-விதுரன்-
வடக்கே கடும் மழைபெய்து வருவதால் கடந்தவாரம் அங்கு பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடும் மழையால் அனைத்து படை நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ள போதும் அங்கு தினமும் கடும் சமர் நடைபெறுவது போன்றும் விடுதலைப் புலிகளுக்கு பலத்த உயிர்ச் சேதங்கள் ஏற்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன.
கடும் மழையைத் தொடர்ந்து அங்கு வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையில் படையினர் தொடர்ச்சியாக கடுமையான ஆட்லறிஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதேபோன்ற நிலையில்தான் வன்னிக் கள முனையில் விடுதலைப் புலிகளுமுள்ளனர். தற்காப்புக்காக ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்களையே நடத்தி வருவதாக படைத்தரப்பு கூறுகின்றது.
மடுவையும் அடம்பனையும் இலக்கு வைத்து முன்னேற முயலும் படையினருக்கு பலத்த மழை கடும் சவாலாகவேயுள்ளது. காலம் பிந்தி வடக்கே அடை மழை பெய்கிறது. கடந்த வருட பிற்பகுதில் பெய்திருக்க வேண்டிய மழை இவ்வருட முற்பகுதியில் கொட்டுகிறது. எனினும் அடை மழைக்கு மத்தியிலும் தங்கள் படையணிகளால் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென படைத்தரப்பு கூறுகிறது. எவ்வாறான கால நிலையிலும் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளும் விதத்தில் படை அதிகாரிகளும் படையினரும் பயிற்சிகளைப் பெற்றிருப்பதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
தற்போதைய இந்தக்கால நிலையானதும் அங்கு இடம்பெறும் படை நடவடிக்கையை எவ்விதத்திலும் பாதிக்கமாட்டாதென இராணுவத் தளபதி கூறியுள்ள போதிலும், படையினரால் வன்னிக்கள முனையில் எந்தவொரு பகுதியிலும் முன்நகர்வு முயற்சி எதனையும் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் வழமைபோல் புலிகளின் இழப்பு குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அவர்கள் தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றனர். மோதல்கள் நடைபெறாது இரு தரப்பும் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தி தற்காப்பு நிலைகளை மேற்கொள்கையில் அங்கு தொடர்ந்தும் கடும் சமர் நடைபெறுவது போன்றும் புலிகள் பலத்த இழப்புக்களை சந்தித்து வருவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் தென்பகுதி மக்களை `திருப்தி நிலையில்' வைத்திருக்க அரசு முயல்கிறது.
வடக்கே வவுனியா,மன்னார், மணலாறு மற்றும் யாழ்.குடா களமுனைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது மன்னார் களமுனையிலேயே கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் களமுனைதான் படையினருக்கு சற்று சாதகமாயுள்ளது. இதனால் மடுவையும் அடம்பனையும் கைப்பற்றி அதன் மூலம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பெரும் பிரசாரங்களை மேற்கொள்ள அரசு தீவிரமாக முனைகிறது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன் இவ்விரு பகுதிகளையும் கைப்பற்றி விட வேண்டுமென்பதில் அரசு தீவிர அக்கறை காட்டுகிறது.
மன்னாரில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கமைய மடுவை படையினர் சுற்றிவளைத்திருப்பதாக படைத்தரப்பு கூறுகிறது. முன்னேறி வரும் படையணிகள் மடுத்தேவாலயத்தை நோக்கி முக்கியமான மூன்று திசைகளில் நெருங்கிவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மடுதேவாலய பகுதியிலிருந்து புலிகளைத் தனிமைப்படுத்துவதற்காக நேரடியாகத் தேவாலயப் பகுதி நோக்கி முன்நகராது தேவாலயத்தை அடுத்திருக்கும் பாலம்பிட்டி,பெரிய பண்டிவிரிச்சான், முருங்கன் மற்றும் மாந்தைக்கு மேற்கே நகர்ந்து தேவாலய பகுதியை படையினர் சூழ்ந்து வருவதால் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் மோதல்கள் எதுவும் நடைபெறாது புலிகளை அங்கிருந்து பின்வாங்க வைத்து தேவாலயத்தையம் அதனையண்டிய பகுதிகளையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென படைத்தரப்பு கூறுகிறது.
தற்போது தினமும் படையினர் மேற்கொள்ளும் முன்நகர்வுகள் மூலம் மடுத்தேவாலயத்தை அண்டிய, அடம்பனுக்கு கிழக்கேயும் பாலம்பிட்டிக்கும் இடையிலான புலிகளின் விநியோகப் பாதையை படையினர் முழுமையாகத் தடை செய்துவிட்டதால் புலிகள் தொடர்ந்தும் அங்கிருக்க முடியாது வெளியேறும் நிலையை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மடுத் தேவாலயப் பகுதியை நோக்கி படையினர் மேலும் மேலும் முன்னேறும் போது அப்பகுதிகளில் மோதல்கள் எதுவும் இடம்பெறாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் படைத்தரப்பு கூறுகின்றது.
