலைமைகள் என்பன கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்கான ஜனநாயகச் சூழலை இல்லாதொழித்துள்ளதாகவே குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அதேநேரம், நடந்து முடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் இணைந்து போட்டியிட்டு 17 ஆசனங்களைப் பெற்றுள்ள தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர் எல்.எவ்- பத்மநாபா) ஆகிய மூன்று தமிழ்க்கட்சிகளும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் கூட்டாகப் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இதேநேரம், இந்த மூன்று தமிழ் கட்சிகளுடன் கடந்தவாரம் கலந்துரையாடல்களை நடத்திய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி என்பன கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இதேநேரம், சுமார் 22 வருடகாலத்திற்கு மேலாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பிரதான இடத்தைக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினரை அங்கிருந்து வாபஸ்பெறும் நடவடிக்கையானது பெரும் வாக்கு மோசடியொன்றுக்கு வழிவகுக்கும் நடவடிக்கையாகுமென்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டிள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறிருப்பினும் கிழக்கு மாகாண

சபைத் தேர்தலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நடவடிக்கையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்காது என்பதையே தொடரும் ஒவ்வொரு சம்பவங்களும் எடுத்துக்காட்டுகின்றன.

Email this page Your Opinion Print this page
கிழக்கில் தேர்தல் வெற்றிக்காக வடக்கில் தேவைப்படும் இராணுவ வெற்றி
சூடுபிடித்துள்ள கிழக்கு மாகாண தேர்தல் களம்
ஈழப்பிரச்சினையை கையிலெடுத்துள்ள இந்திய இடதுசாரிக் கட்சிகள்!
மீண்டும் இந்தியா
கிழக்கு தேர்தல்: முஸ்லிம்களின் நிலை என்ன?
தமிழ்க் கிராமவாசிகளுக்கு புதிய அச்சுறுத்தல்!
கொசோவோவின் சுதந்திரப் பிரகடனமும் ஈழத் தமிழர்களின் போராட்டமும்!
அமெரிக்க தேர்தல் களத்தில் ஒசாமாவும் ஒபாமாவும்
ஆர்தர் சி.கிளார்க்: நிறைவேறாத 3 கனவுகள்
சுதந்திர பலஸ்தீனத்துக்கு தடையாக இருப்பது எது?
தமிழ்த் திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய ரகுவரனின் மரணம்
வன்னி மகாநாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com