*நாளை கொழும்பில் சந்திப்பு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் ஆளும் பங்காளி கட்சிகளின் முக்கிய கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜே.வி.பி.யை இணைக்கும் முயற்சி தோல்வி கண்ட நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் விவகாரம் சூடு பிடித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வகிக்கும் 3 முஸ்லிம் கட்சிகள் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரே நிறுத்தப்பட வேண்டுமென வாதிடுவதுடன், இதன் மூலமே முஸ்லிம்களின் வாக்குகளை அதிகளவு பெறமுடியுமெனவும் வலியுறுத்துகின்றன.
அத்துடன், ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணி அமைப்பதற்கும் முஸ்லிம் கட்சிகள் உடன்பட மறுக்கின்றன.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் பிள்ளையான் இணையத்தளம் ஒன்றிற்கு கிழக்கு தேர்தலில் தமிழர் ஒருவரே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும், அவரே முதலமைச்சராகவும் தெரிவாக வேண்டும், கிழக்கில் தமிழர்கள் அதிகமாக வாழுவதால் தமிழரே முதலமைச்சராக வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதலமைச்சர் தெரிவு விவகாரம் இனரீதியாக பிளவுபட்டு இழுபறி நிலை அதிகரித்துள்ளது.
நாளை திங்கட்கிழமை ஆளும் பங்காளி கட்சிகளின் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாமென அறிய வருகிறது.
இழுபறி நிலையைத் தவிர்ப்பதற்காக முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்த பெயர் விபரங்களை ஆளும் தரப்பு காலம் பிந்தி அறவிக்கலாம். அல்லது தேர்தலில் வெற்றியீட்டினால் கூடிய வாக்குகளைப் பெற்றவர்ளுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கலாமென்ற தீர்மானத்திற்கு வரலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.