மன்னார் களமுனையில் நிலைமைகள் இவ்வாறிருப்பதாக படைத்தரப்பு கூறினாலும் அப்பகுதியில் கடுமையாகப் பெய்து வரும் அடை மழையால் படை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. முக்கிய வீதிகள் தொடர்ந்தும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருப்பதால் யுத்த டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை பிரதான வீதிகளூடாக நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. வீதிகளை விட்டு இவை தரைக்கு இறங்கினால் முன்நகர முடியாதளவுக்கு நிலம் சேறும் சகதியுமாயுள்ளது. இது படையினருக்கு தொடர்ந்தும் நெருக்கடியாகவேயுள்ளது.
மேலும் மன்னார் களமுனையில் ஏற்பட்டு வரும் அதிகளவு இழப்புகளும் படையினரின் மனோ நிலையை பெரிதும் பாதித்து வருகிறது. தொடர்ந்தும் ஒரு சில படையணிகளே இந்தக் களமுனையில் போரிட்டுக் கொண்டிருப்பதால் அவை பெரிதும் களைப்படைந்து விட்டன. எதிர்பார்த்தது போல் அல்லது படைத்தலைமைகள் கூறியது போல் யுத்தம் இல்லையென்பது போரிடும் படையினருக்கு தெரியத்தொடங்கியுள்ளது.இழப்பும், களைப்பும் அவர்களைப் பெரிதும் சோர்வடையச் செய்துள்ளதுடன் போர் இழுத்தடிக்கப்பட்டு நீண்டு கொண்டேயிருப்பதால் அவர்களது மனோநிலை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமை மேலும் தொடருமானால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் சூழ்நிலை தோன்றிவிடுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வன்னிக் களமுனையில் படையினரின் இன்றைய நிலைமைகள் குறித்து ஓய்வுபெற்ற பிரதி இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா கணிப்பீடு செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை `சண்டே லீடர்' ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய நீண்டபேட்டியில் படையினரின் போரிடும் ஆற்றல் மழுங்கி வருவது போல் தென்படுவதாக தெரிவித்துள்ளார். நீண்ட நாள் போர், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலைமை, எதிர்பாராதளவுக்கு ஏற்படும் இழப்புகள், தொடர்ந்தும் ஒரே படையணிகளே மோதல்களில் ஈடுபடுதல், போரின் முடிவு குறித்து சிரேஷ்ட படை அதிகாரிகள் கூறிய காலக்கெடு மேலும் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றமை அவர்களை பெரிதும் களைப்புறவும் மனச் சோர்வுறவும் செய்து வருவது குறித்து அவர் எச்சரித்துள்ளார்.
அவரது இந்த எச்சரிக்கை மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. இலங்கை போர் வரலாற்றில் மேஜனர் ஜெனரல் ஜனக பெரேராவின் பங்களிப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ்.குடா நாட்டையும் கிளிநொச்சியையும் படையினர் கைப்பற்றுவதற்கு மிக முக்கியமானவர் இவரே. 1995 இல் மணலாறில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதலை ஒரு சில மணிநேரத்திற்குள் முறியடித்து புலிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியதும் இவரே. 2000 ஆம் ஆண்டில் யாழ்.குடாநாடு புலிகளின் கையில் வீழும் நிலை உருவான போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக இவரே அங்கு அனுப்பப்பட்டார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்ற காரணத்தால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவால் பெரிதும் ஓரங்கட்டப்பட்டு பின்னர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார்.
இந்தளவிற்கு இலங்கை இராணுவத்தில் அனுபவமும் ஆற்றலுமிக்க படைத்தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவின் பேட்டி, இனிவரப்போகும் பெரும் மோதல்கள் மற்றும் கடும் சமர்களில் படையினரின் நிலைமை எவ்வாறிருக்கப் போகிறதென்பதை கோடிட்டு காட்டியுள்ளது. வன்னிக் களமுனையில் புலிகளுக்கு தற்போது ஏற்படும் இழப்புகளென அரசும் படைத்தரப்பும் கூறுவது மிகவும் மிகைப்படுத்தப்பட்தென்பதை அவர் நாசுக்காகத் தெரிவித்துள்ளார்.
`படையினர் கூறும் தகவல் படி பார்த்தால் கடந்த இரு வருடத்திற்கும் மேலான போரில் 7000 வரையான புலிகள் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அது உண்மையானால் இன்னும் ஆயிரம் புலிகளே எஞ்சியிருப்பர். அப்படியானால் மிக விரைவில் போரை முடித்துவிடலாம்' என அவர் கூறியிருப்பதானது எந்தளவிற்கு களநிலைமைகள் குறித்து அரசும் படைத்தரப்பும் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கி வருகின்றன என்பதைக் காட்டுகிறது. அத்துடன் இந்த வருட நடுப்பகுதிக்குள் போர் முடிவடைந்துவிடுமெனக் கூறிவந்த அரசும் இராணுவத் தலைமைப்பீடமும், தற்போது இந்தப் போர் முடிவடைய மேலும் ஒருவருடமெடுக்குமெனக் கூறிவருவது படையினரின் மனோநிலையை வெகுவாகப் பாதித்து அவர்களது போரிடும் ஆற்றலை வெகுவாக மழுங்கடித்து விடுமென்றும் எச்சரித்துள்ளார்.
