*அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன்: திபெத்தில் கலவரம் நடைபெற்று வருவதன் காரணமாக சீன ஒலிம்பிக் போட்டியை புஷ் புறக்கணிக்கமாட்டார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
`உலகின் கூரை' என்று அழைக்கப்படும் திபெத் தனி நாடாக இருந்து வந்தது. அந்நாட்டை சீனா பல ஆண்டுகளுக்கு முன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதுமுதல் திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவுடன் திபெத் இணைக்கப்பட்டதை எதிர்த்து நடந்த புரட்சி தோல்வி அடைந்த தினம் கடந்த 14 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது திபெத் தலைநகர் லாசாவில் சீனாவுக்கு எதிராக கலவரம் வெடித்தது. பின்னர் அருகில் உள்ள கான்சு, சிச்சுவான் மாகாணங்களுக்கும் கலவரம் பரவியது. கான்சுவில் உள்ள ஷியாகே, மாகு, லூகு, ஜோனே போன்ற நகரங்களில் கடைகள், அரசு கட்டிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
பல இடங்களில் கலவரக்காரர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் பலியானார்கள். மேலும், திபெத்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களுக்கு சீனா கூடுதல் இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது.
வன்முறைச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துவிட்டதாக சீனா கூறி உள்ளது. ஆனால், 100க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கொல்லப்பட்டதாக திபெத் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சீனாவில் அடுத்த ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதைப் புறக்கணிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், அந்தக் கோரிக்கையை புஷ் நிராகரித்துவிட்டார். திபெத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஜனாதிபதியின் பயணத்தைப் பாதிக்காது என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டானா பெரினோ கூறினார்.
ஒலிம்பிக் என்பது அரசியல் நிகழ்ச்சி அல்ல. விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதற்கான ஒரு போட்டி என்பதுதான் புஷ்ஷுன் நிலை என்று அவர் தெரிவித்தார்.
திபெத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பற்றி அமெரிக்கா பெரிதும் கவலை அடைந்துள்ளது. இதுபற்றி சீன ஜனாதிபதியிடம் புஷ் தெளிவாகப் பேசி இருக்கிறார் என்றார் அவர்.
அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் சீன் மக்கோர்மெக்கும் இதே கருத்தை எதிரொலித்தார்.
தலாய் லாமாவை அமைதியின் மனிதராக நாங்கள் நம்புகிறோம். அவருடன் சீன அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கலவரத்தை ஒடுக்கும் பிரச்சினையில் சீன அரசு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொன்டலீசா ரைஸ், சீன வெளியுறவு அமைச்சர் யாங்கூடனுடன் பேசினார். திபெத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கவலைப்படுவதாகவும் சீன அரசு போராட்டக்காரர்கள் மீது பொறுமை காட்ட வேண்டும் என்று அவர் அப்போது கூறினார்.
தலாய் லாமாவுடன் பேசுமாறு பல ஆண்டுகளாக சீனாவை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அவர் திபெத்துக்கு சுதந்திரம் கோரவில்லை. கலாசார தன்னாட்சி அதிகாரம்தான் கேட்கிறார். எனினும், இப்பிரச்சினையில் அனைத்து தரப்பினரும் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென்று கொண்டலீசா அப்போது கூறினார்.
இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்ட திபெத்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை சீன அரசு அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் அபா கவுன்டியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 திபெத்தியர்கள் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர் என்று சீன அரசு கூறி உள்ளது.