Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
நீர் நெருக்கடி குறித்து விழிப்புணர்வு அவசியம்
[23 - March - 2008] [Font Size - A - A - A]
மோசமான சுகாதாரச் சீர்கேட்டினால் ஒவ்வொரு 20 செக்கன்களுக்கும் ஒரு பிள்ளை உலகில் மரணமடைந்து கொண்டிருப்பதாகவும் 260 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் அதிர்ச்சியான தகவலொன்றை வெளியிட்டிருக்கிறார். சர்வதேச நீர் தினத்தை உலக நாடுகள் நேற்று சனிக்கிழமை அனுஷ்டித்தன. இதனை முன்னிட்டு விடுத்த செய்தியிலேயே ஐ.நா. செயலாளர் நாயகத்திடமிருந்து மனித குலம் வேதனைப்படும் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதாரச் சீர்கேட்டால் 15 இலட்சம் இளைய சமூகத்தின் ஆயுளும் குறுகி விடுகின்றது என்றும் பான் கி மூன் தெரிவித்துள்ளதுடன் உலகில் மூன்றுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் சுகாதாரச் சீர்கேடு பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சுத்தமான குடிநீரின்மையும் சுகாதார வசதிகள் போதாமல் இருப்பதும் மோசமான நிலைமைக்கு வழிவகுப்பதுடன் உலகளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையானோர் மரணமடைவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. மோசமான சுகாதாரச் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ்ந்தாலும் ஆரோக்கியமான வாழ்வை நடத்த முடியாதிருக்கிறது. பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள் சுகாதாரச் சீர்கேட்டால் ஏற்பட்ட நோய்களால் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க முடியாத நிலையும் காணப்படும் அதேசமயம் பராயமடைந்தோர் ஆக்கபூர்வமான பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள முடியாதவர்களாகவும் உள்ளனர். சனத்தொகைப் பெருக்கம், அதிகரித்துவரும் வறுமை, சுகாதாரச் சீர்கேட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கங்கள் போதியளவுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றமை என்பன இந்தச் சவாலை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாமல் இருப்பதற்கான தடைக் கற்களாக உள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை நீரை வீண் விரயம் செய்வதால் எதிர்காலத்தில் பாரிய நீர்த் தட்டுப்பாடு ஏற்படுமென்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுத்தமான நீரை வழங்குவதற்கு அலகொன்றுக்கு 20 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாகவும் ஆனால் அலகொன்று 14 ரூபாவுக்கே நீர் விநியோகிக்கப்படுவதாகவும் சர்வதேச நீர்த் தினத்தை முன்னிட்டு நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கூறியிருக்கிறார். இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 39.1 சதவீதமான நீர் விரயமாக்கப்படுவதாக நீர் விநியோகத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கவலை தெரிவிப்பதுடன் கொழும்பு மாவட்டத்தில் வினைத்திறனுடன் கூடிய நீர் முகாமைத்துவத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். 2015 இல் 210 கோடி மக்கள் சுத்தமான நீர்த்தட்டுப்பாட்டால் அவதியுறும் நிலைமை ஏற்படுமென ஐ.நா. எச்சரித்திருக்கின்றது. அசுத்தமான நீரைப் பருகுவதால் வாந்திபேதி, வயிற்றுழைவு, நிமோனியா, போஷாக்கின்மை போன்றவை ஏற்படுகின்றன.

நீர் அசுத்தமடைவதற்குப் பிரதான காரணமாக கழிவு அகற்றும் பணி முறையாக இடம்பெறாமலிருப்பதாகும். வருடாந்தம் 200 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான மனிதக் கழிவுகள் முறையாக சேகரிக்கப்பட்டு சுகாதாரமான முறையில் சுற்றாடலுக்குக் கேடு விளைவிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே சூழல் மோசமாகப் பாதிப்படையவும் நோய்கள் பரவவும் பிரதான காரணமாக அமைகிறது. உலகிலுள்ள ஆஸ்பத்திரிகளிலுள்ள கட்டில்களில் அரைவாசித் தொகையானது அசுத்தமான நீரால் ஏற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோரால் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரை குறிப்பாக ஆறுகள், குளங்கள் தாராளமாக உள்ளன. மழைநீரை தேக்கி வைக்கக்கூடிய ஏற்பாடுகளும் பண்டைக்காலம் தொட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நகரப்புறங்களில் குறிப்பாக தலைநகர் கொழும்பு போன்ற பகுதிகளில் வாழும் மக்களே சுத்தமான குடிநீர் கிடைப்பது தொடர்பாக பாதிப்படைகின்றனர். அதிலும் சேரிப்புறங்களில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரின்றி பாதிப்படைகின்றனர். அத்துடன், நீரை விரயமாக்காமலிருப்பது தொடர்பாகவும் மாசடையாமல் வைத்திருப்பது குறித்தும் போதிய விழிப்புணர்வு இலங்கையரைப் பொறுத்தவரை அருகியே காணப்படுகின்றது.

நீர் வளங்களை நிர்வகிக்கும் சிறந்த வழிமுறைகளை அரசாங்கம் கண்டறிவதுடன் நீர் மாசடைவதை தடுத்துநிறுத்துவதற்குரிய கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இயற்கை வளமாக நீர் இருப்பதால் அதனால் ஏற்படும் பிரச்சினையின் தாக்கம் பற்றி எவரும் அதிகளவுக்கு சிந்திப்பதில்லை. ஆனால், அண்மைக் காலமாக ஐ.நா. முகவரமைப்புகள் இந்தப் பிரச்சினை தொடர்பாக அதிகளவுக்கு முன்னெச்சரிக்கை விடுத்து வருகின்றன. சுத்தமான நீரும் ஆரோக்கியமும் மனித மேம்பாட்டு முயற்சிகளுக்கு மிகவும் அத்தியாவசியமானவையென்பதை யாவருமே உணர்ந்துகொள்வதுடன் இந்த விடயம் தொடர்பாக அதிக கரிசனை கொள்ள வேண்டியது சகலரினதும் கடப்பாடாகும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com