தற்போதைய நிலையில் போர் இழுபட்டால் அது படையினரை வெகுவாகப் பாதித்துவிடுமெனக் கூறும் அவர், யுத்த முனையில் இழப்புக்கள் அதிகரிக்கும் போது தப்பியோடும் படையினரின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரிக்குமெனக் கூறியுள்ளார். அத்துடன் வன்னியில் பல களமுனைகள் திறக்கப்பட்டிருந்தாலும் விடுதலைப் புலிகளின் வலிமை மிக்க படையணிகள் இதுவரை குதிக்கவில்லையென்பதே தனது கருத்தெனக் கூறியிருப்பதானது, புலிகளின் வலிமையான படையணிகள் போரில் குதித்தால் நிலைமை எவ்வாறிருக்குமென்பதை அவர் மறைமுகமாக எச்சரிக்க முயல்வதை நன்கு அவதானிக்க வேண்டும்.
வன்னிக்கள முனையில் தற்போது படையினர் மேற்கொண்டு வரும் முன்நகர்வு முயற்சிகளுக்கெதிராக புலிகளின் மகளிர் படையணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மன்னார் களமுனையில், குறிப்பாக மடுவுக்கான சமரில் எதிர்த்தாக்குதலில் புலிகளின் மகளிர் படையணியே பெரிதும் ஈடுபட்டுள்ளது. இந்தச் சமரை தாங்கள் எப்போதோ முடித்து விடுவோமெனக் கூறியே படையினர் இங்கு களமிறங்கினர். ஆனால் ஒருவருடம் முடிவடைந்த நிலையிலும் படையினரால் இன்னமும் மடுவை நெருங்க முடியவில்லையென்றால் இந்தக் களமுனையில் மகளிர் படையணியின் பங்களிப்பு எந்தளவுக்குள்ளதென்பதை உணர முடியும்.
வன்னிக்களமுனையில் மன்னாரில்தான் படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளனர். புதிய படையணிகளை இங்கு கொண்டு வந்து களமிறக்குமளவிற்கு படையினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. வன்னிக் களமுனையில் படையினருக்கு ஏற்படும் இழப்புக்களின் அடிப்படையிலேயே புலிகளின் இழப்புக்கள் குறித்து பல மடங்காக தகவல்கள் வெளியிடப்படுகிறது. படையினரதும் தென்பகுதி மக்களதும் மனோநிலையைப் பாதிக்காத விதத்திலும் யுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடைபெறுகிறதென்றதொரு தோற்றப்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கிலேயே களமுனைத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
மன்னார் களமுனை இவ்வாறிருக்கையில் மணலாறில் படையினரின் முன்நகர்வு முயற்சிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. மடுவை நோக்கி 57 ஆவது படையணியும் அடம்பனை நோக்கி 58 ஆவது படையணியும் நகர்கையில் மணலாறிலிருந்து முல்லைத்தீவு நோக்கிய நகர்வு முயற்சியில் 59 ஆவது படையணி ஈடுபட்டுள்ளது.
மன்னாரைப் போன்று இந்தக் களமுனை பொட்டல் வெளிகளைக் கொண்டதல்ல. வன்னியில் மன்னார் களமுனை தான் படையினருக்கு வாய்ப்பாக உள்ளது. வவுனியா மற்றும் மணலாறு களமுனை அடர்ந்த காடுகளைக் கொண்டதென்பதால் இந்த முனைகளில் படைநகர்வுகள் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை.
இதனால்தான் மணலாறு கள முனையில் 59 ஆவது படையணிக்கு ஆதரவாக விசேட அதிரடிப்படையினரையும் களமிறக்க அரசு முயல்கிறது. கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 4000 இற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் வாபஸ் பெறப்பட்டு மணலாறு போர்முனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களென்பதால் மணலாறு காட்டுப் பகுதியில் இவர்களால் சிறப்பாகச் செயற்பட முடியுமென அரசு கருதுகிறது. இதனால், அம்பாறையிலிருந்து அதிரடிப் படையினர் மணலாறுக்கு மாற்றப்பட்டு முல்லைத்தீவு நோக்கிய படைநகர்வை துரிதப்படுத்த அரசு முயல்கிறது.
இந்த நிலையிலேயே முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் நேற்று அதிகாலை 2.10 மணியளவில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகொன்று கடற்கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் அழிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நோக்கிய படைநகர்வு இலகுவானதல்ல என்பதை கடற்புலிகளின் இந்தத் தாக்குதல் காண்பிக்கிறது. மணலாறு பகுதியில் இடம்பெறும் படைநகர்வுக்கு ஆதரவளிக்கும் கடற்படையினருக்கு இது பலத்த அடியாகும்.
டோரா பீரங்கிப் படகிலிருந்த 16 பேரில் அதிகாரியொருவர் உட்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறியுள்ளது.
(தொடர்ச்சி Sunday Thinakkural பாதுகாப்பு நிலைவரம் பக்கம் பார்க்க)